இருள் எனும் அறியாமை

images (1)

ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன், அவளின் அழகுக்கான காரணத்தை ஆராய முற்படுபவன் விஞ்ஞானி; அவள் ஏன் எனக்கு அழகாகத் தோன்றுகிறாள் என எண்ணுபவன் மெய்ஞ்ஞானி.

 

ஆனால் அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உதவாக்கரைகள் தான்.

 

ஆனால், எது உண்மை? விஞ்ஞானி கண்டடைந்ந புறவயக்(objevtive) காரணங்களா?; இல்லை, மெய்ஞ்ஞானி கண்டடைந்த அகவயக்(subjetive) காரணங்களா?.

 

நாம் அறிவதெல்லாம் நம்மையே என்கின்றன, இங்குள்ள அனைத்து உயர்தத்துவங்களும். நம்முடைய புலன்களைத் தாண்டி நம்மால் எதையும் அறிய முடிவதில்லை. இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே நாம் நம் புலன்கள் வழியாக உருவாக்கிக் கொண்ட கற்பனை அல்லது மாயை (mirage) மட்டுமே என்கின்றன அத்தத்துவங்கள்.

 

சுருங்கச் சொல்ல வேண்டுமானால், தண்ணீரின் குளுமையும், நெருப்பின் சூடும் அவற்றின் குணங்களல்ல. நம் புலன்களால் உருவகிக்கப்பட்டவை.

 

நாம் அறியும் தோறும் நம் அறியாமையை உணர்வதே ஞானம் என்கிறார்கள். இதைக் கருவாகக் கொண்டு உருவானதே இந்த இருள்.

 

நான் எங்கும் செல்வதில்லை.

உன்னில் எங்காவது உறைந்திருக்கிறேன்.

ஒளிபாய்ச்சி என்னை உருக்கினாலும்

நானுன்னில் மேலும் பரவுகிறேன்.

 

தீபவொளியில் நான் அழிவதில்லை.

அழிந்ததுபோல் தோற்றமளித்து மறைந்திருக்கிறேன்.

 

அறியாமையெனும் இருளாகிய நான்

உன்னுள் எப்போதும் வசிக்கிறேன்.

 

உன்னறிவொளி கொண்டு என்னுடைய

இந்த இருப்பை உணராதவரை,

 

நானுன்னை பயமுறுத்தி தேக்கமுறச்

செய்யும் இருள்.

 

என்னிருப்பை உணர்ந்தால், நானுன்னை

வழிநடத்தி முன்னகரச் செய்யும் ஒளி.
என் அறியாமையில் விளைந்த பதிவு…

Advertisements

மழை

images (2)

சூல் கொண்ட மேகத்தின் குழந்தை.

குளிர்காற்றால் பிரசவிக்கப்பட்ட வருணன்.

இந்த கருமேகம் யாரைப் புணர்ந்து சூல் கொண்டது?

இருள் களையும் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.😉

மெர்சல்

unnamed

சமீபத்திய விஜய் படங்களை விட மெர்சல் மெர்சலாகத் தான் இருக்கிறது. எடுத்துக் கொண்ட கதைக்களம் அப்படி. அடித்து தூள் கிளப்பியிருக்க வேண்டிய கரு. ஆனால் வெறும் GSTயாக தமிழக BJPயால் மட்டும் சுருக்கப்படவில்லை; நொண்டியடிக்கும் திரைக்கதையும் கூட இதற்கு ஒரு காரணம்.

 

படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்த வேகமும் கூர்மையும், போகப்போக குறைந்து மலுங்கி கடைசியில் காணாமல் போய்விடுகிறது. சூறாவளியில் சிக்கிக் கொண்ட படகு, தன் கடைசித் துளி ஆற்றல் வரை பெருக்கி கரைசேர்வது போல பரபரப்பானவை அந்த முதல் 30 to 40 நிமிடங்கள்.

 

ஆள் கடத்தல்களும், பாரிஸில் வேட்டி அணிந்த தமிழனாக விஜய் காட்டும் அடக்கம் மற்றும் பிசி சர்க்கார்த்தனமான மாயஜாலக் காட்சிகளும் மசாலத்தனமாக இருந்தாலும்  அட்லியின் காட்சிப்படுத்தும் திறன்களால் நம்மை ஈர்த்து இரசிக்கவைத்து உள்வாங்கிக் கொள்கின்றன.

 

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. “Victory is not about winning but sustaining it”.

“வெற்றி என்பது ஜெயிப்பதல்ல; அதை தக்கவைப்பது.”

 

முதல் 30 நிமிடங்களில் கிடைத்த ஈர்ப்பு, படம் பாரீஸை விட்டு வெளியே வந்த பிறகு நீர்த்துப் போய்விடுகிறது. கடைசிவரை எதைக் கொண்டு துழாவினாலும், அவ்வீர்ப்பு திரும்ப கிடைக்கவில்லை. சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்.

 

முத்தான காட்சியமைப்புகள் இருந்தும், அவைகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி மாலையாக்கும் மையச் சரடான திரைக்கதை வலுவிழந்து, அந்த முத்துக்களைத் தாங்கமுடியாமல் கீழே நழுவ விட்டிருக்கிறது. அவை சிதறி வீணடிக்கப்பட்டுள்ளன.

 

ஒரு விஜய் இருக்கும் போதே மற்றவர்களுக்கு திரைக் கதையில் இடமளிப்பது கஷ்டம். இங்கே மூன்று விஜய்.

 

சமந்தா, காஜல் இருவருமே இப்படத்தில் வழிப்போக்கர்கள் தான். சத்யராஜ், வடிவேலு போன்ற ஆளுமைகள் வீணடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அழுகக்கூடவா தெரியாது? இல்லை அட்லியிடம் நடிக்கிறார்களா?

 

தோற்றத்தால் பெரிதும் வித்தியாசப்படுத்தப்படாத மூன்று விஜய்களும் ஒரே கதாபாத்திரமாகவே தெரிகிறார்கள். அட்லிக்கு மட்டும் தான் அவர்கள் மூன்று கதாபாத்திரங்கள். ஆதலால் தான் அவர்களைச் சுற்றியே வரும் திரைக்கதை நமக்கு அயர்ச்சியளித்து படத்தோடு ஒன்ற முடியாமல் விலக்கி வைக்கிறது.
பின்பாதிப் படத்திலிருக்கும் ஒரே ஆறுதல் SJ சூர்யா மட்டுமே. தன்னை மறுவார்ப்பெடுத்துக் கொண்ட கலைஞன். வசன உச்சரிப்பு, உடல்மொழியென நம்மை வசீகரிப்பது இவர் ஒருவர் மட்டுமே. உதாரணம் “Mark my words. இன்னும் 20 வருஷத்துல எல்லாரும் normal deliveryநா பயப்படுவான். சிசேரியன்னா நார்மலா இருப்பான்” என்ற சிரிப்பு. SJ சூர்யா என்ற அந்த மருத்துவரின் அறையைத் தாண்டி திரை வழியாகப் பாய்ந்து நம்மையும் நிரப்பிக் கொள்கிறது, அந்தப் பீதியான சிரிப்பு.

வெள்ளியில் கண்டடைந்த தங்கம்

unnamed (1)

அணைந்திருந்த கைப்பேசியின் தொடுதிரையை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டு தட்ட, அப்போதுதான் அணைந்திருந்த  திரை உயிர்பெற்றுக் கொண்டது.

 

அணையும் முன்னர் கூகுள் வழிகாட்டியோடு ஒன்றிப் போயிருந்தேன், சென்னையின் வெள்ளிக் கிழமை முன்னிரவின் சிடுக்கில்(traffic) சிக்கிக் கொண்டு.

 

எறும்பாய் ஊறிக்கொண்டிருந்தது….இல்லை நத்தையாய் நகர்ந்து கொண்டிருந்தது நான் பயணித்துக் கொண்டிருந்த நாலிருளியுந்து (car).

 

மின்தொடர்வண்டியைப் (electric train) பிடித்துவிட முடியுமா என்ற கவலையோடு சற்று தலை தூக்கி ஆடியின் (கண்ணாடி) வழியாக வெளியுலகை  நோக்கினேன். தானியங்கி துடைப்பான் (wiper) அப்போது தான் பெய்ய  ஆரம்பித்திருந்த மழையால் விளைந்த நீர்த்துளிகளை அடித்து சிதறவிட்டிருந்ததில் எல்லாம் அலையலையாய் தெரிந்தது.

 

கிட்டத்தட்ட  எரிபொருள் தீரந்த வண்டி சேமித்திருந்த உந்து விசையால் (inertia) சிறிது தூரம் இயங்கி அடங்குவது போல ஒட்டு மொத்த வாகனங்களும் இயக்கத்தை நிறுத்த ஆரம்பித்திருந்தன.

 

அவ்வப்போது அணைந்து உயிர்பிக்கப்படும் கூகுள் வழிகாட்டியில் மட்டுமே என்னுடைய தற்போதைய இருப்பு தாவிக் கொண்டிருந்தது. நான் நகர்வதையே அதுதான் உணர்த்துகிறது. அச்சிறு மகிழ்ச்சியையும் அதுகாட்டிய இரத்தம் சிந்திய வழிப்பாதைகள் பறித்துக் கொண்டன.

 

என்னுடைய படபடப்பைப் போக்கிக் கொள்ள ஏற்கனவே படபடப்புடனிருந்த வண்டியின் ஓட்டுநரிடம் படபடக்க  ஆரம்பித்தேன்.

 

“ஏன் சார் நீங்க வேற டென்சன் பண்ணிட்டு இருக்கீங்க? இந்த வெள்ளிக்கெழம  சாய்ங்காலம்னால எழவெடுத்தவனுங்க எங்கதா போவானுங்கனே தெரியல” என்றார் ஓட்டுநர்.

 

அந்த  எழவெடுத்தவர்களின் கூட்டத்தில் நானுமொருவன் என்பதால் கொஞ்சம் அமைதியானேன்.

 

இரண்டடி தூரம் நகர்ந்த நீண்ட நேரம் கழித்து, வண்டிக்குள் நிலவிய அமைதியை விரும்பாதவராய் அங்கிருந்த வானொலியை இயக்கி தேவையான பண்பலையை பிடித்தார்.  மிகத் துல்லியமாக ராஜாவின் இசையை ஒலிக்க ஆரம்பித்தது.

 

மடை திறந்து……

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

 

ஹேய்….ஹேய்…..

பபப்ப..பாபா..பாபா…..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்…”

 

அங்கிருந்த அமைதியற்ற அமைதியான சூழலை அப்படியே திருப்பிப் போட்டது இப்பாடலின் இசையும் வரிகளும். குதுகூலமும் உற்சாகமும் இருவரையும் நிரப்பி வழிந்து வண்டியையும் நிரப்பி ஆடவைத்தது.

 

“என்னோட வாழ்க்கயவே பொரட்டிப் போட்ட சாங்கு சார் இது” என்றார் ஓட்டுநர்.

 

ஒரு முப்பதுகளின் தொடக்கத்திலிருந்த ஒருவரிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் ஆச்சரியமூட்டின. 80களில் வந்த பாடலிது.

 

“அப்படியென்ன மாற்றம்” என்று வினவினேன்.

 

“அந்த பாட்டுலயே அது இருக்கு பாருங்க சார்..” என்று தொடர்ந்து திறந்த மடை மாதிரி கொட்ட ஆரம்பித்தார். இப்போது அவர் பேசும் தமிழில் மெருகேறியிருந்து. கூடவே சில ஆங்கில வார்த்தைகளும் இணைந்தது.

 

“ பி.இ drop out sir நான். இன்னக்கி வரைக்கும் ஏன் நான் அத select பண்ணேன்னு தெரியாது. பெரிய குடும்ப சுமை இல்லேன்னாலும், எனக்குத் தேவையானதயாவது சம்பாதிக்கனும்னு சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன். தி.நகர்ல பொம்ம விக்க ஆரம்பிச்சு வருமானம் பத்தாம, அங்கே நண்பர்களாயிருந்த auto driverகளின் உதவியுடன் வாடகைக்கு auto ஓட்ட ஆரம்பிச்சேன்.

 

ஒரு வருஷத்திலயே தீடீர்னு பொறி தட்டி விட்டுப் போன பி.இ degreeய படிச்சு முடிச்சேன். எல்லாம் auto ஓட்டியதால் கிடைத்த பொருளாதார சுதந்திரத்தின் சிந்தனை. கிடைத்த உபரி வருமானத்தை எங்கே முதலீடு செய்யலாம்னு யோசித்ததின் விளைவு இது.

 

கூடவே software testing course படிச்சேன்.” என்று கண் சிமிட்டினான்.

 

அந்த கண் சிமிட்டல் இருக்கையில் சாய்ந்திருந்த என்னை திடுக்கிட்டு முன்னுக்கு கொண்டுவந்ததில்  உயிர்பெற்ற கைபேசியின் தொடுதிரை, நாங்கள் நீண்ட தூரம் தாவியிருந்ததை காட்டியது. மேலும், வழிபாதைகள் இப்போது இரத்த சிவப்பிலிருந்து இளஞ் சிவப்பிற்கு மாறியிருந்தது. இதை உறுதி செய்து கொள்ள சுற்றுமுற்று பார்த்தேன். வாகனங்கள் இப்போது முன்னைவிட வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால், மனம் இந்த ஓட்டுநரை விட்டு நகரவில்லை.

 

“அப்புறம் software companyல எதுவும் வேல கிடைச்சுச்சா ?” என்றேன்.

 

“ம்ம்ம்…என்னோட class mate, ஒரு கம்பெனில Test managerஆ தான் இருக்கா. அவ சொல்லிதான் அந்த testing courseஏ படிச்சேன். So, ஒருவழியா அவ கம்பெனிலயே வேலை கிடைச்சிருச்சு”.

 

“அப்புறம் ஏன் இந்த வேலை?” என்றேன்.

 

ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பிறகு அவன் பேசியதெல்லாம் நான் இதுவரை கொஞ்சமும் அறிந்திராதவை.

 

“சார்….இந்த உபரி வருமானமிருக்கே அதுதான் நம்மளோட சாபமும் வரமும். இத எப்படி நம்ம manage பண்ணுறோம்கறதப் பொறுத்துதான் அது வரமா இருக்கறதும் சாபமா இருக்கறதும்.

 

Auto ஓட்டுனப்ப கிடைச்ச வருமானத்துல இன்னோர் auto வாங்கிருந்தேனா முதலாளிய மாறியிருப்பேன். ஆனா, அதவச்சு sotware companyல போய் தொழிலாளியா மாறி 24 மணிநேரமும் வேறெந்த நினைப்புமில்லாம அங்கேயே தேங்கிப் போயிட்டேன்.

 

Week ends மட்டும் மடை திறந்து விட்ட வெள்ளம் போல பரவிப் பாய்ந்துட்டு திரும்பவும் அணைக்குள்ள போய் அடையுறது ரொம்ப கஷ்டமா இருந்தது.

 

அதான் , ராஜா சாரோட இந்த பாட்ட கேட்ட ஒரு நாள் அந்த வேலய விட்டுட்டு இருந்த உபரில இந்த கார வாங்கிட்டு call taxi driver ஆயிட்டேன்.” என்றார்

 

எனக்கு அதொரு ஞானோபதேசம் (gyann) போலத்தான் இருந்தது.

 

“உங்களுக்கெப்படி இந்த உபரி வருமானம்கிற concept(கருத்தாக்கம்) லாம் தெரிஞ்சது?” என்றேன்.

 

“மார்க்ஸ் பத்தி நிறைய படிச்சுருக்கேன் சார். உபரி  உழைப்பு, அது உருவாக்கும் உபரி வருமானமெல்லாம் சிறப்பா நிர்வகிக்கப்படலைன்னா அது மனித குலத்தையே ஒரு முடிவிலாத் துயரத்தில் கொண்டு போய் விட்டுடும்கிறார்.

 

ஒன்னு அன்னன்னிக்கு தேவையானது கிடச்சவுடனே உழைக்கிறத நிப்பாட்டிக்கிற உபரி வருமானத்தைப் பற்றி கவலைப்படாத அன்றாட காய்ச்சியாய் இருக்கனும். இல்ல உபரிகள திறம்பட நிர்வகிக்க தெரிஞ்ச முதலாளியா மாறிடனும். இந்த இருவருமே இந்த பாட்டுல வர்ற மாதிரி புது ராகத்தைப் படைப்பவர்கள். தன் வாழ்வின் போக்கை முடிந்தவரை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட கடவுள்கள் போலத்தான்.” என்றார்.

 

“இப்ப நீங்க அன்றாட காய்ச்சியா? இல்ல, முதலாளியா ? என்று வினவினேன்.

 

“முதலாளிதான் சார். நிறைய startup களுக்கு fund பண்ணுற ஒரு venture capitalist. ஒரு 50 கார் loan இல்லாம சொந்தமா இருக்கு. எல்லாம் call taxi தான். இதுல வர்ற உபரியத்தான் startups la invest பண்ணுறேன். எவ்வளவு நேரம் கார் ஓட்டனுங்கிறது என்னோட முடிவுதான். முடியலேன்னா mobila switch off பண்ணிடுவேன். எங்கிட்ட வேல பார்க்குறவங்க அவங்க ஓட்டுற taxiக்கு எனக்கு வாடகை கொடுத்துட்டா மட்டும் போதும்.” என்றார்.

 

“அப்ப அந்த venture capitalist businessலாம் யாரு manage பண்ணுறா?” என்றேன்.

 

“no body sir. பத்து investmentla 9 flop தான் ஆகுது. ஆனா ஜெயிக்கிற ஒருத்தர் என்ன கடவுள் ஸ்தானத்துல கொண்டு போய் வச்சுடுறாரு. So, no issues” என்றார்.

 

இவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என உபரி வருமானத்தை மட்டுமே நோக்கி ஓடும்; அது கிடைத்தால் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்றறியாத, என்னுடைய நடுத்தர வர்க்க மனநிலை நம்ப மறுத்தது.

 

கூகுள் வழிகாட்டியிலுள்ள பாதைகள் அனைத்தும் இப்போது இளஞ்சிவப்பிலிருந்து இளம் பச்சைக்கு மாறியிருந்தன.

 

“சென்ட்ரல் வந்திருச்சு சார். Bill amount 487.” என்றார். பணத்தைப் பெற்றுக் கொண்டு “have a nice trip and happy diwali sir” என்று விடைபெற்றார்.

 

அப்பாடலின் மறுபாதியை அவர் பாடிக்கொண்டே செல்வதைப் போல ஒரு பிரமை ஏற்பட்டது.

 

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது”

 

தேவர் மகனுக்கு 25 வயது

http://cinema.vikatan.com/tamil-cinema/106035-vadiveluss-salary-meena-was-first-choice-devar-magan-rewind.html

images (3)

இந்த மாதிரி படங்கள் தான் நம் வயதை நினைவூட்டிச் செல்கின்றன.

இராம்நாட் தங்கம் தியேட்டரில், நுழைவாயிலுக்கருகில் நண்பர்களோடு 3 மணிநேரமும் நின்று கொண்டே பார்த்ததை நினைவடுக்களிலிருந்து இப்பவும் மீட்டிக் கொள்ள முடிகிறது.

நவீனத்தை கடவுளாகக் கருதிய கல்லூரிப் பருவமது. சக்தியும்(கமல்) அங்கே எங்களைத்தான் பிரதிபலித்தார். மரபுகளின் எச்சம் தான் நாமென்றறியாத இளங்கன்றாக கௌதமியுடன் ஒன்றிப் போயிருந்தவரை, காலம் மரபெனும் பாடத்தை படிக்கவைக்கிறது ரேவதியின் துணையோடு.

நவீனத்தில் நாம் திளைப்பதற்கும், அதில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் மரபுகளின் குறைகளை களையவேண்டும் என்றுணர்கிறார் சக்தி.

மரபுகளை அறியாமல் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்து, அதற்கான வேள்வித் தீயில் தன்னையே இழந்து மரபுகளின் வழியே நவீனத்தை மீட்டெடுக்கிறார்.

ஒரு சமுதாயமோ அல்லது மொத்த மனிதகுலமோ முன்னகர்வது, இப்படிப்பட்ட சக்தி போன்றவர்களின் தியாகங்களால் தான்.

கமல் அந்த சக்திவேலாக மாறுவாரா?

மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு

unnamed (2)

பெரும்பாலும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் வழியிலுள்ள சேட்டன் கடையில் பாலில்லா தேநீருக்காக தஞ்சமடைவதுண்டு.  மழைக்கால மாலை வேளையென்றால், தேநீரிலிருந்து பறக்கும் ஆவி முகத்தில் படர்ந்துணர்த்தும் வெம்மை கூடுதல் உற்சாகம் தான். இந்த உற்சாகத்தில் விளைந்த புனைவுதான், இந்த “மெழுகுவர்த்தியுடன் ஓர் இரவு”…‎*மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு*

சுற்றிப் பொருட்கள் இருக்கின்றன என உணரமுடிந்த கும்மிருட்டு. தினந்தோறும் வாசம் செய்யும் வீடுதான் என்றாலும் தட்டுத்தடுமாறிதான் தீப்பெட்டியைத் தேடி உரசி மெழுகுவர்த்தியைத் தேட வேண்டியிருந்தது. நான்கு மணிநேர மின்தடையால் மொபைலின் பேட்டரியும் வலுவிழந்து ஆற்றல் வேண்டி கூவிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக பலிஆடு மெழுகுவர்த்தி கிடைத்துவிட்டது. மீதமுள்ள இரவை பகலாக்கிக்கொள்ள போதுமானதாக இருந்தது.

மெழுகு சுடர்விட ஆரம்பித்ததும் அங்கிருந்து அதுவரை புலப்படாதிருந்த அனைத்தும் அப்போதுதான் அங்கே வந்ததுபோல் ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தின.அதுவரை கூராக இருந்திருந்த மற்ற புலன்கள் கொஞ்சம் மலுங்கிக்கொண்டன.

மின்தடைவரும் வரை ஓடியிருந்த குளிரூட்டி அறையிலிருந்த வெப்பத்தை உறிஞ்சி வெளியே துப்பியிருந்ததால் கொஞ்சம் வெம்மை குறைந்திருந்தது.

என்ன செய்யலாம் இந்த தூக்கமில்லா இரவில் என மெழுகுவர்த்தியின் சுடர் காற்றிலைவதைப்போல மனம் அலைந்து கொண்டிருந்தது.

சுடரோடு ஒன்ற ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சுடரின் வெம்மை தாங்காமல் உருகி தப்பிக்கமுயன்று  ஊசிக்கோடுகளாக மெழுகுவர்த்தியைச் சுற்றி உறைய ஆரம்பித்திருந்தது மெழுகு. நெளிந்து படபடத்துக் கொண்டிருந்தாலும்,  அச்சுடர் தேவையான அளவு ஆக்ஸிஜனை காற்றிலிருந்து கிரகித்துக்கொண்டு நிலையாக எரிந்து கொண்டிருப்பதைப் போல தோற்றமளித்தது.

நாமெல்லாம் ஆக்ஸிஜனை உறிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உறிஞ்சி  தன்னை அழித்துக்கொண்டிருந்தது இந்த மெழுகுவர்த்தி. எனக்கு வெளிச்சம் அளிப்பதற்காக.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து மூச்சிரைத்துக்கொண்டிருந்த செல்வராஜை எதிர்கொண்டேன் .

” ..சார் கரண்ட் நாளைக்கி காலேல தான் வருமாம். இந்தாங்க மெழுவர்த்தி. நான் எப்பவும் ஸ்டாக் வெச்சிருப்பேன் “என்றார். அபார்ட்மெண்டின் காவலர். ஒவ்வொரு வீடாக மூச்சிரைக்கப் படியேறிக் கொண்டிருந்தார், தன்னிடமுள்ள உதிரி மெழுகுவர்த்திகளை கொடுப்பதற்காக.

அறையின் மெழுகுவர்த்தி இன்னும் சந்தோசமாக தன்னை எரித்துக்கொண்டிருந்தது. அறையும் அந்த பிரகாசமான வெளிச்சத்தில் திளைத்திருந்தது.

செல்வராஜ் கொடுத்துச் சென்ற மெழுகுவர்த்தியை உயிரூட்டி அதையும் உயிரிழக்கச் செய்தேன். இப்போது படபடத்த சுடர், ஏனோ தெரியவில்லை, செல்வராஜின் மூச்சிரைப்பை ஞாபகப்படுத்தியது.

திடீரென்று அதிகரித்த காற்றின் வேகத்தில் நிலை குலைந்த சுடர் உயிர்விட்டு மெழுகுவர்த்தியை உயிர்பித்தது. மறுபடியும் ஏனோ தெரியவில்லை, இருளில் இருக்கவே மனம் விரும்பியது.

“…நாங்களெல்லாம் காற்றில் அணைந்து போகும் மெழுகுவர்த்தி அல்ல…காற்றின் துணைகொண்டு பற்றி எரியும் காட்டுத்தீ…” என ஏதோ வெட்டி இயக்கங்களின் குரல் கேட்டது நினைவுக்கு வந்தது.

இயற்கைக்குத் தெரியும் நீதி என்னவென்று. எளியவர்களை அணைத்துக் காப்பாற்றி வலியவர்களைத் தீக்கிரையாக்குகிறது.


First blog post – எதற்கிந்த வலைப்பூ

images (4)

வாசிப்பு ஒருவரை எங்கு இழுத்துச் செல்லும் என்பதைக் காட்டுவதற்கா?

இல்லை, பெரும்பாலும் சுஜாதா, கொஞ்சமாக இந்திரா பார்த்தசாரதி என்றிருந்த என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஜெமோவின்(ஜெயமோகன்) புகழ் பாடவா?

இல்லை, நானும் எழுத்தாளனென்று பறைசாற்றிக் கொள்ளவா?

இப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மிகத் தெளிவு; வாசிப்பை விட அதைத் தொகுத்து எழுதும் போது கிடைக்கும் தெளிவுதான் என்னை இயக்குவதாக எண்ணிக் கொள்கிறேன். மேலும், என்னுடைய இந்த இயக்கத்திற்கான எரிபொருள் ஜெமோவின் எழுத்துக்களும், அவர்வழியாக நான் கண்டடைந்தவர்களின் எழுத்துக்களுமே.

ஒருவகையில் தான் என்ற தன்முனைப்பு கொண்ட அறிவுஜீவித்தனம் அல்லது ஒரு மேதாவித்தனம் என்னை எழுதத்தூண்டுகிறது என்றாலும், இறுதியில் கிடைக்கும் அத்தெளிவே என்னை இயக்குவதாக மீணடும் எண்ணிக் கொள்கிறேன்.

— முத்து

 

post