மலிங்காவை இந்தியர்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி சவுரவ் கங்குலியும், நாசர் ஹுசைனும் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டுக்குள் அடைபட்ட குருவிகள் மேலெழும்பி பறக்க முயல்வதுபோல் எழும்பி எழும்பி அடங்கும் தங்கச் சாயம் பூசப்பட்ட தலைமுடியும், பேட்ஸ்மென்களை அவர்களது கிரீஷுக்குள்ளேயே சிறை பிடிக்கும் யார்க்கரும்தான் மலிங்காவின் சிறப்பு அடையாளங்கள். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முதல் ஐவர் பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு சமகாலப் பந்து வீச்சாளர். தன்னுடைய சிறகுகளுக்கு கூடிய விரைவில் ஓய்வு கொடுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. Base Ballன் பந்து எறிதலுக்கும், கிரிக்கெட்டின் பந்து வீச்சுக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் பந்துவீசும் பாணியைக் கொண்டவர். பேட்ஸ்மென்களின் கால் விரல், பேட் மற்றும் அது காக்கும் ஸ்டெம்ப் என மூன்றையும் நொறுக்கித் தள்ளிய இவருடைய பந்து வீச்சுப் பாணி சந்தேகத்தின் பேரில் ICCன் உடலியங்கியல் (Bio-Mechanical) சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

பெரும்பாலும் வேகப்பந்து வீச்சில் திணறும் இந்திய பேட்ஸ்மென்கள் மலிங்காவின் பந்துகளை எதிர்கொள்ளும் விதம் பருகிக் கொண்டிருக்கும் சுவையான தேநீரை சற்றுத் தாழ்த்தி ரசிக்க வைப்பது. வில்லிலுள்ள நாணை முடிந்த அளவு பின்னிழுத்து அம்பெய்துவதுபோல முதுகின் பின்னால் தன்கையை முடிந்த அளவு இழுத்து வீசப்படும் மலிங்காவின் பந்தை மிக எளிதாக எல்லைக் கோட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள் நம்மவர்கள். அதிலும் குறிப்பாக ரோகித் லீக் ஆட்டங்களின் கடைசிப் போட்டியில் மலிங்காவை எதிர்கொண்ட விதம், மலிங்காவை மட்டுமல்ல வரும் அரையிறுதியில் டிரெண்ட் பௌல்ட்டையும் ஆச்சரியப்படுத்தும்.
இரண்டு பேர் மட்டுமே எல்லைச் சாமியாக நிற்க முடியும் முதல் பத்து ஓவர்களில், வலது ஸ்டெம்புக்கு வெளியே எழும்பிச் செல்லும் பந்துகளை பாயிண்ட் அல்லது கவர் திசையில் எந்த எல்லைச் சாமியும் இல்லாத பட்சத்தில் சும்மாவேனும் தூக்கித்தான் அடிப்பார்கள். ஆனால் அப்பந்தையும் தன் இடதுகாலை பக்கவாட்டில் சற்று பின்னால் நகற்றி, தன் உடல் எடை முழுவதையும் அக்காலுக்கு கடத்தி அப்பந்தை பாயிண்ட் திசை தடுப்பாளரையும், பேக்வர்ட் பாயிண்ட் திசை தடுப்பாளரையும் ஊடறுத்துச் (அல்லது பிளந்து) செல்லுமாறு எல்லைக் கோட்டிற்கு அனுப்புவது ரோகித் ஏன் தன்னுடைய 5வது சதத்தை ஒரே உலகக்கோப்பையில் பெற்றிருக்கிறார் என்பதற்கானச் சான்று. தவான் தன் கால்களை பந்துகளுக்கு ஏற்றவாறு நடனமாடச் செய்வதைப்போல ரோகித் செய்வதில்லை என்றாலும், அவ்வப்போது அவராலும் இம்மெல்லிய நடனங்களை நிகழ்த்திக் கொள்ள முடிவது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் இருந்த மிகப்பெரிய இடைவெளியை நி்ரப்பி சரி செய்திருக்கிறது. ராகுலின் எழுச்சியும், ரோகித் தன்னுள் அடைபட்டு ஆடும் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தியிருக்கிறது. இவர்களோடு கோலியும் சேர்ந்து மும்மூர்த்திகளாய் இந்தியாவின் பேட்டிங்கைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

நடுவரிசையில் இருக்கும் தொய்வு ரிஷப், தினேஷ் என்று சரி செய்யப்பட்டதுபோல் தோன்றினாலும், மும்மூர்த்திகளும் ஒரே நேரத்தில் கைவிடும் பட்சத்தில் 50 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் செல்லும் தகுதியும் நுட்பங்களும் நிறைந்த ஒருவராக கேதார் மட்டுமே தெரிகிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கும் இதே நடுவரிசை பிரச்சினை உண்டு. நியூசிலாந்திற்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையிலும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த உறுதியான பேட்டிங் வரிசையை குலைத்துப்போடும் தகுதி பும்ரா&Coவிற்கு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. நியூசிலாந்தை குலைப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவையோ இங்கிலாந்தையோ குலைப்பது ஒன்றும் அசாத்தியமான காரியமல்ல. இந்தியா உலகக்கோப்பையை திரும்பப்பெறும் வாய்ப்பும் மிக சாத்தியமான ஒன்றாகவே தோன்றுகிறது. இந்திரா, மன்மோகன் வரிசையில் மோடியும்…
Come On India…