ஆத்திகமும் அண்ணாவும்

கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை; கடவுள் தான் இவ்வுலகம் என மகாயான பௌத்தம் சொல்லும். இது நாத்திகமா? இல்லை ஆத்திகமா?. கடவுள் இல்லை  என்பது நாத்திகமானால், கடவுள்தான் இவ்வுலகமாக இருக்கிறார் என்ற பௌத்தம் ஆத்திகம்தான். கடவுள்தான் இவ்வுலகைப் படைத்தார் என்பது ஆத்திகமானால், பௌத்தம் நாத்திகம்தான். 

தலைசுற்ற ஆரம்பிக்கிறது. கடவுள் இல்லை என்பதும்; கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை என்பதும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும். எளிய மனங்கள், தங்கள் நிலையாமையை கடந்து செல்வதற்காக உருவாக்கிக் கொண்ட கடவுள் என்ற கருத்தாக்கத்தை விளக்க முயன்ற வைதீகமும், அது கலந்த மகாயான பௌத்தமும் நம்மை குழப்பியடிக்கின்றன. கடவுள்தான் இவ்வுலகை படைத்தார் என்பதை அறுதியிட்டு கூறுகின்றன வைதீகமான இந்து மதமும், பிற தீர்க்கதரிசிகளின் மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவைகளும். மகாயான பௌத்தம் கடவுளின் படைப்புத் திறனை மறுதலித்து அவர்தான் இவ்வுலகமாக அல்லது புத்தரின் உடலாக (தர்மகாயம்) இருக்கிறார் என்கிறது. 

இதை எளிமைப்படுத்த முயன்றால், கடவுளுக்கு படைப்புச் சிறகுகள் பொருத்தும் மதங்கள் ஆத்திக வகை; அச்சிறகுகளை கத்தரித்து விடும் மதங்கள் நாத்திக வகை. ஆத்திகம், நாத்திகம் இரண்டிலுமே கடவுள் உண்டு என்பது இதுவரை நாம் கொண்டிருக்கும் புரிதல்களுடன் ஒப்பிடும்போது வேடிக்கையான ஒன்று. இந்த வேடிக்கையை போக்க வேண்டுமென்றால், பௌத்தத்தை ஆத்திக மதமாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தான், பெரியாரின் முதன்மைச் சீடரான அண்ணா ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ (திருமூலரின் வாக்கு) என்று ஆத்திகத்தையும் மதச்சார்பின்மையையும் தனது பாதையாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். திராவிட இயக்கத்தவரைப் பொறுத்தவரை, என்னளவில், பெரியாரின் மேல் கொண்டிருக்கும் மரியாதையும்; கடவுள் நம்பிக்கையும் இணையானவை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைப் புரிந்து கொண்டதால்தான், அண்ணா பெரியாரையும் விட்டுத் தரவில்லை. மதங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடவில்லை. 

இது அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் நினைவாக எழுந்த பதிவு மட்டுமே. அண்ணா பெரியாரை விட்டு பிரிந்த காலத்தில் பெரியாரின் நாத்திகத்திற்கு தூண்டுகோலாக இருந்தது பிராமண எதிர்ப்பு மட்டும்தானா? இல்லை அயோத்திதாசர் வழி வந்த பௌத்த மதப்பற்றும் ஒரு காரணமா என்று தெரியவில்லை.

Advertisements

சிவனின் சந்திரன்

தோல்விகளைக் கொண்டாடத் தெரிந்த சமூகங்கள் முதிர்ச்சியானவை என்பார்கள். மோடியின் தோள்களில் புதைந்திருந்த சிவன் கலங்கியிருந்தாலும், அந்த கண்களின் தீர்க்கத்திற்கு குறைவில்லை. இவர் வகிக்கும் பொறுப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தாண்டி தேவைப்படுவது ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்ள உதவும் அர்ப்பணிப்பும், அதிலிருந்து எழும் பொறுப்புணர்ச்சியும்தான். இவ்விரண்டும்தான், கலங்கியிருந்த சிவனின் கண்களில் நிரந்தரமாக குடியிருக்கும் அந்த தீர்க்கத்திற்கு காரணமாக இருக்க முடியும். இதுபோன்ற தீர்க்கமானவர்களின் தோல்விகளை ஒட்டுமொத்த இந்தியாவும் தாங்கிப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. 

சந்திராயனின் ஒட்டுமொத்த பயணத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த திரைகள் அடங்கிய அந்த பிரமாண்ட அறையில் ‘Sky is no longer the Limit’ என்ற வாசகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. வானவியலைப் பொறுத்தவரை நம்முடைய பிரத்யட்ச அறிவைத் (புலனறிவு) தாண்டிய அனுமானங்கள்(ஊகங்கள்) தான் அதன் எல்லைகளைத் தீர்மானிக்கின்றன. இந்த எல்லைகளைத் தொடர்ந்து மீறும் ஆளுமைகளில் ஒருவர் சிவன். இது போன்ற ஆளுமைகளை தொடர்ந்து உற்பத்தி செய்யும் ISRO, DRDO போன்ற அமைப்புகளின் நிர்வாகத் திறனும், பயிற்சி முறைகளும் கூடுமானவரை பிற அரசு அமைப்புகளாலும் பின்பற்றப்பட வேண்டும். 

கண்டுகொண்டேன்

செட்டிநாட்டு வீடுகளுக்கே உரிய பிரமாண்ட முகப்பு கொண்ட வீடு. தெருவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்தாறடி உயரத்தில் வீட்டின் நுழைவாயில். இரண்டாள் உயரமிருக்கும்,  நுழைவாயில் கதவை அடைவதற்கான அப்படிகளின் அகலம். எரிக்கும் காரைக்குடி வெயிலிலும் தான் அணிந்திருந்த இரண்டாம் அடுக்கு மேலாடையை சரி செய்துவிட்டு, கலைவதற்கு வாய்ப்பேயில்லாத தலைமுடியை கலைந்ததாய் நினைத்து சரி செய்து கொண்டே படிகளில் ஏறியவரை  மரியாதையும் வெட்கமும் கலந்த புன்னகையோடு வரவேற்கிறார் ஸ்ரீவித்யா.

சினிமாவிற்காக அவ்வீட்டை வாடகை பேச வந்திருந்த தனக்கு கிடைத்த மரியாதையால் புழங்காகிதமடைகிறார் அஜீத். ஆனால் அம்மரியாதைக்குப் பின்னால், தன் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளையாவது தட்டிப்போகாமல் அமைய வேண்டும் என்ற ஏக்கம்; இவளுக்குப்பின் பிறந்த இரண்டு மகள்களை கணவனை இழந்த நான் எப்படி கரை சேர்க்கப் போகிறேன் என்ற பதற்றம் என நிறைய சோகங்கள் அணி வகுத்து நிற்பதை பார்வையாளர்களான நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

வீட்டைப் பார்க்க வந்தவரை தன்னைப் பார்க்க வந்ததாய் நினைத்து தன் கடைசி ஆழம்வரை நாணத்தால் சுருங்கி நிற்கிறார் தபு. அவருடைய உயரத்திற்கு அந்த நாணம் செயற்கையாக இருந்தாலும், ரசிக்கும்படி இருந்தது. மிகையற்ற ஒப்பனையில் வீடும் தபுவும் ஜொலிக்க, தான் அமெரிக்காவில் கற்றுக்கொண்ட அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி தபுவை   Yes சொல்ல வைக்கிறார் அஜீத். தன்னுள்ளே ஒழிந்து விளையாடி அசௌகரியமூட்டிய பரவசத்திலிருந்து விடுதலை பெற வைத்த Yes என்ற அந்த வார்த்தைக்கு மனதுக்குள் நன்றி சொல்லியவாறே, இன்னமும் குறையாத நாணத்துடனும், அடங்கிக் கொண்டிருக்கும் படபடப்போடும் உயிர்பெற ஆரம்பித்த சிலையாய் நின்றிருந்தாள் சௌம்யா. ஒரு Yes என்ற சொல்லுக்குப் பின்னால் இத்தனை உணர்ச்சிகள் விரிந்திருப்பதை உணராத மனோகர், வீட்டிற்கான நாள் வாடகை குறித்து பேச ஆரம்பித்ததும் அதுவரை அங்கு நிலவிய பரவசம் வடிய ஆரம்பித்து வெடித்தழுகிறாள் சௌம்யா.

இவ்வுலகில் எனக்கென அமைந்த எதையுமே நான் தேர்வு செய்யாத போது, கணவனை மட்டும் நான் ஏன் தேர்வு செய்ய வேண்டுமென்ற ஒரு உலகியல் மறுப்பிற்குள் தன்னை அடைத்துக் கொண்ட சௌம்யாவை, மெல்ல மெல்ல விடுவிக்கிறார் இயக்குனர் மனோகர்.

மீனாட்சி, சௌம்யாவின் எதிர்துருவம். சௌம்யாவின் ஆழுள்ளத்தில் மட்டுமே நிகழும் பரவசங்கள், மீனாட்சியின் பூனைக் கண்களிலிருந்து, பால் முகத்தில் படர்ந்திருக்கும் பூனைமயிர்க்கால் வரை நிகழ்கிறது. தபு போல், தன்னுடைய அனைத்து பரவசங்களையும் Yes என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சுருட்டி வைப்பவள் அல்ல ஐஸ்வர்யாராய். தன்னுடைய பரவசத்தை வெளிப்படுத்த கம்பனிலிருந்து பாரதி வரை சொற்களைத் தேடும் மீனாட்சி, நினைவுகள் கடந்த காலத்திற்குரியவை; சிந்தனைகள் எதிர்காலத்திற்குரியவை என இரண்டையும் ஒதுக்கி நிகழ்காலத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கிறார். மழையில் நனைந்து அவளுடைய சிறகுகள் விரிக்க முடியாமல் போகும் போதெல்லாம், அவற்றை கோதி உலர்த்தி மீண்டும்  சிறகடிக்க வைக்கிறார் பாலா என்ற ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர். 

இப்படி இருவேறு துருவங்களான தபுவும், ஐஸ்வர்யாவும் மட்டும்  தங்களுடைய மீட்சியை மம்முட்டி மற்றும் அஜீத் வழியாக கண்டடையவில்லை. வாழ்க்கையில் சாதித்துக் காட்டுவது மட்டுமே ஆண்மையின் அடையாளம் என்ற சூழலில் சிக்கித் துவண்டு போகும் மம்முட்டியும், அஜீத்தும் கூட தங்களுக்கான மீட்சியை இவ்விரு பெண்களின் வழியே தான் கண்டடைகிறார்கள்.