தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்

IMG_20180822_1315044

பகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக் காட்டி மாறாத உண்மை என்று எதுவுமில்லை என்று சொல்ல வந்த “பகுத்தறிவுப் பயங்கரங்கள்” என்ற பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையை சாக்காக வைத்துக் கொண்டு மரபுகளோடு கட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்ட ஒரு கூட்டம் உருவானது உலகெங்கும். இங்கே தமிழகத்தில் உருவான அக்கூட்டத்தின் பதாகை சுதந்திர போராட்ட காலத்தில் கருக்கொண்ட ‘தனித்தமிழ்’ எனும் இயக்கத்திலிருந்து உருவான ‘தமிழ்தேசியம்’.

‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் ‘ என்ற தலைப்பிட்ட ராஜ் கௌதமன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு இந்த திடீர் தமிழ் காதலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று. படித்தவுடனேயே மனதில் எழுந்து வரிகொண்டதுதான் இங்குள்ள முதல் பத்தி.

ராஜ் கௌதமன் ஒரு இடதுசாரி சிந்தனையாளர், மார்க்ஸிய கோட்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சி கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வழக்கம் போல் அறிவார்ந்தவர்களும், நடுநிலையாளர்களும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத தமிழ் இலக்கியச் சூழலில் இவருடைய ஆக்கங்களும் தீவிர இலக்கியவாதிகளைத் தாண்டிப் பரிட்சயமாகவில்லை. அதிலும் இப்போதிருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இலக்கியத்தின் நுழைவு வாயிலான வணிக எழுத்துக்களின் (சுஜாதா போன்றவர்களின் ஆக்கங்கள்) வாசிப்பையும் காவு கொண்டபிறகு ராஜ்கௌதமன் போன்றவர்களெல்லாம் வாசிக்கப்படுவது சாத்தியமேயில்லாத ஒன்று.

ஆனால், இவர் போன்றவர்களை கண்டெடுத்து, உரிய அங்கீகாரம் பெறவைக்கும் வேலையை கடும் சிரத்தையுடன் ஆண்டுதோறும் செய்து வருகிறது புகழ்பெற்ற சமகால எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். வருடந்தோறும் ஒரு இலக்கிய ஆளுமையை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த இலக்கிய வாசகர்களைக் கொண்ட இவ்விலக்கிய வட்டத்தின் இந்த வருடத் தேர்வுதான் ராஜ்கௌதமன்.

தமிழில் எழுதும் இவர்போன்ற மார்க்ஸியத்தின் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையும், சமூக பரிணாம வளர்ச்சியை அறிவுப்பூர்வமாக ஆராய உதவும் அதன் கோட்பாடுகளையும் உணர்ந்தவர்கள் தமிழ் சமூகத்திற்கான பெரும் கொடை. அதிலும் கார்ல் மார்க்ஸை வறட்டு பொருள் முதல்வாதியாக; அசட்டு நாத்திகவாதியாக சுருக்கிக் கொண்டிருக்கும் போலி முற்போக்குவாதிகளும், இலக்கியத்தை கழகங்களின் வெறும் பிரச்சார குரலாக மாற்றியி்ருக்கும் போலி இலக்கியவாதிகளும் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவர் மற்றும் கோவை ஞானி போன்ற தமிழ் மார்க்ஸியர்கள் கலங்கரை விளக்கம் போன்றவர்கள் என்பதை மறுக்கமுடியாது.

இப்புத்தகத்திலுள்ள சுத்த தமிழ் நேயம் என்ற தலைப்பிட்ட கட்டுரை 80களில் தமிழ்தேசியமாக இருந்து தற்போது தமிழ் ஃபாசிசமாக மாறிக்கொண்டிருக்கும் இயக்கங்களின் தோற்றுவாயை அலசியிருக்கிறது.

இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் சர்வவல்லமை கொண்ட வெள்ளையர்களின் ஆயுதமான ஜனநாயகம், கல்வி போன்றவற்றிற்கு எதிராக போராடவேண்டியதற்குத் தேவையான வலிமையை தங்களுடைய மரபை மீட்டெடுப்பதன் மூலம் பெறமுடியுமென்றுணர்ந்த ஒரு பிரிவினர், மரபிலக்கியங்களை மறுஆக்கம் செயவது; அதன் மூலம் மக்களிடம் பழந் தமிழர்களின் வளமான சிந்தனையை கொண்டு சேர்ப்பது என களத்திலிருந்தனர். அவரகளில் முக்கியமானவர்களாக இக்கட்டுரை குறிப்பிடுவது பாரதி, திரு.வி.க, வ.உ.சி, வ.வே.சு மற்றும் இராஜாஜி போன்றோரை. இவர்கள் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக மாறியது காந்தியின் வருகைக்கு பின்புதான். தேசிய விடுதலையே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கும், இலக்கியச் செழுமைக்கும் இவ்வியக்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் ராஜ் கௌதமன்.

அதேகாலகட்டத்தில், பிராமண சமூகங்களின் மேட்டிமைவாத போக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் கையிலெடுத்ததும் தமிழைத்தான். இவர்கள் தங்கள் மரபுகளை மீட்டெடுப்பதை விட அதன் பழம்பெருமைகளில் தஞ்சம் புகுவதையே நாடியிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை பழங்கால தமிழ் சமூகத்திலேயே அனைத்து சாதனைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என நிறை கொண்டு இறந்தொழிந்த காலங்களில் மட்டுமே வாழ்பவர்களாக இருந்தார்கள். சமகாலத்தில் ஏற்படும் வளர்ச்சியில் பங்கேற்காமல், அதிலிருந்து தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் தனக்குள் சுருங்கிப் போன ரஷ்ய ஜார் குடும்பங்கள் மற்றும் ஆங்கில பிரபுக்களின் ஃபிரெஞ்ச் மொழி போன்றோ அல்லது பிராமண மேட்டிமைவாதிகளின் சமஸ்கிருதம் போன்றோ தமிழையும் உருவாக்க விரும்பினார்கள் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த தூயதமிழ்வாதிகள். இவர்களிடமிருந்தது தாய்மொழிப்பற்றல்ல; வெறும் தனித்தமிழ்ப்பற்றே என்கிறார் ராஜ் கௌதமன். ‘தமிழ்தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளம்தான் இந்த ‘தனித்தமிழ்’ பற்று. ‘ஒன்றின் ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் இடதுசாரி முகம் காட்டும் வலதுசாரி குணமுடையது’ இவ்வியக்கம் என்கிறார்.

பிறமொழிகளுடன் உறவாடாத எதுவும் மேட்டிமைவாதிகளின் மொழியாகத் தேங்கி சமஸ்கிருதம் போல் அழியுமேயொழிய ஆங்கிலம்போல் மக்கள் மொழியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இவர்கள் உணரவில்லையா? இல்லை இவர்கள் பிராமண உயர்ஜாதியினருக்கு எதிராக தமிழைக் கையில் எடுத்ததன் நோக்கம் தங்களை இன்னொருவகையான மேட்டிமைவாதிகளாக ஆக்கிக் கொள்வதற்குத்தானா? என்ற கேள்வியே இக்கட்டுரையைப் படித்ததும் என்னுள் எழுந்தது. மேலும் தலித் சிந்தனையாளரான ராஜ்கௌதமன் இக்கட்டுரையில் கூறுவதைப்போல இவர்கள் ஏறிநிற்பதற்குத் தோள் கொடுத்த பிற சாதி இந்துக்களின் பிரதிநிதியாக தங்களை உருவகித்து மட்டுமே கொண்டார்களேயொழிய, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உயர்வில் அக்கறை கொண்டார்களா என்பது கேள்விக்குறியே.

இந்த தூயத்தமிழ் இயக்கமே இராபர்ட் கால்டுவெல்லின் ஆர்ய திராவிட உருவாக்கத்தால் தியாகராஜ செட்டியார் போன்றவர்களால் நீதிக்கட்சியாக உருமாறி பெரியாரின் வழியாக திராவிடக் கழகமாக எழுந்து நின்றது. மேலும், இவ்வியக்கம் பிராமண எதிர்ப்பை ஆத்திக எதிர்ப்பு என்று மாற்றிக்கொண்டு நாத்திகத்தை வளர்த்தெடுத்து, தனித்தமிழ்ப் பற்றை பொதுவுடைமையாளர்களுக்கு மடைமாற்றி விட்டது என்கிறார். எப்போதுமே எஞ்சியிருக்கும் பாட்டாளி மக்களின் மேல் இப்போது தனித்தமிழ்ப் பற்றை சுமக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு, ‘சமுதாயம்’ தமிழ் வார்த்தையல்ல; ‘குமுகாயம்’ தான் சுத்ததமிழ் என அவர்களைப் பயமுறத்துகிறது இந்த பழமைபேசிகளின் தமிழ்தேசியம். இதன் தற்போதைய சாதனை தாய்மொழிப் பற்று மறைந்து தனித்தமிழ்ப் பற்றாக; பிறமொழிகளையும், அம்மொழி பேசுபவர்களையும் வெறுத்தொதுக்கும் ஃபாசிசத்தன்மையை உருவாக்கியதுதான்.

பாரதி, வ.உ.சி போன்றோர் முன்னின்று நடத்திய நவீன தமிழியக்கமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது; தமிழை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது; மக்களுக்கானது என்று இக்கட்டுரைையை முடித்திருக்கிறார் ராஜ்கௌதமன். இத்தொகுப்பில் சிற்றிதழ், வணிகஇதழ், தமிழிலக்கியத்திலுள்ள அகம் புறம் சார்ந்து என மேலும் சில செறிவான மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளும் அடங்கியுள்ளன.

தற்போது நடந்துவரும் சென்னைப் புத்தக கண்காட்சியிலிருக்கும் NCBH அரங்கில் இப்புத்தகம் கிடைக்கிறது.

IMG_20180822_1314145

ராஜ்கௌதமன் அவர்களின் இன்னொரு கட்டுரைத் தொகுப்பான தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பற்றிய பதிவிற்கான சுட்டி

https://muthusitharal.com/2018/10/02/தலித்தியம்-ஒரு-புரிதல்/

Advertisements

விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே

images (32)

மாநில சுயாட்சிக்காக; சமூக நீதிக்காக; வெற்றுச் சிந்தாந்தங்களுக்கு எதிராக;தாய்மொழிப் பற்றிற்காக; தமிழ் மொழிக்காக; கொண்ட கொள்கைகளுக்காக என தமிழகத்தில் இருந்து கொண்டிருந்த கடைசிக் குரலும் தன் சத்தத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டிருக்கிறது.

images (31)

“ஓடினான்…ஓடினான்…வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்”…எதற்காக ஓடினான். தன் சுயத்தின் மேல் கொண்ட அபார நம்பிக்கைகாக. என்னால் இத்தமிழகத்தை வழிநடத்த முடியும் என்பதற்காக. என்னால் தமிழ் உள்ளங்களை என் தமிழாற்றலால் வெல்ல முடியும் என்பதற்காக. என்னால் அம்பேத்கரும் பெரியாரும் கனவு கண்ட சமூக நீதியை தமிழகத்தில் மெய்யாக்கி காட்ட முடியும் என்பதற்காக.

இன்று ஓடிய கால்கள் தழன்று, சிங்கத் தமிழ்க் குரல் அடங்கி, தோல் சுருங்கி உடல் சிறுத்ததால் அந்த தன்னிகரற்ற தமிழ்த்தாய் மகனின் அபார சுயம் நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறது.

வளர்க தமிழகம் அந்த சுயத்தைப் பெற்று…..

images (33)

காலியான கண்ணாடிப்பேழை

unnamed (9)

சாய்வாக ராஜாஜி கூடத்தின் படிக்கட்டுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது அந்த கண்ணாடிப்பேழை. தனக்கேயுரிய அழகோடு அந்த கறுப்புக் கண்ணாடி மலர்ந்து உறைந்திருக்கும் இந்த சூரியனின் கண்களை திகைப்போடும் துயரோடும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தோளில் எப்போதுமிருக்கும் மஞ்சளாடை அந்த சூரியன் உதிக்கும் மலை போன்ற தோள்களை அதே காதலுடன் ஆரத்தழுவியிருக்கிறது. தமிழ்த்தாயின் மூத்தமகனை மார்பிலிருந்து கால்வரை போத்தியிருக்கிறது தேசியக் கொடி.

images (51)

சுவாசித்திருக்கும் போது அனைத்து தலைவர்களுக்கும் ஒன்றுதான். சுவாசம் நிற்கும்போதுதான் அத்தலைவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியவருகிறது. நான் முதன் முதலில் கண்ட இந்திராவின் இறுதி ஊர்வலத்திலிருந்து ஜெயலலிதா வரை கண்டுணர்ந்து கொண்டது இதைத்தான். ஓங்கியெழும் கடலலை போல எங்கும் மக்கள் திரள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் ஒருவர் மரணத்தின் போதும் தன் காழ்ப்புணர்ச்சியை காட்டும் ஒரு முதிரா கூட்டமும் அந்த அலையிலிருக்கிறது.

unnamed (10)

images (53)

images (52)

இவையனைத்தையும் அதே மாறாத புன்னகையுடன் கிரகித்துக் கொண்டிருக்கிறார் அந்த சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில் வீற்றிருக்கும் இந்த… .எதைச் சொல்லி இந்த ஆளுமையை சுட்டிக்காட்டுவதென்று தெரியவில்லை. கண்ணீரை இமையணை கொண்டு தடுக்கவும் முடியவில்லை.

images (54)

எல்லாம் முடிந்து அந்த சாய்த்து வைக்கப்பட்டடிருந்த காலியான கண்ணாடிப்பேழையை ஒரு இராணுவ வீரர் அகற்றிக் கொண்டிருந்தார். வெற்றிடம், காலியான அந்த கண்ணாடிப்பேழையில் மட்டுமல்ல…

RIP Mr.Karunanidhi

images (50)

மழைமாலைப் பொழுது

images (2)

பக்கவாட்டில், பளிச்…பளிச்..என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களை துளைத்து வெட்டிச் சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரசாலைத் திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளை போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டியது அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாழாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த, சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.

images (41)

பாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுதுப் பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இருவருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.

நெரிசல் மிகுந்த ஷிபுயாவின் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வாரஇறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தது.

பெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தது.நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிட்சயமாயிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. எப்போதும் அக்கரைகள்தான் இக்கரையை பசுமையாக்குகின்றன.

images (34)

“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டுகொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாரே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழைமேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.

images (42)

இன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச் சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டு பின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாவகமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.

விடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.

“என்ன கதிர்…வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா? “

“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்..” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்..” என்றதற்கு “கம்பாய்..” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுன் “ஏன் தீடீர்னு? “ என்றான்.

images (36)

பேசயெத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும்,இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாவகமாக கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்…வகுப்பு முடிய தாமதமாயிற்று” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன..ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.

exps40826_TH1443684D37B

டகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட. தகுதியானவர்களிடமிருந்து, முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுகொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேசவருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட காலஅவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் போலிருந்தது.

ஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக்கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வாரஇறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவன்.

images (37)

அவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது. சுரேஷ்-san ஜப்பானிய ரோபாடிக் துறையில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.

images (38)

அறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக்கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்து சாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச்செய்து
“ஒய்சி….” சொல்லவைத்தான். புரியாமல் முழித்த என்னிடம் “அருமையான ருசி..” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்” என்றேன்.

ரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றை பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்துகொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இருவாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.

images (45)

உணவுவிடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நினைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரியமுனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே “உண்மையாகவா?” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.

“ரொம்ப அலுப்புத்தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் இங்க தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.

“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

மென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.

டகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்துள்ளது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.

நமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.

டகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச்சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய வங்கிகளைப் புரட்டிப்போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக்கொண்டால் மூன்றே மாதத்தில் என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”…சுரேஷ் கண்விரித்து “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.

unnamed (8)

புரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத்தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.

“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா?” என்றாள்.

“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன. இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்.” என்றேன்.

“இதெல்லாம் சாத்தியமா?”

“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.

டகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாயிருந்து. டகுச்சியே உணவுக்கான தொகையை செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசலும் அதிகமாயிருந்தது.மழையும் கூட.

எதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தது. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்திசைக் காற்றின் உதவிகொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன.சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட..சட..வென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.

images (46)

“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”
பெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,
“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.

“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”….

”ம்ம்ம்….ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண்டயே என்னோட கனவு திட்டமான திறந்த வெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர்வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்;முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி…என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…” ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.

திடீரென பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் பின்புறம் மங்கலாகி கரைந்து மறைந்து கொண்டிருந்தது. மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. அட…நான் இன்னமும் இவ்வணவு விடுதியை விட்டே வெளியேறி இருக்கவில்லை. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழைமேலாடையும் அங்கேயே இருந்தது.
எனக்கு வரும் பகல்கனவுகள் தத்ரூபமாக இருப்பது மிகவும் ஆச்சரியத்தையும், அதே சமயத்தில் பயத்தையும் கொடுத்தது.

டகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.

“என்னாச்சு கதிர்? நீ வேலைபார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்குப்பின், நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”

“ஆமாம் .என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.

images (47)

மணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன. நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்த தமிழ்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது. உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக்கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தது. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.