முழுநிலவி்ரவு

கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு.

பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான வாய்ப்பே இல்லை. கைவிடப்பட்ட பூங்காவாக இருக்கலாம். இல்லை அவசியமான இடுகாடாகவும் இருக்கலாம். இதுதான் இப்பகுதி என்று வரையறுக்க வேண்டிய தேவையேதுமற்ற கால் கை இழந்தவர்களும், முற்றிப்போன தோல் வியாதி உடையவர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் மற்றும் சில கைவிடப்பட்டவர்களுமாய் நிறைந்திருந்தது அந்த கைவிடப்பட்ட பகுதி. இவர்களையெல்லாம் மிக எளிதாக கடந்து செல்லும் தேவாவைப்போல், ப்ரியாவால் எளிதில் கடக்க முடியவில்லை. ஒரு விலக்கத்தோடே அவர்களை கடப்பவருக்கு சமூகசேவை என்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிய ஆரம்பித்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே ப்ரியா அங்கு வந்ததற்கான காரணம் தன்னை எப்போதுமே இலகுவாக உணரவைக்கும் தேவாவின் வெடிச்சிரிப்புகளுக்காகத்தான். அங்கிருந்தவர்களின் நிலைமையை ஒரு மெல்லிய சோகம் கலந்த சிரிப்போடு தேவா விவரிக்கும் விதம் நம்மையும் ப்ரியாவையும் அக்காட்சி தரும் மனச்சோர்விலிருந்து தப்ப வைக்கிறது.

வெண்ணிற முழுநிலவின் ஒளியை கடன் வாங்கி அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது தேவாவின் முழுக்கை பூட்டப்பட்டிருந்த சட்டை. அங்கிருந்த கரும்பசுமையின் பின்புலத்தில், ப்ரியாவின் முழங்காலைத் தொட முயற்சித்திருந்த இளம்பச்சைநிற மேலாடை பளிச்சென்றிருந்தது.  அங்கும்கூட இந்திரா காந்தியின் ஒரு சிலை. அதற்கடியிலிருந்த பீடத்தில் அமர்ந்தவாரே இந்திரா காந்திக்கு செய்யமுடியாத சிகையலங்காரங்களை ப்ரியாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார் சிகையலங்கார நிபுணரான தேவா. தலைமுடியை வருடும்போது எழும் ஒரு பாதுகாப்பு உணர்வுக்கு இணையே கிடையாது. வருடுபவர் கூறுவதற்கெல்லாம் தலையசைக்கச் சொல்லும் ஒரு மோன நிலையது. இதைப் பயன்படுத்தி சேவையின் மீதும் கடவுள் மீதும் தான் தீவிரப்பற்று கொண்டுள்ளதாக நினைத்திருக்கும் ப்ரியாவின் மனதை லௌகீகத்திற்கு மாற்றமுயன்று தோற்கிறார் தேவா. உண்மையிலேயே தோற்காததுபோல் நான் நடிக்கிறேன் என்பதை உள்ளூர உணர்ந்தவராகவே இருக்கிறார் ப்ரியா.

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. திட்டப்படி அங்கிருந்த இருட்டு மனிதர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துவரும் தாமஸ் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. தாமஸ் எப்படியாவது, ப்ரியா மேல் தான் கொண்டிருக்கும் காதலை அவளுக்கு உணர்த்த தேவாவின் உதவியை நாடியிருந்தார். இங்கு நடக்கும் ஒட்டுமொத்த காட்சியும் நாடகம்போல் இதற்காகத்தான் மெல்ல கண்க்குபோட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சாட்சியான முழுநிலவின் கணக்கு வேறாயிருந்தது.

இந்திராவின் சிலையருகே இருந்த ப்ரியாவை விட்டு சற்று விலகியிருந்த தேவா, ஒரு சிறு மௌனமான நேரத்திற்குப்பிறகு முழுநிலவின் துணை கொண்டு மீண்டும் அவளை நெருங்கிச் செல்கிறார் ‘வெண்ணிலவே…’ என்று பாடிக்கொண்டே. பாட்டின் தாளத்தில் அங்கு ஒரு மெல்லிய நடனம் தேவாவின் நளினமான உடலசைவில் உருவாகி அங்கிருந்த இருட்டு மனிதர்களின் உடலசைவின் வழியாக கடலலைபோல் பிரியாவின் உடலையும் அசைய வைக்கிறது. இசை, நிலவொளி. நடனம் என மூன்றும் முயங்கியதில் தன்னிச்சையாக தேவாவின் தோள்மேலே தன் தலை சாய்க்கிறார் பிரியா. திடுக்கிட்ட தேவா,

//தலை சாயாதே விழி மூடாதே…

 சில மொட்டுக்கள் சற்றென்று பூவாகும்…//

என அவள் கிரங்குவதைத் தடுத்து இருவரும் சட்டென்று விலகி குழம்பித் தவித்துக் கொண்டே பாடலையும் நடனத்தையும் தொடர்கிறார்கள். இசை, நிலவொளி மற்றும் நடனத்தோடு குழப்பமும் சேர்ந்து  இருவரையும் பேருறு கொண்டு சீறிப்பாய்ந்து ஆட வைக்கிறது, குழப்பதிற்கான விடை தேடி.

ஆட..ஆட..இருவரின் அகத்தை சுற்றியிருந்த அனைத்துப் புறங்களையும் கரைத்து இல்லாமலாக்கி

// நான் உலகை ரசிக்க வேண்டும் தான்…

  உன் போன்ற பெண்ணோடு…//

என்று அந்த நடனம் இருவரையும் மீண்டும் இணைத்துக் கொண்டு அவர்களை குழப்பத்தில் இருந்து விடுவிக்கிறது.

கடவுளைத் தேடிய ப்ரியா தன் காதலைக் கண்டுகொள்கிறாள். பெண்களைப் புரிந்து வைத்திருந்த தேவா தன்னைப் புரிந்து கொள்கிறான்.

இருவரும் ஒருவரின் கை விரல்களை ஒருவர் கோர்த்துக் கொண்டு அலையடங்கி கரை சேர்வது போல மெதுவாக நடனத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். தாமஸ் புன்னகையோடு அங்கு வந்து அங்கிருந்த கைவிடப்பட்டவர்ளில் ஒருவராக நிற்கிறான் கைவிடப்பட்டு.

Advertisements

கடல்கன்னியுடன் ஒரு நாள்

கடற்கரையைச் சார்ந்து வாழும் நெய்தல் நிலத்தைச் சார்ந்த பரதவர்களின் (மீனவர்களின்) சிதிலமடைந்த கோயில் போலிருந்தது அந்த கற்கட்டிடமும் அதிலிருந்த சிற்பங்களும். நிறைய சதுர வடிவ அறைகளைக் கொண்டிருந்த அக்கற்கட்டிடத்தில் நீள்வட்ட வடிவில் ஒரு பெண்முகம். சாந்தமும் ஏளனமும் கலந்த கயல்விழியும், நீண்ட மூக்குமாய் நீண்டு செழுமையான மார்பகங்களோடு பாதியில் முடிவடைந்திருந்தது அச்சிற்பம். அக்காலப் பரதவர்களின் பெண் தெய்வமாக இருக்கலாம் என்று பார்வையைச் சற்று தாழ்த்தியபோது கடல்கன்னி நக்கலோடு புன்னகைத்துக் கொண்டு தனது வலது முழங்கையைத் தரையில் ஊண்டி அதன்மேல் தன் தலையைச் சாய்த்திருந்தாள். அக்கற்கட்டிடத்தின் ஒரு சதுர வடிவ அறையில் பார்த்த பெண் சிற்பத்தின் தொடர்ச்சி போலவே இருந்தாள் இக்கடல்கன்னி. கூடுதலாக கொடியிடையும், அதைத்தொடர்ந்து விரியும் மீனின் உடம்பும், குறுகிய வால்ப்பகுதியும் கடல்கன்னிதான் இவள் என நம்ப வைத்தது.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிப்படி முதல் உயிரினம் தண்ணீரிலிருந்துதான் தோன்றியது என்பார்கள். இப்பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகக் கூட இக்கடல் கன்னியின் சிற்பம் இருக்கலாம். மரபார்ந்த இதுபோன்ற கலைவெளிப்பாடுகள் ஏதோ ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடுதான். இச்சிற்பங்களுக்கு முன்னால் நாம் நிற்கும்போது நம் மனிதகுல மரபுகளுக்கு முன்னால் நிற்கிறோம் என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம். காலத்தின் கண்ணாடி போன்றவை இச்சிற்பங்கள். பகுத்தறிவென்றாலே மரபுகளுக்கு எதிரான ஒன்றாக நாம் எண்ணிக்கொள்ளும்போது இதுபோன்ற சிற்பங்கள் அளிக்கும் உளச்சித்திரத்தை நாம் இழந்து விடுகிறோம். பகுத்தறிவென்பது நாம் நம்புவதைப்போல மரபுகளை உதாசீனப்படுத்துவதல்ல, அதை ஆராய்ந்து புரிந்து கொண்டு, முன்னகர்வதுதான் என்று எண்ணிக்கொண்டே சற்று திரும்பியபோது, அருண்&Co சற்று தூரத்தில் அடர்ந்த மரங்கள் வெளியிட்ட ஆக்ஸிஜனை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள், சிகரெட் புகையின் வழியாக. இருந்தாலும் அம்மரங்கள் அப்புகையை உறிந்து அவ்விடத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தது.

அதுவரை கத்தி வறண்டு போயிருந்த மதன், விஜி மற்றும் சிவாவின் தொண்டைகளுக்கு சற்று ஓய்வு கொடுப்பதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில்தான், நிகழ்வு நடந்த உள்ளரங்கிலிருந்து சற்றுதொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் இ்ருந்த கடல் கன்னி மேல் மையல் கொள்ள நேர்ந்தது.

ராயல் கார்டன்

மூளையை உருகவைக்கும் வேலைப்பளு; உடலை உருக்கியெடுக்கும் வெயில்; புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் C&R; கூடவே Ourview survey வேறு. வேறு வழியில்லை ஜெரோமுக்கு. ஒட்டுமொத்த அணியும் (30 பேர் இருக்கலாம்) அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு கனவுச் சாலையான கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றில் காலையிலி்ருந்து மாலை வரை தஞ்சமடையலாம் என்று VGPல் கூடியிருந்தோம். வழக்கம்போல் பாலா&Coவின் இடத்தேர்வு அற்புதம்.

வருவாரா? வரமாட்டாரா? என்று கடைசி நிமிடம் வரை பரபரக்க வைத்த C&R தலை ரவி சொல்லிவைத்த நேரத்தில் தன்னுடைய வாகனத்தில் என்னை இழுத்துப்போட்டுக்கொண்டு வார நாட்களின் வாகனச்சிடுக்குகளை (traffic) அருமையாக கடந்து VGPன் மிக அகலமான நுழைவு வாயிலை அடைந்தபோது மணி பத்தைத்தொட 5 நிமிடங்கள் இருந்தது. எந்தவித ஆராவாரமுமற்று அமைதியாக இருந்த அந்த விடுதியின் பசுமையில் கண்களை நனைத்துக் கொண்டே எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘Royal Garden’ஐ அடைந்தபோது வெயில் சற்று குறைந்தது போலிருந்தது. குறைவான கட்டிடங்களும், நிறைந்த பசுமையும் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே சாந்தா&Co தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை செவ்வனே நிறைவேற்றியிருந்தார்கள். அவர்கள் கையிலிருந்த உயர்தர நொறுக்கும் சரக்கும் நிறைய கவிஞர்கள் மற்றும் பாடகர்களுக்கான எரிபொருள்.

வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த மேடான பகுதியிலுள்ள குடிலில் எங்கள் கூடுகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நெடுநெடுவென வளர்ந்த இரு இளையவர்கள்  கருத்து மெலிந்த தேகத்தோடு செய்வதறியாமல் முழித்து எங்களை வரவேற்றார்கள். எங்களுக்காக அமர்த்தப்பட்டிருந்த சிப்பந்திகள் அவ்விருவரும். இதுபோன்ற கடற்கரையோரமுள்ள பெரும் தங்கும் விடுதிகளில் தோன்றும் இவ்விளையவர்களின் முகத்திலிருக்கும் மிரட்சியும், சோகம் கலந்த புன்னகையும் மனதை எப்போதும் நெருடுபவை. அவர்களால் தரப்பட்ட எலுமிச்சைச்சாறு கலந்த சர்க்கரை நீரை பருகியபடி மீண்டும் அவ்வட்ட வடிவ குடிலைச் சுற்றியிருந்த பசுமையில் மூழ்கியிருந்தபோது ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். 9.45க்கெல்லாம் தொடங்கவேண்டிய நிகழ்வு 30 நிமிட தாமதமாகியும் தொடங்காதது கண்டு, இரு ஜீவன்கள் அந்த வெயிலைத் துணிந்து கடற்கரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களில், குடில் நிறைந்திருந்தது. கூம்பு வடிவ மேற்கூரை, பக்கவாட்டு மூங்கில் சுவரிலிருந்து மிக உயரத்திலேயே முடிந்திருந்தது. சுற்றியிருந்த பசும்புல்வெளி தண்ணீரால் அங்கிருந்த வேலையாட்களால் நனைக்கப்பட்டுக் கொண்டே இருந்ததில் குடிலின் வெம்மை சற்று தணிந்திருந்தது. வட்ட வடிவில் சுற்றி அமர்ந்திருந்த அனைவரின் கைகளிலும் எலுமிச்சைச்சாறு. நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெரோம். ‘’அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச..” என அவதார நாசர் அங்கிருந்த Bose ஒலிப்பெருக்கி வழியாக கசிந்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு தன் அரிதாரமற்ற உரையை ஆரம்பித்தார். நிறுவனத்தின் சமீபத்திய சாதனைகளை சுட்டிக்காட்டி விட்டு தன்னுடைய ‘Power Talk’ஐ சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதைவிட சிற்றுரையை விசுவும், ரவியும் முடித்தவுடன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களான மதன், விஜி மற்றும் சிவா பரபரப்பானார்கள். மூவரின் தொண்டைக்கும் விடப்பட்ட கடுஞ்சவால்தான் அடுத்து வந்த அனைத்து நிகழ்வுகளும். ஆனால் கூடியவிரைவில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கையிலெடுத்துக் கொள்ளும் கலையை கற்றுத்தேர்வார்கள் என்றே தோன்றுகிறது.

ஒன்று கலத்தல்

பாம்புபோன்ற வரிசையில் அங்கிருந்தவர்களை நிறுத்தினார்கள். பாம்பின் தலையும், பாதி உடம்பும் குடிலுக்கு வெளியே நீண்டிருந்தது. வால் பகுதியில் கடைசியாக நிற்பவரிடம் சைகயால் உணர்த்தப்படும் ஒன்றை சைகையின் வழியாக தலைப்பகுதியின் முன்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும். பின்னாலிருப்பவரால் தொடப்படும்போது மட்டுமே திரும்பி அவர் சைகையில் நமக்கு உணர்த்துவதை பார்க்கமுடியும். அதை முன்னாலிருப்பவரைத் தொட்டுத் திருப்பி, அவருக்கு கடத்தவேண்டும். ஒரே கூச்சலும் சிரிப்புமாக, வால்பகுதியில் இருசக்கர வாகனத்தைச் சுட்டிய சைகை தலைப்பகுதியை அடையும்போது துப்பாக்கியாக மாறியிருந்தது. இது அங்கிருந்த இறுக்கத்தை முற்றிலும் கலைத்து அனைவரையும் இலகுவாக்கியிருந்தது. அதே சமயத்தில் மொழியின் அவசியத்தையும் இந்நிகழ்வு உணர்த்தியது. Bike அல்லது இருசக்கர வாகனம் என அனைவருக்கும் பரிட்சயமான வார்த்தை வழி இதை நம்மால் எளிதில் கடத்தியிருக்க முடியும். ஆனால் சைகை மொழி அங்கிருந்தவர்களுக்கு அவ்வளவு பரிட்சயமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் புரிதலுக்கேற்ப சைகைகளைப் புரிந்து கொண்டார்கள். விளைவு இருசக்கர வாகனம் துப்பாக்கியாக மாறியது. தனக்குத் தெரிந்தவற்றை மற்றவருக்கு தெரிந்த ஒன்றின் வழியாக மட்டுமே கடத்தமுடியும் என்பதே தொடர்பு கொள்ளலின் முதன்மையான விதி. மொழி மனித இனம் தன் தனிமையை விரட்டிக்கொள்ள கண்டுபிடித்த மிக முக்கியமான கருவி.

வெயில் அங்கிருந்த பெண்களின் அரிதாரத்தை மெல்ல உரிக்க ஆரம்பித்திருந்தது. நல்லவேளையாக குளிரூட்டியுள்ள ஒரு உள்ளரங்கு அடுத்து வரும் நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் மூன்று அணியினராக பிரிக்கப்பட்டு குதிரையின் லாடவடிவில் அமர வைக்கப்பட்டோம். பலூன் ஊதல், பெரிய நிறுவனங்களின் சின்னங்களிலிருந்து (logo) அவற்றை அடையாளம் காண்பது, மாறி மாறி கொடுக்கப்படும் எண்களுக்கேற்ப குழுவாக மாறுவது என சுவாரஸ்யமூட்டும் நிகழ்வுகளில் அனைவரும் களைத்திருந்தோம். அடைக்கப்பட்டது போன்ற உணர்வு வெளிக்காற்றைத் தேடி எங்களை அவ்வரங்கை விட்டு வெளியே தள்ளியது. 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஆமை ஓட்டைப் போர்த்தியது போலிருந்த ஒரு சிறு கட்டிடத்தில் கூடுவதாக திட்டம்.

பொங்கி வழிதல்

கிடைத்த இடைவெளியில் கடல்கன்னியின் சிற்பங்களில் சிறிது ஆழ்ந்து விட்டு, அங்கிருந்த பசுமையையும், அதைக்காக்கும் அடர் மரங்களையும் கடந்து ஆமைக்கட்டிடம் இருக்கும் அந்த பரந்த புல்வெளியை அடைந்தோம்.  அப்பரந்த புல்வெளியின் ஓரத்தில் வட்டவடிவத்தில் அமைந்த கான்கிரீட் தளத்திலிருந்து 5 அல்லது 6 அடி உயரத்தில் எழும்பியிருந்த தூண்களின் மேல் ஆமையின் ஓட்டை கவிழ்த்தியது போலிருந்தது கூரை. அதன் கீழிருந்த ஒவ்வொருவர் பேசியது்ம் ஆற்றல் கூட்டப்பட்ட பிசிறில்லாத ஒலியாக காதில் விழுந்தது. என்ன விதமான ஒலி வடிவமைப்பு என்று புரியவில்லை, இந்த சுவர்களற்ற ஆமைஓடு கட்டிடத்திற்கு. அப்பரந்த புல்வெளியும், இக்கட்டிடமும் ஒன்றிணைந்து கிரிக்கெட் மைதானங்களின் பெவிலியனை நினைவுபடுத்தியது.

வட்டமாய் அமர்ந்து கும்மியடிப்பதற்கான அத்தனை வஸ்துகளும் அங்கு நிரம்பியிருந்தது. பொங்கியெழும் பியரிலிருந்து, அமைதியான வோட்காவரை: வருத்த முந்திரியிலிருந்து பொறித்த கோழிவரை என.இவ்வஸ்துகள் பல பாடகர்களையும் கவிஞர்களையும் வெளிக்கொண்டு வந்தன.

//அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே, நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே…// என்ற அருணின் பாடல்

//கற்களின்றி சிற்பம் ஒன்று கண்டபோது.
முட்களின்றி நேரம் ஓடும் கண்டுகொண்டேன்.
…// என்ற ஶ்ரீநாத்தின் கவிதை மற்றும் //பனிவிழும் மலர்வனம்…// என்ற பாடல்

“இல்லை உங்கள் பாடல்களிலும் கவிதையிலும் பிழை உள்ளது…” என வோட்காவின் துணை கொண்டு தருமியாய் உறுமிய சாந்தாவின் நாணல் பற்றிய கவிதை என அவ்விடம் களைகட்டியிருந்தது.


கையில் நுரைததும்ப நிரம்பியிருந்த கண்ணாடிக் கோப்பை காலியானதே தெரியாமல், மீண்டும் நிரப்பிக்கொண்டபோதுதான் புரிந்தது அத்தனை கவிதைகளும் பெண்களைப் பற்றியதாகவே இ்ருந்தது. கவிஞர்களுக்கான வஸ்து பெண்கள்தான் என்று நினைத்தபோது சற்றுமுன் தரிசித்த கடல்கன்னியின் சிற்பம் நினைவுக்கு வந்து சிற்பிகளையும் கவிஞர்களோடு ஒப்பிடவைத்தது. இவர்களிருவரும் பெண்களின் மேல்கொள்ளும் பற்று ஒரு தெய்வீக நிலைக்கு இவர்களை இட்டுச்செல்கிறது போலும். இதன் வெளிப்பாடுதான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் சிற்பங்கள் பிசிறற்றவையாக, ஒரு முழுமையான வடிவை அடைகின்ற எனலாம். ஆனால், ஆணால் வடிக்கப்படும் ஆண் தெய்வங்களின் சிற்பங்களில் இம்முழுமையை காணமுடிவதில்லை. ஒருவேலை பெண் சிற்பிகளால் இந்த ஆண்தெய்வங்களுக்கு அந்த முழுமையை கொடுத்திருக்க முடியும். தான் வடிக்கும் சிற்ப உடலின் மேல் இருக்கும் ஈர்ப்புதான் இதற்கெல்லாம் காரணமா? ஆனால், கிரேக்க சிற்பமான ஹெர்குலிஸின் கைகளில் உள்ள புடைத்த நரம்புகள் ஆண் சிற்பிகளாலும் முழுமையைக் கொண்டு வரமுடியுமென்று நிரூபிக்கின்றன. ஒருவேளை அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்று எண்ணினாலும், உடல்மேல் கொள்ளும் ஈர்ப்பையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் இக்கலைஞர்களை முழுமையான ஒன்றை நோக்கி இயக்குகிறதென்று எண்ணிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்ததும் சற்று கால் தடுமாறியது. போதும் நிறுத்து சரக்கை என்பதற்காக உடம்பு தரும் முதல் சமிஞ்கை. எப்போதும் அதை நான் தவறவிடுவதில்லை. ஆனால் அதை தவறவிட்டு சலம்புவதுதான் மஜாவே…

உண்டு மயங்குதல்

மீண்டும் காலையில் குழுமியிருந்த குடிலை நோக்கி கால்கள் பின்ன ஒரு நீண்ட நடை. வெயிலும் சரக்கும் எப்போதுமே பொருந்தாத ஜோடிகள். ஒன்று மயங்க வைக்கும் என்றால், இன்னொன்று தெளிய வைக்கும். மதியநேர வெயில், பசுமையிலும் பியரிலும் மயங்கிருந்தவர்களை தெளிய வைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் சளைத்தவர்களல்ல என சிலர் மயங்கிக்கொண்டே இருந்தார்கள்.

வழக்கம்போல் பிரியாணியும் சிலபல அடர் சிவப்பு நிற பொரித்தவைகளும் ஒன்றுக்கு பக்கத்தில் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்து அக்குடிலில் . பிரமாண்டமான அறுசுவை உணவு இல்லையென்றாலும், பசிக்கு இதமாக இருந்தது. சிறுதட்டில் அங்கிருந்தவைகளை அடுக்கியெடுத்து உண்ண ஆரம்பித்தவுடனேயே தட்டு காலியாயிருந்தது. சரக்கும் பசியும் எப்போதுமே ஒன்றையொன்று தழுவிக் கொள்பவை. மணி மதியம் 3ஐத் தொட்டிருந்தது. இன்னமும் பந்தி முடிந்த பாடில்லை. ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலர் உண்ட மயக்கத்தில் கண்களை மூடிக் கொண்டு அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிப்பந்திகளை சாப்பிட அனுப்பிவிட்டு குடிலில் அமர்ந்திருந்த அனைவரின் தியானத்தையும் மீண்டும் கலைத்தார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.

மறுபடியும் பாட்டும் கவிதையுமாய் சென்று கொண்டிருந்த நிகழ்வை வேட்டையாடு விளையாடு ராகவன் குரலில் சுவாரஸ்யமாக்கினார் கதிர். தெனாலி கமலின் குரலும் மிக இயல்பாக வந்தது அவருக்கு. பயம் பயமென்று பலவகைப் பயங்களோடு நீண்ட அந்த மிமிக்ரியில் ‘இராணுவம் செல்லடித்து(வெடிகுண்டு போடுதல்) விடுமோ என்ற பயம்…செல்லுக்கு பயந்து பதுங்குழியில் பதுங்க பயம்…’ என்ற வரி தெனாலி படத்தில் கமல் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை நினைவுபடுத்தியது. வானத்தில் வேகமாக சீறிச் செல்லும் விமானத்திலிருந்து கீழே எறியப்படும் குட்டி விமானம் போன்ற வெடிகுண்டு, அதை அண்ணாந்து பார்க்கும் ஒரு சிறுவனுக்கு பெரிய மீனின் வயிற்றிலிருந்து விழும் குட்டி மீன்போல பரவசமூட்டியிருக்கும். ஆனால் அது விழுந்த இடத்திலிருந்த கட்டிடங்களும் அதில் வசிக்கும் அவனது உறவுகளும் வெடித்துச் சிதறி உருகி இல்லாமல் போனவுடன் கணநொடியில் வாழ்க்கை மேல் கொண்டிருந்த அத்தனை பரவசமும் பயமாய் உருமாறி விடுகிறது. போர் குழந்தைகளிடம் உருவாக்கும் உளவியல் சிதைவு அவர்கள் மீண்டுமொருமுறை உண்மையாகவே இறந்து போகும்வரை தொடரக்கூடியது. இதை உணர்ந்தவர்கள் “போர்…போர்….” என்ற வெட்டி முழக்கத்தை தேசபக்தியாக எடுத்துக் கொள்வதில்லை. அதைத் தொடர்ந்து வழக்கம்போல் அருண் குழுவின் புது நபர்(ரி)களை தன் பேச்சுத்திறமையால் கவர முயன்று கொண்டிருந்தார்.

என் முதுகைத் தொட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த ரவி 4.15க்கு கிளம்பினால்தான் ECRன் வாகனச்சிடுக்கை தவிர்க்க முடியுமென்றார். கிட்டத்தட்ட அனைவருமே கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அலுப்புகளை களைந்து உற்சாகமூட்டிய நாள். இதைச் சாத்தியப்படுத்தியவர்களின் உழைப்பும் மெனக்கெடலும் போற்றுதலுக்குரியது. சில இரட்சகர்கள் முற்றிலும் நிலை தடுமாறியிருந்தவர்களை காத்து வீட்டிலிறக்கியதாக சேதி. ரவியின் வாகனம் என்னை உதிர்த்து விட்டு போனபோது முழு மாலையாயிருந்தது. ஒரு பாலில்லா தேநீரே அப்போதைய தேவையாக இ்ருந்தது. கடல்கன்னியெல்லாம் எங்கோ ஆழத்திற்கு போயிருந்தாள்.

ஒரு செவ்வியல் உரை

ஒரு செவ்வியல் (Classic) நாவல் போல உரையையும் அமைத்துக்கொள்ள முடியுமென்று நிரூபித்துக் காட்டுவதற்காகவே ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் தன்னுடைய பேருரையை ஆற்றியிருக்கிறார் சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன் (ஜெமோ).

அறிவுச்செயல்பாடுகளிலிருந்து நீண்டகாலமாக விலகியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் தொய்வேயில்லாமல் இலக்கியத்தை மட்டுமே தன்னுடைய அறிதலாகக் கொண்ட ஒருவரால் இத்தலைப்பில் ஒரு உரையை ஆற்றமுடியுமா? அதை தலைக்கு 300 ரூபாய் கட்டி ஒரு 300 பேர் ஆழ்ந்தமர்ந்து கேட்டுணரமுடியுமா? என்ற அவநம்பிக்கை  கேள்விகளுக்குச் சரியான பதிலை தந்திருக்கிறது ஜெமோ ஆற்றிய இந்த பேருரை. மூடிக்கட்டி கனத்திருந்த அட்டைப் பெட்டியை அவிழ்த்துக் கொட்டுவதுபோல் அங்கிருந்தவர்களுடைய மனக்கட்டுமானங்களின் முடிச்சுகளை தன் அறிவாற்றலான இலக்கியம் வழி அவிழ்த்து விட்டிருக்கிறார். இனம், மொழி, மதம், சாதி சார்ந்து தஙகள் சுயநலத்திற்காக சமூகத்தை ஒற்றைப்படையாக தொகுத்து ‘தான் – பிறர் ‘ என கட்டமைக்க விரும்பும்  ஃபாசிஸ்டுகள் ஜெமோவை ஒரு ‘முடிச்சவிக்கி’ என்று வசைபாடலாம்.

இப்பதிவு ஜெமோ ஆற்றிய உரையைப் பற்றியது மட்டுமில்லாமல், அதன் வழியாக நான் கண்டடைந்த புரிதல்களையும் உள்ளடக்கியுள்ளது.

அரங்கு

வழக்கம்போல் ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு நிகழ்வு நடக்கும் சென்னை அடையாறிலுள்ள இராஜரத்தினம் அரங்கத்தை கண்டுகொண்டபோது மணி 5ஐத் தொடவிருந்தது. அதுவரை தான் பூண்டிருந்த சினிமா படப்பிடிப்பிற்கான வேஷத்தைக் கலைந்து 6 மணிக்குத் தொடங்கவிருக்கும் கட்டண உரைக்காக தயாராகிக் கொண்டிருந்தது அரங்கம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அகர முதல்வன் எந்திரன்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வாசகர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த நுழைவுச் சீட்டை யோகேஸ்வரனிடம் பெற்றுக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தபோது வெள்ளைச்சட்டை அணிந்திருந்த நீல இருக்கைகள் ஆங்காங்கே நிரம்பியிருந்தது. உள்ளரங்கத்திற்குள்ளான அனைத்து அமைப்புகளோடும் கட்டப்பட்டிருக்கும் அரங்கு. நீல இருக்கையின் வெள்ளைச்சட்டை மட்டும் சற்றே அழுக்காயிருந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல வெள்ளை தன் நிறத்தாலேயே கெடும் எனலாம்.

மணி 6ஐத் தொட பத்துநிமிடங்களிருந்து. மேடையிலிருந்து ஆறாவது நிரையிலிருந்த என்னிருக்கையில் அமர்ந்தவாரே சற்றுத்திரும்பியதில் அரங்கம் நிறைந்திருந்ததில் உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் சற்று பிரமிப்பும் ஒரு சேரத்தோன்றியது. கிட்டத்தட்ட 300க்கும் சற்று அதிகமான இருக்கைகள் கொண்ட அரங்கம். மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த பேசுபவருக்கான பேசு மேடையைத் தவிர வேறெதுவும் இல்லாதது இந்நிகழ்வின் தனித்தன்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் சற்றே பரபரப்போடு ஜெமோ தன் மனைவியோடும் மகனோடும் அனைவரின் புன்னகையையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் வசந்தபாலன் அருகில் சென்றமர்ந்தார். அதைத் தொடர்ந்த சில நிமிடங்களில் நவீன தொழில்நுட்பயுகத் தமிழ்சினிமாவை கட்டமைத்த ஆளுமைகளில் மிக முக்கியவரான இயக்குனர் மணிரத்தினத்தின் வருகை அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திழாழ்த்தியது. அங்கிருந்த 300 பேரில் தானும் ஒருவராக அமர்ந்து கொண்டார், ஜெமோவின் உரையை கேட்பதற்காக.

குறுதிச்சுற்றமும் பண்பாடும்

ஒருசில நிமிட அகரமுதல்வனின் முன்னுரை இந்நிகழ்வு ஆகுதிப் பதிப்பகத்தால் நடக்கவிருக்கும் தொடர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வு என்று புரிந்து கொள்ள வைத்தது. ஆனால் இது ஜெமோவின் இர‌ண்டாவது கட்டணஉரை. நம்மிலுள்ள நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக்காட்டவிருக்கும் உரையின் முதல் பகுதியை எப்போதிருக்கும் ஆரம்பகட்ட பதற்றத்தோடு ஆரம்பித்தார் ஜெமோ.

ஒரு செவ்வியல் நாவலின் ஆரம்பம்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து ஆழ் அமைதியை, படிமங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது யாருடைய மரபு? என்ற கேள்வியை பகடி செய்துகொண்டே.

மரபின் படிமங்களாக அல்லது உருவங்களாக நம் பெற்றோர்களையே முன்னிறுத்தி ஆரம்பித்த உரை, மரபென்பதே தொல்காலத்தைச் சேர்ந்த ஒன்று என்றெண்ணியவர்களுக்கு ஆச்சரியமான ஒன்று. நமது பல்வேறு தரப்பட்ட மரபுகளின் கட்டமைப்புதான் நாம் தினமும் எதிர்கொள்ளும் நம்முடைய பெற்றோர். சமூகத்திலும் இதே போன்றுதான் தந்தைகளையும் அன்னையரையும் உருவகித்திருக்கிறோம். காந்தியிலிருந்து இந்திரா வரை; பெரியாரிலிருந்து கலைஞர் வரை என. இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் மரபின் படிமங்களே என்று சொல்லிவிட்டு அதற்கான ஆழ்படிமம் அல்லது முதன்மையான காரணமாக மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும்  தனிமையைச் சுட்டிக்காட்டியது, ஆர்ப்பரித்து கரையைத்தொட்டு உள்வாங்கிக் கொள்ளும் கடலலையைப்போல; சில ஆரம்பப் பக்கங்களைக் கடந்தவுடன் மெதுவாக நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் செவ்வியல் நாவல்போல; தன்னுடைய காந்தவிசையால் சுற்றியுள்ள அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் எந்திரன் சிட்டி போல அரங்கின் பார்வையாளர்களுக்கும் மேடைக்குமிருந்த தூரத்தை குறைத்துக் கொண்டே சென்றது. இவ்வுரை மெதுவாக அங்கிருந்தவர்களின்; மனிதகுலத்தின் மாபெரும் தனிமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க ஆரம்பித்தது.

தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எவ்வளவு முடிந்தாலும் கடத்தி விட முடிவதில்லை. மற்றவர்கள் என்ன உணர்ந்து கொண்டார்கள் என்பது அவரவர் கொண்டிருக்கும் புரிதல்களால் மட்டுப்படுத்தப்பட்டது. நாம் கேட்கப்படவேயில்லை; நமது மகிழ்ச்சியும் துக்கமும் முழுமையாக மற்றவர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதே மானுட குலத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும் தனிமை என்று இவ்வுரையில் சுட்டிக்காட்டினார் ஜெமோ. இத்தனிமையிலிருந்து தப்பிக்கொள்ள நடந்த பொதுமைப்படுத்துதல்களின் ஆரம்பமே மரபின் ஆரம்பம் என்று புரிந்து கொண்டேன்.

பெரும்பாலும் இப்பொதுமைப்படுத்துதல் குருதி சார்ந்த உறவாகவே ஆரம்பித்து குலம், இனம் என செல்கிறது. தன்னுடைய ‘கொற்றவை’ எனும் நாவலில் இதனைக் குறுதிச்சுற்றம் என்ற சொல்லால் ஜெமோ குறிப்பிட்டுள்ளார். இப்பொதுமைப்படுத்துதல் பெரும்பாலும் ‘தான் – பிறர்’ என்ற கட்டமைப்பைத்தான் உருவாக்கியது என்று ஜெமோ கூறினாலும் தன் குறுதிச்சுற்றத்திற்குள், தன் குலத்திற்குள், தன் இனத்திற்குள் மற்றவரையும் தானாக உணரும் ஒரு பொதுவுடைமைத்தன்மையை கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. இதனா‌ல்தான் மார்க்சியர்களும் இனக்குழு சமூகங்களை பொதுவுடைமைச் சமூகங்களாக கண்டுகொள்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் குழுவுக்கு வேண்டியது இருக்கும்வரை மற்ற குழுக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காத சமூகமாகவும் இருக்கும் இந்த குருதி மரபு எப்போதும் அப்படியே இருப்பதில்லை. உதாரணத்திற்கு முசிறியைச் சேர்ந்த ஒரு இனக்குழு தங்கள் தேவைக்காக தஞ்சையைச் சேர்ந்த இனக்குழுவை அழித்தொழிக்க தயங்குவதில்லை. புறநானூறில் சித்தரிக்கப்படும் அனைத்து போர்ச்சித்திரங்களும் இருவேறுபட்ட குருதி மரபுகள் இடையே நடந்த இதுபோன்ற குல இனச் சண்டைகள் பற்றியதுதான்.

தன் தனிமையைப் போக்கிகொள்ள மனிதகுலம் கண்டுபிடித்த முதல்கருவியான குருதி மரபு காலாவதியாக ஆரம்பித்து அழிவுநோக்கிச் செல்ல ஆரம்பித்ததுதான் நம்மை விழுமியங்களுக்கு (values) இட்டுச்சென்றது என்று கூறிய ஜெமோ, அதை பண்பாட்டு மரபு என்று உ்ருவகிக்கிறார். இதற்கான அறைகூவல் புறநானூற்று போர்ச்சித்திரங்களுக்கிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கோழி பறக்க எத்தனிப்பதுபோல எழுகிறது என்கிறார் ஜெமோ. இந்த அறைகூவல்களை விழுமியங்களாகக் கொண்டு பல இனக்குழுக்களை ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதே பண்பாட்டு மரபு என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இந்த போருக்கான குரலும் சமாதனத்திற்கான குரலும் ஒரே நேரத்தில் எழும் இந்த முரணியக்கத்தில் மார்க்சியர்களின் பார்வை ஜெமோவின் பார்வையிலிருந்து முரண்படுகிறது. முரண்பட்டால்தானே மார்க்சியர்கள். பெரும்பாலும் வேட்டைச் சமூகமாக, அதாவது உணவை சேகரிக்கும் சமூகமாக இருந்த இனக்குழுக்களுக்கிடையே உருவான ஏற்றத்தாழ்வுதான் அவர்களிடையே சண்டையிட வைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள்  உணவு சேகரிக்கும் சமூகம் உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிய முரணியக்கத்தின் விளைவு என்கிறது மார்க்ஸியம். கிட்டத்தட்ட இம்முரணியக்கத்தை தனியுடைமைச் சமூகங்களின் தோற்றுவாய் என்றும் பொதுவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்றவற்றை தனியுடைமைச் சமூகங்கள் தங்கள் நெருக்கடிக்குத் தீர்வாக கடன் வாங்கிக் கொண்டன என்றும் உருவகிக்கிறார்கள் மார்க்சியர்கள்.

ஆனால் குருதி சார்ந்த இனக்குழு மரபிலிருந்து பண்படாத சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்து கொண்டேயிருக்கின்றன என்று ஆப்பிரிக்க நாடுகளின் இனக்குழுச் சண்டைகளை சுட்டிக் காண்பித்தார் ஜெமோ. இந்திய தேசியம் என்ற ஒன்று உருவாகி வந்ததே இந்த விழுமியங்களைப் போற்றும் பண்பாட்டு மரபின் உருவாக்கத்தால்தான் என்று தன்னுடைய உரையின் முதல்பகுதியை முடித்தார். மணி சரியாக 7.30ஐத் தொட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பேச்சில் மேலும் கீழும் மூச்சு வாங்கியதில், கீழிறங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

பண்பாட்டு மரபின் உருமாற்றம்

30 நிமிட இடைவெளியில் பொங்கல், ரோல் மட்டும் வடை அடங்கிய மினி டிஃபன் சூடான தேநீரோடு வழங்கப்பட்டது. சரியாக  8 மணியளவில் மீண்டும் தொடங்கிய உரை, முதல் பகுதியை விட படுசுவாரஷ்யமாகவும் வேகமாகவும் இருந்தது. தேர் காராக மாறிய உருமாற்றத்தை பண்பாட்டு மரபின் தொடர்ச்சியான உருமாற்றங்களோடு உருவகித்திருந்தார்.

நம்முடைய பண்பாட்டு மரபுகளின் விழுமியங்களை நமக்குத் தொகுத்து தந்தவர்களில் மிக முக்கியமானவர்களாக Indologist என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் அறிஞர்களை நினைவு கூர்ந்தார். நமது பண்பாட்டின் கீழ்மைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதே சமயத்தில் நிறைய அறிஞர்கள் அவற்றை திரித்துமிருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பஞ்சங்களின் நூற்றாண்டாகிய 18ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் துடைத்தழித்து விட்ட காலகட்டத்தில்தான் Indologistகள் தங்கள் பண்பாட்டாய்வை தொடங்கியிருக்கிறார்கள். அழிந்துபோன நம் மரபை மீட்டெடுத்ததில் அவர்களின் பங்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜெமோ, நமது இன்றைய மரபின் கிளைகளை 18ம் நூற்றாண்டை ஒரு ஆரம்பப்புள்ளி (Reference point) யாகக் கொண்டு விவரித்தார்.

முதல் பகுதியில் நமக்குள்ளிருக்கும் நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய இவ்வுரை, இப்போது வாள்கொண்டு அவற்றை கூறிட்டுக் காண்பித்தது. இப்பகுதியின் முடிவில் மிகத்தெளிவாக வலதுசாரி மரபு, இடதுசாரி மரபு, இரண்டுக்கும் நடுநிலைப்பட்ட மிதவாத மரபு என நமது சிந்தனை மரபுகளை பகுத்து தொகுத்துக் கொள்ள முடிகிறது. பண்பாட்டு மரபின் அடித்தளமான விழுமியங்கள் பெரும்பாலும் மதங்களில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மதம் கிட்டத்தட்ட இவ்விழுமியங்களை சடங்கு, தத்துவங்கள் வழியாக மக்களுக்குக் கடத்தும் ஒரு ஊடகம் என்றே உருவகித்திருக்கிறேன். இம்மரபு கீழ்வருமாரு கிளைத்துள்ளது என்ற சித்திரத்தை தன்னுரையில் வரைந்தார் ஜெமோ.

  • மதம் சார்ந்த பண்பாட்டு மரபை கடவுளின் ஆப்த வாக்கியமாக ஏற்றுக்கொள்வது. அதை மாற்றுவதற்கு நம்மால் முடியாது என்று நம்பும் வகை. சங்கர மடங்கள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கங்கள் இதற்கு உதாரணம். இது ஒ்ருவகையான தீவிர வலதுசாரி சிந்தனை மரபென்கலாம்.
  • மதங்களை விமரிசித்து எற்றுக்கொள்ளும் ஒருவகை. விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்களின் வகை. இதை மிதவாத வலதுசாரி மரபென்கலாம்.
  • மரபுகளிலிருந்து தங்களுக்கு தேவையானதை மட்டும் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட பண்பாட்டு வளர்ச்சியை நோக்கி நகரும் சமூக சீர்திருத்த வகை. ராஜா ராம் மோகன்ராய் போன்றோர்களின் வகை. இதை மிதவாத இடதுசாரி மரபென்கலாம்.
  • இங்கிருக்கும் அனைத்து மரபுகளும் ஆதிக்க சக்திகளால் திரிக்கப்பட்டவை. மதம்சார்ந்த கருத்துமுதல்வாதக் கொள்கை என்பதே இந்திய சிந்தனை மரபுக்கு அந்நியமானது என்றும்;பொருள்முதல்வாதமே இங்கிருந்தது என்றும் நம்பும் மார்க்சிய வகை. ரமா பாய், எம்.என்.ராய், தேவிபிரசாத் சட்டோபாத்யா போன்றோர்களின் வகை. இதை தீவிர இடதுசாரி சிந்தனை மரபென்கலாம்.

ஆனால் கலைச்செயல்பாடுகளைப் பொறுத்தவரை, பண்பாட்டு வளர்ச்சியான காரைவிட மரபான தேர் மிக முக்கியமானது. அது ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும். கோயிலில் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது நமக்குக் கிடைக்கும் உணர்வு நாம் நம் மரபுகளின் கட்டமைப்புதான் என்பதை உணர்த்தும் என்றுகூறி தன் உரையை ஜெமோ முடித்திருந்தபோது மணி 9.30ஐத் தொடவிருந்தது. என்னையுமறியாமல் கைகளிரண்டும் தலைக்கு மேலெழும்பி தட்டிக் கொண்டே இருந்தன ஜெமோ பெருமிதத்தோடு மேடையை விட்டு இறங்கும் வரை. கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது. மனம்மட்டும் வெட்டிய சிந்தனைக்கூறுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு ஒரு ஒழுங்கமைவை நோக்கிப் பயணித்தது.