
தனிமனிதன் என்பவன் சிக்கலான உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் செயல்பாடு மட்டுமே
என்கிறார் கார்லோ ரொவெல்லி என்ற சமகால அறிவியல் மேதை. இத்தாலியைச் சேர்ந்தவர். Seven Brief Lessons on Physics என்ற மிகவும் பிரசித்திபெற்ற அவருடைய புத்தகத்தை தமிழில் சங்கரன் ரவிச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார். அறிவியலும், தத்துவமும், கூடவே இலக்கியத் தரமும் கொண்ட இப்புத்தகத்தை மொழிபெயர்த்தது சங்கரன் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகப் பெரிய திறப்புக்களை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. இப்புத்தகத்தின் இலக்கியத்தரம் தான் இயற்பியல் பற்றி மிகக் குறைந்த அறிதலைக் கொண்டவர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அதுவே, சிக்கலான பொதுச்சார்புக் கொள்கையையும் (Einstein’s General Relativity theory), துளிம இயக்கவியலையும் (Quantum Mechanics) சற்று நெருங்கிப் புரிந்து கொள்வதற்கான உழைப்பை அயர்ச்சியின்றி அவர்களைத் தரச் செய்கிறது. ‘The physics has finally found its Poet..’ என்ற இப்புத்தகம் பற்றிய அவதானிப்பை தமிழ்மொழி பெயர்ப்பும் தக்கவே வைத்திருக்கிறது.
அறிவியலுக்கென தனிநடை இருந்தாலும், இப்புத்தகம் பேசும் விஷயங்கள் அறிவியலின் எல்லையத் தாண்டி தொலைவில் இருப்பவை. அறிந்தவற்றின் விளிம்பிலிருந்து, அறியாதவற்றை நோக்கி நம்மைச் செலுத்துவதற்கு இப்புத்தகத்தின் இலக்கியநடை நமக்கு உதவுகிறது என்று எண்ணுகிறேன்.
பிரபஞ்சம் – ஒரு தொடர் நிகழ்வு
ஆரம்ப காலகட்டத்தில் கீழே பூமி மேலே வானம் என்ற புரிதல் மெல்ல மெல்ல மாறி பூமிக்கு மேலும், கீழும் வானம் தான் என்றானது. வானத்தில் அல்லது வெளியில் (space) மிதக்கும் இந்த பூமியைச் சூரியன் சுற்றி வருகிறது என்பது மாறி பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றானது. கலிலியோவின் இந்த சூரியமையக் கொள்கையை சற்று மாற்றி, பூமி சூரியனை வட்டப்பாதையில் அள்ள நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்றார் கெப்ளர். இவ்விரு முரணான கொள்கைகளையும் இணைத்தே நியூட்டன் ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்ற முரணியக்கத்தை கார்லோ சுட்டிக்காட்டுகிறார்.
இது கிட்டத்தட்ட, ஜெர்மானிய தத்துவ அறிஞரான ஹெகலின் இயங்கியலை நினைவுகூரச் செய்தது. Thesis + Antithesis = Synthesis. இந்த Synthesis காலப்போக்கில் இன்னொரு Thesis ஆக மாறுகிறது. அது தனக்கொரு Antithesisயும் உருவாக்கிக் கொள்கிறது. இயற்பியல், Quantum Mechanics வழியாக, தற்போது அடைந்திருக்கும் புரிதலான இப்பிரபஞ்சம் ஒரு தொடர்நிகழ்வு என்பதைத் தான் ஹெகலின் இயங்கியல் நினைவு படுத்தியது.
வளையும் வெளி
முரணியக்கம் தொடர்கிறது. பிரசித்தி பெற்ற இந்த நியூட்டனின் ஈர்ப்புவிசை சார்ந்த இயக்கவியலோடு எய்ன்ஸ்டின் முரண்படுகிறார். காலம் அனைவருக்கும் பொதுவானதல்ல என்ற தன்னுடைய முதல் சார்புக்கொள்கையை ஈர்ப்பு விசையுடன் இணைத்து பொதுச்சார்பு கொள்கையை உருவாக்குகிறார்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்குக் காரணம், இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள ஈர்ப்புவிசை என்பது தான் நியூட்டனின் முதல் விதி. சூரியன் தன்னை நோக்கி பூமியை இழுக்கவில்லை என்றால் பூமி நேர்க்கோட்டில் தான் பயணித்திருக்கும். எய்ன்ஸ்டினின் சார்புக் கொள்கைப் படி, மலையுச்சியில் வாழ்பவருக்கு, அடிவாரத்தில் வாழ்பவரை விட காலம் விரைவாகச் செல்லும் என்பதோடு நியூட்டனின் இந்த ஈர்ப்புவிசைக் கொள்கை எவ்வாறு முரண்படுகிறது என்பது எனக்கு புரிபடவில்லை. இருந்தாலும், இந்த முரண்பாட்டில் உருவான, சூரியன் பூமியை தன்னை நோக்கி இழுக்கவில்லை, அது பயணிக்கும் பாதையையே தன்னை நோக்கி இழுக்கிறது என்பது நம்மை ஆச்சரியங்களுக்குள் இழுத்துப் போட்டு விடுகிறது. இந்த வெளியின் (space) நெளிவு அல்லது வளைவே பூமி நேர்க்கோட்டில் செல்லும் வாய்ப்பை இல்லாமலாக்கி விட்டது என்பது நம்பமுடியாத ஒரு மந்திரவாதியின் சொற்களைப் போல உள்ளது.
இதனை, இந்த வெளியின் நெளியும் தன்மையை, தன்னுடைய திறமையான கணிதவியலாளர்களில் ஒருவரான ரீமன் என்பவரின் உதவியுடன் நிருபித்திருக்கிறார் எய்ன்ஸ்டின். புகழ்பெற்ற இந்த கணிதச் சமன்பாடு ரீமன்ஸ் வளைவு எனப்படுகிறது. அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய சமன்பாடிது என்கிறார் கார்லோ. பீத்தோவனின் இசையைப் புர்ந்து கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சியை விட இது எளிது என்கிறார். இசையைப் புரிந்து கொள்வது கணிதத்தை விட கடினம் என்பது இளையராஜாவில் மட்டுமே மூழ்கியிருக்கும் நமக்கு ஆச்சரியமளிக்கலாம்.
இந்த வெளி வளைவதை எய்ன்ஸ்டின் கண்டறிந்த விதம் அலாதியானது. Maxwellன் மின்காந்தப் புலங்களைப் போல (Electromagnetic Field) ஒட்டுமொத்த வெளியையும் (space) ஈர்ப்புவிசைப்புலம் என உருவகித்து அல்லது கண்டுகொண்டு நிரூபித்தார். வெளி என்பது வெற்றிடமல்ல. அது ஆற்றல் என்ற புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்வதுடன், இதுவே பொதுசார்புக் கொள்கைக்கு எதிரான (Antithesis) துளிம இயக்கவியலுக்கும் (Quantum Mechanics) வழி வகுக்கிறது எனலாம்.
அதிரும் வெளி
வெளி வெற்றிடமல்ல. அது தொடர்ந்து தன்னுடைய ஆற்றலை பரிமாற்றங்கள் வழியாக கடத்துகிறது அல்லது தக்க வைத்துக் கொள்கிறது என்ற புரிதலுக்கு Neil Bhor மற்றும் Heisenberg வழியாக இயற்பியல் வந்தடைகிறது. இந்த ஆற்றல் பரிமாற்றங்கள் துளிமங்களின் (Quantas) தாவல்கள் வழியாக நிகழ்வதாக கணித்த Heisenberg, இந்த துளிமங்கள் தாவல்களின் போது அல்லது பரிமாற்றங்களின் போது அல்லது நாம் காணுவதால் மட்டுமே அங்கு இருக்கின்றன. சொல்லப்போனால், ஏதாவதுடன் தொடர்புறாத போது அது எங்குமில்லை என்கிறார். எய்ன்ஸ்டினால் முதலில் பைத்தியக்காரத்தனமான ஒன்றாக கருதப்பட்ட இந்த இளம் விஞ்ஞானியின் ஊகங்களை அவரே படிப்படியாக ஒப்புக்கொள்கிறார். இயற்கை இத்தனை சிக்கலாக இருக்க முடியாது என்று நம்பியவர், இச்சிக்கலான ஒன்று பகுத்தறிவால் நிரூபிக்கபட முடியாத ஒன்றாக இருக்க முடியாது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்த பின்பும் நிரூபிக்கப்பட முடியாத இந்த துளிம இயக்கவியலால் இம்மனித சமூகம் அடைந்த பலன்கள் Transistor தொடங்கிப் பல.
இதுவே கார்லோ போன்ற மேதைகளுக்கு அயர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர அளிக்கிறது. துளிமம் என்ற தீற்றுதான் இப்பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள உதவும் தடயமா? அல்லது துளிமக் கொள்கை என்பது மிகச் சரியாக வேலைபார்க்கும் தவறான கொள்கையா என கார்லோவை கவிஞனாக்குகிறது.
புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான தாகூருக்கும், எய்ன்ஸ்டினுக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
The Core Debate: Science vs. Consciousness
Einstein’s View (Scientific Realism): Einstein argued that the universe exists as an objective reality, completely independent of human observation. He believed that scientific truths, such as the Pythagorean theorem, would remain undeniably true even if humanity were wiped out.
Tagore’s View (Philosophical Idealism): Tagore countered that the world is inherently a “human world”. He believed that truth and beauty are only realized through the prism of human consciousness, perception, and experience.
ஆதிசங்கரரின் அத்வைதமிது. நிர்குணம், சற்குணமாய் நமக்குத் தோற்றமளிக்கிறது.
நகரும் வெளி
பொதுச்சார்புக் கொள்கை, வெளி வளைந்து முடிவிலாது விரிவடைகிறது என்கிறது. துளிம இயக்கவியல் வெளியை தட்டையான ஆற்றலின் அதிர்வு என்கிறது. சமகால அறிவியல் முரணான இவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு முன்னகர முயற்சிக்கிறது. இதனை வளையத் துளிம ஈர்ப்பியல் (Loop Quantum Gravity) என்கிறார்கள்.
வெளி என்பது எல்லையற்று விரிவடையும் ஒன்றல்ல; உறுதியான நத்தை ஓடு அது; அந்த ஓடு தன்னுடைய உள்ளடக்கத்தின் அசைவால் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்ற புரிதலை நோக்கி சமகால இயற்பியல் நகர்கிறது. இந்த வெளி அணுக்களால் ஆனது (Space of Atoms) என்றும் வெளி துளிமங்களால் ஆனதல்ல. துளிமமே ஒட்டுமொத்த வெளி (The Space itself is Quantum) என்றும் பொதுச்சார்புக் கொள்கையையும், துளிம இயக்கவியலையும் இணைத்து இதனை நிரூபிக்கும் முயற்சியில் தற்போதைய அறிவியல் உள்ளது என்கிறார் கார்லோ.
பிரபஞ்சம் என்பது கணம் தோறும் தனக்குள் சுருங்கியும் விரிந்தும் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நத்தையின் ஓடு என்ற உருவகம் நிறைய திறப்புக்களை அளிக்கிறது. இந்த பால்வெளியில் (Galaxy) உள்ள நட்சத்திரங்கள் தங்களின் வெப்ப ஆற்றலால் தொடர்ந்து விரிந்து, இறுதியில் அவ்வாற்றலை இழந்தவுடன் சுருங்கி தன்னுடைய ஆரம்பகட்ட நிலையான மிக நுண்ணிய Planck star என்ற நிலைக்கு திரும்பி விடுகிறது. நாம் இதுவரை எண்ணியிருந்தது போல் கருந்துளை (Black hole) என்பது வெற்றிடமல்ல. தனது பேராற்றலை இழந்த பெரும் ராட்சசன் தன்னை முடிந்த அளவு ஒரு சிறிய துளைக்குள் அடைத்துக் கொள்வது தான் கருந்துளை என உருவகிக்கும் வாய்ப்பை இந்தப் புதிய கொள்கையான Loop Quantum Gravity நமக்கு அல்லது எனக்கு அளிக்கிறது. வெகுகாலம், சிறுதுளைக்குள் தன்னை அழுத்திக் கொண்டிருந்த ராட்சசன் அவ்வழுத்தம் காரணமாகவே வெடித்து Planck Star என்ற நிலையிலிருந்து முழுமுதல் நட்சத்திரமாக மீண்டும் விரிவடைகிறான். பிரபஞ்சம் விரிந்து சுருங்கி விரிந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வு.
மனிதனும் இயற்கையும்
எய்ன்ஸ்டின் தொடங்கி கார்லோ சொல்லும் துளிம ஈர்ப்பியல் வரை ஊகிக்கப்பட்ட காலமின்மையை(Time doesn’t exist) ஏன் மனித மூளையால் கைவிடமுடியவில்லை என்ற கேள்வி கார்லோவை கவிஞனிலிருந்து தத்துவவாதியாக மாற்றுகிறது. இப்புத்தகத்தில் உள்ள ஏழு தலைப்புகளில், வெப்பம் மற்றும் நம்மை அல்லது நம் மூளையைப் பற்றிப் பேசும் கடைசி இரண்டு தலைப்புகளும் நம்மை இந்த பால்வெளியில் தூக்கி எறிந்து மிதக்க வைப்பவை.
வெப்பம் சூடான பொருளில் இருந்து குளிர்ந்த பொருளுக்கு பரவும் என்று நம் மூளை அறிந்திருப்பதே ஒரு சாத்தியத்தின் அடிப்படையில்தான் என்பது நம்மை திகைக்க வைக்கலாம். Reverse heat transfer is also possible, ஆனால் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்கிறார் Boltzmann என்ற இயற்பியலாளர். காற்றடைக்கப்பட்ட பலூன், தன் காற்றை இழந்தவுடன் எந்தப் பாதையில் பயணிக்கும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. ஆனால் சூடான தேநீரில் இடப்பட்ட தேக்கரண்டி நிச்சயம் சுடும் என்பதை கணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த இயற்கை நமக்கு வழங்கியிருக்கிறது என்பது தத்துவங்களின் மேல் பரிட்சயம் கொண்டவர்களை பரவசப்படுத்தலாம். தத்துவ பரிட்சயமற்றவர்களை தத்துவங்களை நோக்கி இழுக்கலாம்.
கிட்டத்தட்ட காலம் என்பதும் நம் மூளையின் கோடிக்கணக்கான நியூரான்கள் வழங்கிய சாத்தியப்பாட்டின் ஒரு வெளிப்பாடுதான் என்ற புரிதலை நோக்கி இப்புத்தகம் என்னை நகர்த்துகிறது. அப்படியானால், மனிதன் இயற்கையின் அடிமையா, சுதந்திரமற்றவனா என்று இருத்தலிய தத்துவமேதை சார்த்தரைப் போலவே, கார்லோவும் ஒரு கேள்வியை எழுப்புகிறார். ஆம், மனிதன் இயற்கையின் அடிமைதான் என்கிறார் கார்லோ. இயற்கையுடன் அல்லது அதனுடைய சிக்கலான பால் வெளியுடன் அல்லது இயற்கையுடன் கணம் தோறும் தன் மூளையிலுள்ள நியூரான்களின் சிக்கலான ஆனால் உறுதியான ஒரு வலைப்பின்னலின் வழியாக தொடர்பில் இருக்கிறான். இதனைத்தான்,
தனிமனிதன் என்பவன் சிக்கலான உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் செயல்பாடு மட்டுமே
என்கிறார் கார்லோ.
வெளி என்பது துளிமங்களால் ஆனதல்ல, வெளியே துளிமம் என்று கார்லோ சொன்னது போல, மனிதனும், மற்ற இங்குள்ள அனைத்தாலும் ஆனதல்ல இயற்கை; இயற்கையே இவ்வனைத்தும் என்ற தத்துவப்புரிதலுடன் கடந்த இரண்டு மாதங்களாக வாசித்து கொண்டிருந்த பிரபஞ்சத்தை தன்னுள் சுருக்கிய Planck Star போன்ற இப்புத்தகத்தை (80 பக்கங்கள் மட்டுமே) நிறைவு செய்தேன்.