
ராஜ் கௌதமனில் தொடங்கிய மார்க்சிய ஆய்வுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அபுனைவு கட்டுரைகளின் வாசிப்பு, ந.முத்து மோகன், தேவிபிரசாத் சட்டோபாத்யா என பயணித்து ஆ. சிவசுப்ரமணியம், ராஜேந்திர சோழன், வெங்கடாசலபதி என நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது. அறிவார்ந்த சமூகங்களால் தவிர்க்கவேப் படமுடியாத இவ்வாளுமைகள் அனைவரும் எனக்கு அறிமுகமானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வெவ்வேறு முக்கிய நிகழ்வுகளின் வழியாகத்தான். கிட்டத்தட்ட, இவ்வாசிப்பு புனைவிலிருந்து என்னை வெகுவாக விலக்கி வைத்திருந்தது. ஜெயமோகனின் கிராதம் மட்டுமே இந்த ஓராண்டில் என்னுடன் பயணித்த புனைவு நாவல்.
இந்த அபுனைவு மனநிலையில் ஒரு அறிமுக ஆசிரியரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளைப் பற்றிய மதிப்புரையை ஜெயமோகன் போன்ற இலக்கிய பேராளுமைகள் நிறைந்த அரங்கின் மேடையில் நின்று ஒரு 10 நிமிடங்கள் பேசமுடியுமா என்ற சந்தேகமும் பயமும் வலுவாக எழுந்தது. இந்த வாய்ப்பை எனக்கு தந்திருந்த சென்னை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் குருசாமியான ஜாஜா என்ற ராஜகோபால், ‘பேச வேண்டியதை மூன்று தலைப்புகளாக பகுத்துத் தொகுத்துக் கொள்ளுங்கள்…’ என்று என்னுடைய சந்தேகத்தைப் போக்கி நம்பிக்கையூட்டினார். வேலை சார்ந்து சகபணியாளர்கள் நிறைந்த கூட்டங்களில் பேசியிருந்தாலும் இதுவரை மேடை ஏறியதில்லை. அதிலும் இலக்கியமேடை மிகப் புதிது என்பதால் பயமும் நடுக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நடுக்கத்தைப் போக்கியதில் முக்கிய பங்களித்தது சமூக ஊடகப் பிரபலங்களான Connor Neil மற்றும் Praveen Wadelkar. இவர்களுடைய மேடைப்பேச்சைப் பற்றிய You Tube உரைகள் மிகப் பிரசித்தியானவை. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது தினமும் ஒரு 5 நிமிடங்களாவது மேடையில் பேசப் போகின்றவற்றை ஒரு web cam முன்பாகப் பேசி பார்த்துக் கொள்வது. அப்படிப் பேசி பதிவு செய்த காணொளியை நட்பு வட்டாரங்களோடு பகிர்ந்திருந்தேன். நிறைய பொருத்தமான பரிந்துரைகளும், திருத்தங்களும் அவர்களிடமிருந்து வந்தன.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு, வாசகர்களாக இருந்து எழுத்தாளர்களாக பரிணமித்திருந்த பத்து நண்பர்களின் முதல் படைப்பை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. எனக்கு நரேன் அவர்கள் எழுதிய புலம்பெயரிகளைப் பற்றிய சிறுகதை தொகுப்பான (ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள்) ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ என்ற நூலைப் பற்றி பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. விழா தொடங்கும் நாளின் காலையில் ஜெயமோகன் மற்றும் வெளியூரில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் வாசகர்கள் சென்னை வந்திருந்தனர். ஜெயமோகனுடனான விழாவிற்கு முந்திய இலக்கிய அரட்டைகளை நான் எப்போதுமே தவறவிட்டதில்லை. நம் இலக்கிய ரசனையை கூர்படுத்துபவை இவ்வரட்டைகள். ஆனால் web cam முன் ஒரு மூன்று தடவையாவது கட்டுரையாக எழுதியிருந்த என்னுடைய உரையை படிக்க வேண்டி இருந்ததால் அவ்வரட்டைகளை தவற விட்டேன்.
என்ன மாதிரி உடையணிந்து செல்வது என்று குழம்பி வழக்கம் போல் வெள்ளிக்கிழமைகளில் அணியும் semi formal உடைக்குள் என்னை மாட்டிக்கொண்டு தலைவாரிய போது காதை ஒட்டியிருந்த தலைமுடி படியமறுத்து அடம்பிடித்தது. பக்கத்தில் இருந்த Beauty Parlourல் தலைமுடியைக் கழுவி சில பல creameகளின் உதவியால் அதன் அடத்தை குறைத்து விழா அரங்கை எட்டியபோது சௌந்தரும் சண்முகமும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். விழா தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சற்று பராமரிப்பு குன்றியிருந்தாலும், சென்னையின் வணிக மையமான தி.நகரில் அமைந்திருக்கும் சர். பிட்டி தியாகராஜர் அரங்கம் மிகப் பொலிவுடனும் கம்பீரத்துடனும் இருந்தது. எழுதி கையில் மடித்து வைத்திருந்த உரையை நிமிடத்திற்கு ஒருமுறை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு பக்கம் நிரம்பியிருந்த தாள்கள் வெறுமையாகவே காட்சி அளித்தன. எதிர்கொண்ட ஒவ்வொருவரையும் நோக்கி என் உரையைக் கேட்பதற்காகவே வருகிறார்கள் என்ற பிரமையோடு புன்னகைத்தேன். இருந்த பதட்டத்தில் அரங்கு முழுதும் நிறைந்து விழா தொடங்கியிருந்த பிரக்ஞை கூட இல்லாததைக் கண்ட எரிச்சல்தான் என் பதட்டத்திற்கு விழுந்த முதல் அடி. கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுகளில் கரைய ஆரம்பித்தது பதட்டத்தையும், தன்னம்பிக்கை குறைவையும் இல்லாமல் ஆக்கியது.
பல்வேறு தரப்பட்ட சிறப்பான உரைகளுக்குப் பிறகு, எட்டாவதாக நான் பேச அழைக்கப்பட்டேன். அறிமுக எழுத்தாளர்கள் அனைவரும் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் நரேன் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டது மிகவும் அனிச்சையாக நடந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னுடைய ஒத்திகை உரையில் மேடையில் இருப்பவர்களை அவ்வப்போது பொருத்தமான தருணங்களில் திரும்பிப் பார்ப்பதைப் பற்றிய சுவடேயில்லை. ஆனால் இயல்பாகவே என்னுடைய உரையில் அது நடந்தது. இதுதான் மேடை நமக்குத் தரும் நம்பிக்கைபோல. மேடையில் ஏறி மைக் பொருத்தப்பட்டிருந்த மேஜையை இருகைகளாலும் பற்றிக் கொண்டபிறகு, அரங்கினுள் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என் உரைக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்ற என்னுடைய ஆரம்பக்கட்ட பிரமை உண்மைதான் என்ற மற்றொரு பிரமை தந்த நம்பிக்கையில் உரையைத் தொடங்கினேன். மிகக் கூரிய வாசகர்களையும், ஆகச் சிறந்த இலக்கிய மேதைகளையும் கொண்ட அரங்கின் மேடையில் பேசுகிறோம் என்பதே, என்னுடைய ஒத்திகை உரையில் இருந்து பெரிதும் மேம்பட்ட ஒரு உரையை ஆற்றவைத்தது. உரையை முடித்து இறங்கியதும் கிடைத்த வாஞ்சையான மற்றும் அழுத்தமான கைகுலுக்கல்களும், புன்னகைகளும் அதை உறுதி செய்வதைப் போல இருந்தது.
மதிப்புரையின் காணொளி:
மதிப்புரையின் கட்டுரை வடிவம்: