
அறிய முடியாத ஒன்றை நோக்கி நம் ஆற்றலை எய்துவதை விட, அறிய முடிபவகைகளை நோக்கிய பயணத்தில் நம் ஆற்றலைச் செலுத்துவதுதான் விவேகமான செயல் என தாங்கள் உணர்ந்து கொண்டதாக வஹ்னர், சகாதேவனிடம் சொல்கிறார். இவ்வுலகம் ஒரு மாயை; அதாவது இங்குள்ள எந்த பொருளும் அர்த்தமற்றவை அல்லது நாம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தத்தில் அது இல்லை என்ற மாயாவாதத்தை (கருத்து முதல்வாதம்) நம்பும் வைதீகப் பார்ப்பனர்களிடமிருந்து முரண்பட்டு நிற்கும் வேளாப் பார்ப்பனர்களைத் சேர்ந்தவர் இந்த வஹ்னர் என்கிறது ஜெயமோகனின் வெண்முரசு வரிசையில் வரும் ‘நீர்க்கோலம்’ எனும் நாவல்.
இப்புவியில் உள்ள பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்கான அன்னமாக, மருந்தாக, அரணாக மாற்றுவதை நோக்கித்தான் நம் அறிவும், ஆற்றலும் செயல்பட வேண்டும் என்பதை தங்களுடைய கொள்கையாகக் கொண்ட இந்த வேளப் பார்ப்பனர்களை பொருள் முதல்வாதிகளாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் தன்னளவில் சாஸ்திர அறிவுடையவர்களாக மட்டுமில்லாமல், பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களுடைய நுண்ணுணர்வுகளை மொழியாக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பெரும் பணியிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பொருட்டுதான் வஹ்னர், ஒரு அருகராக தன்னை உருமாற்றி விராடபுரிக்கு வந்திருக்கும் சகதேவனைச் சந்திக்கிறார். சகதேவனின் நிமித்திக (பின்வருவனவற்றை முன் கூட்டியேயறியும் சோதிட சாஸ்திரம்) நுண்ணறிவு மொழிவடிவில் ஆவணப்படுத்த வேண்டும் என்று கோரி நிற்கிறார்.
அத்தனை சாஸ்திரங்களையும் ஒரே இடத்தில் தொகுக்கும் இப்பணி, அவற்றிற்கிடையே இருக்கும் தொடர்புகளை அறியும் அரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. இதன் மூலம் மானுட அறிவின் சாத்தியங்களை விஸ்தரித்துக் கொள்ள முடியும் என்கிற வஹ்னரின் கூற்றுதான் ஒரு சமூகம் தன்னை வலுவான அறிவுத்தரப்பாக்கி கொள்வதற்கான முதல்படி.
மாற்றுருக் கொள்ளுதல்
பாண்டவர்களுடைய தண்டனையின் கடைசிப் பகுதியான தங்களை உருமாற்றி வாழும் விராடப் பருவத்தை சித்தரிக்கிறது நீர்க்கோலம். இதுநாள் வரை பிறரால் சமைக்கப்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட உருவத்தை நீரில் வரைந்த கோலமாய் அழித்து மாற்றுரு கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். 12 வருட வனவாசம், இதை எதிர்கொள்வதற்கு அவர்களைப் பண்படுத்தியிருந்தது.
இருத்தலை விட ஆதலில் தான் நம்முடைய ஒட்டு மொத்த ஆற்றலும் செலவிடப்படுவதாக சொல்லும் புகழ் பெற்ற தத்துவ மேதையான ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. “Journey of becoming is always stress ful and wastes our energy, where as journey of unbecoming to find who really you are is blissful..” இந்திய மெய்ஞான மரபுகளில் ஒன்றான யோகாச்சார மரபில் இருந்து வரும் ஜெ.கி. யின் சிந்தனையிது. பாண்டவர்கள் மேற்கொள்ள இருக்கும் பயணமும் இந்த ‘தங்களைக் களைதல்’ தான் (journey of unbecoming).
தனக்கான மாற்றுரு
இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்ட உள்ளம், தன்னை வெளிப்படுத்திக் கொள்வது உருவங்களின் வழியாகத்தான். ஆனால், அதே சமயத்தில் தனக்கான உருவை, அவ்வளவு தன்னிச்சையாக அடைந்து விடும் சுதந்திரம் தனக்கில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் புத்திசாலித்தனமும் அல்லது லௌகீக (அல்லது புற) எதார்த்தமும் கொண்டதாகத்தான் நம்முள்ளம் படைக்கப் பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தான் விரும்பும் உருவத்திற்கு கிடைக்கும் புறக்கணிப்புகளால் தான் விரும்பிய அவ்வுருவத்தையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது இவ்வுள்ளம்.
என்னுடைய சுயம் இது என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களுக்கு, அந்த சுயமே அவரைச் சுற்றி உள்ளவர்களால் அவருக்கு சமைத்து தரப்பட்டதுதான் என்று உணர்ந்து கொள்ளும் தருணம்தான் அவரின் வாழ்வில் நிகழும் ‘WOW moment…..’ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏதாவது ஒன்றை வெறுத்து, மறைத்துதான் ஒவ்வொருவரின் சுயமும் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் என்ற உளவியலை மிக நுட்பமாக இந்தாவல் பாண்டவர்களின் உருமாற்றத்தின் வழியாக சித்தரித்திருக்கிறது.
தனக்கான மாற்றுரு, தான் விரும்பி வெறுத்த ஒன்றாகத் தான் இருக்க முடியும் என்ற நிதர்சனத்தை வழக்கம் போல் தருமர் & Co ஒரு குருநிலையில் தங்கிக் கண்டு கொள்கிறார்கள். அந்த மாற்றுருவில் மட்டுமே தங்களால் இயல்பாக வெளிப்பட்டு தாங்கள் இது வரை போர்த்தியிருந்த அரசர்களுக்கான உருவத்தை, அது வெளிப்படுத்தும் உடல் மொழியை, அதைத் தாங்கிப் பிடித்திருக்கும் உள்ளத்தை களைய முடியும் என்றுணரும் தருணம்தான் விராட பருவத்தில் பாண்டவர்களுக்கு கிட்டிய மெய்மை எனலாம். மறைந்திருந்து வாழ்தலை விட, தன்னை தான் விரும்பிய வேறொன்றாக வெளிப்படுத்தி வாழ்வதே இந்த ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையை அவர்களுக்கு எளிமையாக்கும் என்ற புரிதலோடு விராடபுரி நோக்கிப் பயணிக்கிறார்கள்.
இருபாலினத்தவரும் உருமாற்றமும்
இந்நாவலை எழுதிய ஜெயமோகன் அவர்களின் இன்னொரு நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரல்’ காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. கடலின் மறு எல்லையைத் தொட்டு விடலாம் என்ற நப்பாசையில் நீந்திக் கொண்டிருப்பவர்களோடு புரோலட்டேரியன்களை (கம்யூனிச அறிவுஜூவிகள்) ஒப்பிட்டிருப்பார். பொன்னுலகக் கனவிற்காக தாங்கள் செய்யும் தியாகங்கள் அனைத்தும் வீண் என்றுணர்ந்து திரும்பி விடலாம் என்றெண்ணும் போது, தாங்கள் நின்று கடலைகளை ரசித்துக் கொண்டிருந்த கரை வெகு தொலைவில் இருப்பதைக் கண்டு அயர்ச்சி கொள்கிறார்கள்.
இதே அயர்ச்சிதான் பாண்டவர்களுக்கும் நேர்கிறது. கரையில் இருந்து அலைகளை ரசிப்பதைத் தான் அவர்கள் உள்ளம் விரும்புகிறது. ஆனால் புற வாழ்க்கை அவர்களை சாகசக்கார்களாக்கி நடுக்கடலில் விடும்போது தங்கள் உள்ளம் விரும்பிய, ஆனால் புறத்தால் வெறுத்தொதுக்கப்பட்ட அவ்வுருவத்தை அடைவதற்கும் ஒரு முயற்சி தேவைப்படுகிறது. வேலைக்கார்களின் உடையை அணிவதால் மட்டுமே அரசன் வேலைக்காரனாகி விட முடியாது. தான் உள்ளம் விரும்பிய உருவத்தை அடைவதில் உள்ள அயர்ச்சியைப் போக்குவதற்காகத்தான் இரு பாலினத்தவர் பற்றிய சித்திரங்கள் இந்நாவலில் தொடர்ந்து வருவதாக எண்ணுகிறேன். அதிலும் குறிப்பாக பிருகநந்ளை என்ற புரவியூர்தலும் (குதிரையேற்றமும்), நடனமும் தேர்ந்த இரு பாலினத்தவர் பற்றிய சித்தரிப்புகள் ஜெயமோகன் அவர்கள் ஏன் ஒரு அசாதாரணமான படைப்பாளி என்பதற்கானச் சான்று. குறிப்பாக புரவியுடன் ஒன்றுதல் மற்றும் நடனம் பற்றிய விவரணைகள் நம்மை புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கின்றன.
பிருகநந்ளையின் குரலுக்கு பெண்கள் காற்றிலலையும் சுடர் என செவிமடுக்கிறார்கள். ஆணின் அழகும், பெண்ணின் அழகும் ஒரு சேர தன் உருவில் கொண்டவருடைய உள்ளத்தின் ஒத்திசைவால் ஆண்களையும் பெண்களையும் ஒரு சேர ஈர்க்கிறார். உள்ளம் மாறும் வேகத்திற்கு தன் உருவையும், உடல்மொழியையும் மாற்றிக் கொள்ளும் திறம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் இருபாலினத்தவர். இவர்களின் அயர்ச்சியோடு ஒப்பிடும்போது புரோலட்டேரியன்களின் கரைதிரும்பும் முயற்சியும், பாண்டவர்களின் உருமாற்ற முயற்சியும் அத்தனை பெரிதல்ல.
நளன்-தமயந்தி
இந்நாவலின் மிக முக்கிய பகுதியாக நாவல் தோறும் ஆங்காங்கே தேவைப்படும் தருணங்களில் எல்லாம் எழும் இக்கதை மகாபாரதம் அளவிற்கே ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. கணந்தோறும் எழும் குலச் சண்டைகள், தங்களுடைய நிலைய உயர்த்திக் கொள்வதற்காக நடத்தப்படும் யுத்தங்கள் என விரிவாக இந்நாவலில் இக்கதை பேசப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இந்நாவலை முழுதுமாக படித்து முடிக்கும் போது, இதைப் பற்றி இன்னுமொரு நீண்ட பதிவை எழுத முடியும் என்று தோன்றுகிறது.
[…] via நீர்க்கோலம் – A Journey of Un-becoming — முத்துச்சித… […]
LikeLike
[…] நீர்க்கோலம் – A Journey of Un-becoming […]
LikeLike