கலை இலக்கியம் பொருளாதாரம்

கலை மற்றும் இலக்கியம், உற்பத்தியாளர்களை மையமாகக் கொண்ட செவ்வியல் பொருளாதாரத்தை (Classical Economics)அடிப்படையாகக் கொண்டுள்ளது என்ற எண்ணம் தோன்றுகிறது. உற்பத்திப் பொருளின் விலை அல்லது மதிப்பு முழுவதுமாக அதனைப் படைப்பவர்களை மையமாக் கொண்டே மதிப்பிடப்படுவது தான் செவ்வியல் பொருளாதாரம். வாசகனை அல்லது வாங்குபவனை அல்லது நுகர்வோனை மையப்படுத்தும் பொருளாதாரக் கொள்கை நவசெவ்வியல் பொருளாதாரம் (Neo Classical Economics) என வகைப்படுத்தப் படுகிறது.

கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாக நம்மை ஆக்கிரமித்திருப்பது இந்த நவசெவ்வியல் கொள்கை. வாடிக்கையாளர் தான் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கும் சக்தியே தவிர, உற்பத்தியாளரல்ல என்ற கொள்கைக்கு தன்னை ஆட்படுத்தாமல் ஓரளவுக்காகவாது தன் படைப்பு சக்தியின் மேல் செருக்கு கொண்டிருக்கச் செய்வது கலை  மற்றும் இலக்கியம் மட்டுமே என்று தோன்றுகிறது.  பிறதுறைகளைப் போல, கலையும் இலக்கியமும் நவசெவ்வியல் பொருளாதாரம் உருவாக்கியிருக்கும் வணிகப் போக்கை (Customer centric) நோக்கி நகர்ந்திருந்தாலும், படைப்பை மையமாக் கொண்டிருக்கும் செவ்வியல் பொருளாதாரத்திலும் தன்னுடைய இன்னொரு காலை ஊன்றியிருக்கும் சுரத்தைப் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் படித்த மதார் அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது…

காலம் கையில்

ஓர் அம்பைத் தந்தது

சீவிச்சீவிச்சீவிக்

கூர்மையாக்கினேன்

கூரேறியேறி

கரைந்தது

இந்த அம்பினால் என்ன பயன் என்ற கேள்வியை,  இவ்விரு பொருளாதாரக் கொள்கைகளிடமும் எழுப்பினாலும் விடை கிடைப்பதில்லை. பயன் மதிப்பற்ற அல்லது விற்கப்படாத எந்தப் பொருளையும் இவ்விரு கொள்கைகளும் பொருளென்று கருதுவதில்லை. இக்கேள்விக்கு விடை காண இவ்வுலகம் மீண்டும் தத்துவத்திற்கே திரும்ப வேண்டியிருக்கிறது.

Inspired from நவசெவ்வியல் பொருளியல் by S.Neelakandan.

Leave a comment