பருந்தும் தமிழகமும்

images (10)

 

என்னதான் முதிர்ச்சியடைந்த மனமென்றாலும், உருமாறியிருந்த அந்த முகம் சந்தனபேழையினுள் இட்டு மூடப்படும்போது அதுவரை இமையெனும் அணையால் தடுக்கப்பட்டிருந்த கண்ணீர் அவ்வணையை உடைத்துக் கொண்டு வழிந்தோட ஆரம்பித்தது.

 

காலம் பருந்து போல பறந்து விட்டிருக்கிறது. அந்த இரும்பு மனுஷி பருந்தாய் நம்மை அடைகாப்பதை நிறுத்தி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. என்னதான் கொத்திக் குதறினாலும் நம்மை அடைகாத்தது அந்த அம்மையார் தான்.

 

எப்போது இந்த பருந்து தலைசாயுமென  வானத்தில் வட்டமடித்து காத்துக்கொண்டிருந்த பல பருந்துகள் கீழிறங்கி மிக இலாவகமாக நம்மை அலகால் கவ்வி, சாதுர்யமாக  தன் காலிடுக்கிற்கு கடத்தி மேலெழுந்து தங்கள் இலக்கை நோக்கி வெகு வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.

 

செய்வதறியாமல் விழி பிதுங்கினாலும் இந்த பயணம் முடியும் வரை இப்பருந்துகள் நம்மை ஒன்றும் செய்யமுடியாதுதான். வேறிடத்தில் தரையிரங்கி ‘வச்சு செஞ்சாலும் செய்யலாம்’. அது வரையில் இப்பருந்துகளின் காலடியே தஞ்சம் அல்லது சிறை.

 

இதற்கிடையே ரசினி , குமல், தறிமுருகன், கோமான் என அழைவது,  நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பருந்திடம் அகப்பட்ட குஞ்சு தப்பிக்க முயற்சி செய்வது போலத்தான். விழுந்து உருத்தெரியாமல் அழிந்து போவோம்.

 

ஜெ வின் நினைவில்…எழுந்த பதிவு.
மரித்துப் போன திராவிட இயக்கத்தின்  நினைவில்…எழுந்த பதிவும் கூட.

00000

Advertisements

A week day Evening at a Music Bar

images (9)


ஜுவாலையே இல்லாமல் சுட்டெரிக்கும் நெருப்பாய் வெயில் மாலை நேரத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. (சென்னையின் கோடைக்கு காலையும் மாலையும் ஒன்று தான்). சில்லென்று வருடிச் செல்லும் காற்று ஒரு வரமென்றால், அதைவிட வரம் சில்லென்ற ஒரு Beer . இவ்விரண்டையும் வேண்டி நகரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த music barல் தஞ்சமடைந்தேன்.

 

வழக்கம்போல் இருள் கவிழ்ந்திருந்தது barன் உள்ளே. ஆங்காங்கே சக்தி குறைந்த விளக்குகள் மெல்லிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. பல மெல்லிய பேச்சுக் குரல்கள் ஒன்றினைந்து வல்லிய உளறல்களாக கேட்டுக் கொண்டிருந்தன. வாரத்தின் நடுநாள் என்றாலும், நிறைய மனிதத் தலைகள் கடலலை போல் அசைந்து கொண்டிருந்தன. எனக்கான இருக்கைக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று அமர வைத்தார் கனவான் போல உடையணிந்திருந்த அந்த சிப்பந்தி.

 

என்ன வேண்டுமென்று அவர் கேட்க வாய் திறக்கும் முன்னரே எனக்கான beerஐ கொண்டு வரச்சொல்லி காத்திருந்தேன். இருவர் மட்டுமே அமரக்கூடிய மேஜை, நிலக்கடலை மற்றும் வெள்ளரியால் நிரப்பப்பட்டிருந்தது. அவற்றைக் கொரித்தவாறே மீண்டும் சுற்றியிருப்பவர்களை நோட்டமிட்டேன்.

 

தன்னிலை மறந்த மிக சுவாரஸ்யமான உரையாடலில் திளைத்திருந்தார்கள் அனைவரும். மகிழ்ச்சியாக, சோகமாக, கோபமாக என அத்தனை உணர்ச்சி கலந்த முகங்களால் அந்த விசாலமான அறை உயிர்ப்போடு நிறைந்திருந்தது. இதையெப்படி கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற குழப்ப முகத்தோடு நானும் என் பங்குக்கு அவ்வறையை உயிர்பித்திருந்தேன்.

 

ஓடிக் கொண்டிருந்த குளிரூட்டி அங்கிருந்த வெப்பத்தை தொடர்ச்சியாக உறிந்து வெளியே துப்பிக்கொண்டிருந்ததால், எதிர்பார்த்தபடியே குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. முகத்தில் புன்னகை ததும்ப, கோப்பையில் நுரை ததும்ப beerஐ கொண்டுவந்தார் சிப்பந்தி. எடுத்துப் பருகியதுமே சில்லென்றிருந்தது.

இரண்டும் இருந்தும் இன்னும் உள்ளிருக்கும் நெருப்பு அணைய மறுக்கிறது. குளிர் காற்றும், சில் Beerம் தொடர்ச்சியாக தேவைப்பட்டுக் கொண்டே இருந்தன. இவ்விரண்டோடு, அவ்வப்போது நான் மெனக்கெடாமலே என் காதில் நுழைந்த சுவாரஸ்யமான பக்கத்து மேஜை உரையாடல்களும் (மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் அலுவலகப் புரணிகள்) சேர்ந்து அனைத்து வெம்மையையும் அவ்வப்போது தணித்தது.

ஆனால், அணைவதைப்போல் அணைந்து திடீரென அலறும் குழந்தை போல , இன்னும் நெருப்பின் வெம்மை உள்ளே இருந்து கொண்டு தான் இருந்தது.

திடீரென ஏற்கனவே மங்கியிருந்ந விளக்குகள் மேலும் மங்க ஆரம்பித்தன.அங்கிருந்த அனைவரின் உரையாடல்களும் அத்தருணத்திற்காகவே காத்திருந்தது போல மெல்ல மெல்ல குறைந்து கரைந்து இல்லாமலாகி அறை நிசப்தமாகியிருந்தது.
சிறிது நேர ஆழ்ந்த அமைதிக்குப் பிறகு, உரத்த குரலில் ஒருவர் பின்வரும் பாடலின் முன்வரிகளை (என்னவென்று சரியாக ஞாபகமில்லை) பாட ஆரம்பிக்கிறார். அதைத் தொடர்ந்து முகமதுரஃபி போன்ற மெல்லிய குரல் பின்வரும் வரிகளைப் பாட ஆரம்பித்தது.

*ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே…*

மெல்ல மெல்ல காற்று மற்றும் Beerன் தேவை குறைந்து கொண்டே போனது. பாடல் முடியும் தருவாயில், உள்ளே நெருப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் குளிரடிப்பதைப் போல இருந்தது.

Music is a Game changer!!!

மூளையின் மடிப்புகளுக்கிடையே புதைவுண்டிருக்கும் சிலவற்றை வருடிச்செல்லும் ஆற்றல், இசைக்கு உண்டு.

இப்பாடல் வருடிச்சென்றது என் Professor (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு) தன் மனைவி மேல் கொண்ட காதலை இப்பாடலின் வழி வெளிப்படுத்திய விதத்தை.

விதையும் மனிதனும்

unnamed (3)

 

அழுத்தம் (stress) இருந்து கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது முன்னகர்வதற்கும், அடைந்த இடத்தை தக்கவைப்பதற்கும்.

 

மண்ணின் செறிவும் அழுத்தமும் தான் வளரத் துடித்த  விதை வளர்ந்ததிற்கும்,  அது வளர்ந்து  மரமாய் நீடித்திருப்பதிற்கும் காரணம்.  ஆக அழுத்தம் விதைக்கு அழுத்தமாய் தெரிவதில்லை. அது ஒரு இழுத்துக்  காக்கும் சக்தி மட்டுமே.

 

பொறாமையால் வளரத் துடிக்கும்  மனிதர்களுக்கு கிடைக்கும் அழுத்தங்கள் அழுத்தங்களே. இவற்றை நாம் இயல்பாக கடக்க முடிவதில்லை. அவை ஒரு போதும் வளர்ச்சிக்கு இழுத்து செல்வதில்லை. மாறாக, மனச்சோர்விற்கே (depression) இட்டுச் செல்கின்றன.

 

பொறாமையைக் களையும் போது நமக்கான அழுத்தங்கள் புலப்படலாம்.

கமலும் தலைவனும் தமிழகமும்

images (8)

“யார் கடவுள்? “ என்ற கேள்விக்கு தன்னுள் (வுள்) கடந்து சென்றவன் தான் என அத்வைத (ஆதிசங்கரரின் தத்துவம்) டச் கொடுத்திருக்கிறார் கமல். தி இந்து தமிழ்ப் பத்திரிக்கையின் 5வது ஆண்டு தொடக்க விழாவில்.

 

அழகான, புத்திசாலியான துணை வேண்டும் என்ற  இளையவர்களின் தவிப்பைப்போல; நொடித்து படுத்துவிட்ட  குடும்பத்தை சுற்றத்தார் மெச்ச தூக்கி நிறுத்தும் ஒரு வாரிசு வேண்டி தவிக்கும் குடும்பத்தைப் போல; இழந்து தரையில் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு தலைமை வேண்டி தவம் கிடக்கிறது ஒட்டுமொத்த தமிழகமும்.

 

இதே போன்ற வெற்றிடம் உருவான போதுதான், அண்ணாதுரை அவர்கள் தான் சார்ந்த பெரியார் ஆரம்பித்திருந்த திராவிடர் இயக்கத்தை திராவிடர் கழகமாக மாற்றி ஆட்சியமைத்தார். அதன் பின் வந்த இக்கழகத் தலைவர்களால் திராவிட இயக்கம் முற்றிலும் கைவிடப்பட்டு ஒரு வெற்று இயக்கமாக, மரபும் அறியாத நவீனமும் புரியாத ஒரு உள்ளீடற்ற இயக்கமாகிப் போனது. இது தமிழர்கள் மற்றும் அவர்களை  இது நாள் வரை ஆண்ட திராவிடக் கழகங்கள் பெரியாருக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம்.

 

கமலுக்கு மட்டுமல்ல, இந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள நினைக்கும் அனைத்து தலைவர்களுக்கும் இங்குள்ள சிக்கல் இதுதான்.  அதீத உணர்ச்சியால் தூணடப்பட்ட தொண்டர்களும் கழகங்களும் மட்டுமே இங்குள்ளன. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சிந்தனைகளையோ தத்துவங்களையோ உருவாக்கும் சிந்தனைவாதிகள் நம்மிடமில்லை.  அண்ணாவிற்கு பெரியார் இருந்தார். அதற்குப்பின் பெரியாரின் சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. அவர் வெறும் கடவுள் மறுப்பாளராகச் சுருக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பகுத்தறிவென்பதே கடவுள் மறுப்பென்றாகியது.

 

கழகங்கள் தொண்டர்கள் வந்தடையும் கூடென்றால் , இயக்கங்கள் சிந்தனைவாதிகளின் உறைவிடம். இவ்விரண்டையும் சிறப்பாக ஒருங்கிணைக்கத் தெரிந்தவனே தலைவனாக ஆட்சிக் கட்டிலில் அமரமுடியும். அண்ணாவிற்கும், கலைஞருக்கும் அத்திறமை இருந்தது. எம்ஜிஆருக்கும், ஜெவுக்கும் கூடவே கவர்ச்சியும் இருந்தது.

 

ஆனால் கமலுக்கோ வெறும் கவர்ச்சி மட்டுமே உள்ளது. தலைவனாகத் தன்னை நிறுவிக்கொள்வதற்கு இது மட்டுமே போதாதென்று அவருக்கும் தெரியும்.

அருகிப் போய்விட்ட சிந்தனையாளர்களையும், அதீத உணர்ச்சி கொண்ட தொண்டர்களையும் அவர் தேடிக்கணடுபிடித்து ஒருங்கிணைத்து தன்னைத் தலைவனாக நிறுவி….தலை சுற்றுகிறது கமல். All the best. நீங்கள் வெல்ல எல்லாம் வல்ல உங்களை(கடவுளை) பிரார்த்திக்கிறேன்.

டங்கலும் பெண்ணியமும்

images (7)

அமேசானில்   முன்பதிவு செய்த டங்கல் தமிழ்   டிவிடி அந்தா இந்தா என்று ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தது. பட் இட்ஸ் வொர்த் வெயிட்.

 

பல தலைசிறந்த இயக்குனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது, எதை படத்தின் முதல் காட்சியாக வைப்பது அல்லது முதல் காட்சியை எப்படி எடுப்பது என்பது தான்.

 

இந்த தலைவலி சிறந்த எழுத்தாளர்களுக்கும் உண்டு. முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு, முதல்வரிக்காக முடிவில்லாமல் தவமிருக்கும் அவஸ்தை.

என் மாமியாரிடம் கேட்டுட்டுத்தான் நம்ம கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும்…” என்றாள்.

 

மனைவியின் பெயர் ஏந்திய பலகையோடு விமான நிலையத்தில் காத்திருந்தான்…”

 

இது போன்ற முதல் வரிகள் , அவை என்ன மாதிரியான கதைகள் என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கின்றன.

 

டங்கலின் முதல் காட்சியும் அது போல் தான். ஆண்டெனாவை காட்டி   டிவி க்குள் வ்ரெஸ்ட்லிங்ஐ  இழுத்து, மகாவீரின் வழியாக டிவியில் இருந்து வ்ரெஸ்ட்லிங்ஐ வெளியே இழுத்திருக்கிறார் இயக்குனர். அருமையாக நம்மை உள்வாங்கிக் கொள்கிறது இந்த ஆரம்பக் காட்சி.

 

மகாவீர் ஆணியவாதியா இல்லை பெண்ணியவாதியா? பெண்ணை வெறும் உடம்பாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதுதான் ஆணியவாதம் என்றால் மகாவீர் நான்கும் பெண்ணாக பிறந்ததும் காட்டும் முகபாவனை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.அவர் தனக்கு தலைமுறை தலைமுறையாக என்ன சொல்லி வளர்க்கப்பட்டதோ அதையே நம்புகிறார்.

 

ஆனால் திடீரென்று ஒரு நாள் தன் மகள்களின் உடல் வலிமையை  (தன்னை கேலி செய்த இரண்டு பசங்களை துவம்சம் செய்திருப்பதைப் பார்த்து) உணர்ந்து தன் ஆணியவாதம் சார்ந்த முன்முடிவுகளை மாற்றிக்கொண்டு தன் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிக்கிறார்.

 

அப்போ, மகாவீர் பெண்ணியவாதியா? ஆண்களால் முடிந்தவை எல்லாம் பெண்ணாலும் முடியும் என்பது பெண்ணியம் என்றால், மகாவீர் பெண்ணியவதிதான்.

 

ஆனால், இந்த ” …வாதியங்கள்எல்லாம் ஒன்றை ஒற்றைப்படையாக்கி உருவகித்துக் கொள்ளும் ஒரு போதாமையால் விளைந்தவை என்று எண்ணுகிறேன். இதுதான், நம்மை இருபாலினத்தினரை வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல பார்க்கவைக்கிறது. இருபாலினத்தினரே தங்களை அந்நியமாக உணர்வதும் இந்த ஒற்றைப்படைத் தன்மையான உருவகத்தினால் தான்.

 

இந்த உருவகத்திற்கு முதுகெழும்பாக இருப்பது உடல். ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி என்று அனைத்துமே உடலை அஸ்திவாரமாக்கியே எழுந்துள்ளன. ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் உண்டு என்ற மனமாகிய பன்முகத்தன்மையை உடல் கொண்டு மறைத்தே இந்த                               ” …வாதியங்கள்ஒற்றைப்படையாக எழுந்துள்ளன.

 

என்னைப் பொறுத்தவரை மகாவீர் எந்த வாதியும் கிடையாது. இந்த                                   ” …வாதியங்கள்எனும் ஒற்றைப்பனிக்குள் உறைந்திருந்த மனம் என்னும் பன்முகத்தன்மையை கண்டடைந்த ஒரு புத்திசாலி தகப்பன்தான் மகாவீர். உடல் எனும் கடும் உறைபனியை உருக்கி மனம் எனும் தண்ணீரைக் கண்டடையத்  தேவையான ஆற்றல் எனும் வெப்பத்தைத் தந்தது, அவர்  வ்ரெஸ்ட்லிங் மேல் வைத்திருந்த தீராக்காதலே அன்றி, ஒன்றுக்கும் உதவாத வெட்டி ஆணியமோ, பெண்ணியமோ அல்ல.

 

அமீர்கான் மகாவீராகவே உருமாறியிருக்கிறார்  வ்ரெஸ்ட்லிங் துணைகொண்டு. மகாவீரை நம்மிடம் கடத்துவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவர் முகம் தாண்டியும் நிறைந்து வழிந்து உடம்பு முழுவதும் வெளிப்படுகின்றன. மகாநடிகன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தியுள்ளார் அமீர்.

 

இந்த எல்லாவற்றையும்  விட இப்படத்தில் வென்றிருப்பது  வ்ரெஸ்ட்லிங் தான். மிக சுவாரஸ்யனான காட்சிகளின் மூலம் வ்ரெஸ்ட்லிங்  பற்றிய சிக்கலான விதிமுறைகளை படம் பார்ப்பவர்களுக்குக் கடத்தி அவர்கள் அனைவரையும் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்குள்  கிரிக்கெட் க்ளைமாக்ஸ் பார்ப்பதுபோல் இழுத்துக் கொண்டதின் மூலம் இயக்குனர் நிதிஸ் திவாரி தான் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதையும் நிறுவிக்கொண்டார்.
மகாவீரையும் அவர் பெண் கீதாவையும் இருளில் முன்னகர்த்திச் சென்றது, வ்ரெஸ்ட்லிங்   மேல் அவர்கள் வைத்திருந்த பற்று எனும் நெருப்பே. மற்றபடி எந்த வெட்டி ” ..இயங்களும்அல்ல.

வாசிப்பும் எழுத்தும்

 

காற்றில் மிதப்பது போல் உள்ளது.

என்னுடைய இரு கடிதங்கள் இன்று எழுத்தாளர் ஜெமோவின் (ஜெயமோகன்) இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முதல் தடவை இல்லையென்றாலும், ஒவ்வொரு தடவையும் இந்தப் பரவசம் மட்டும் முளைத்து கொண்டே இருக்கிறது.

 

தொடர்பு கொள்ளலென்பது (communication) உணர்வுருவங்களாகவும் (emojis), விருப்பங்களாகவும்(likes) மற்றும் ஓரிருவரி பின்னூட்டங்களாகவும்(comments) சுருங்கி விட்ட சமூகவலைத் தொடர்பு மிகுந்திருக்கும் நவீனச் சூழலில்,

கடிதமா? இந்த காலத்திலா? அதுவும் எழுத்தாளருக்கா? எனற கேள்விகள் முடிவில்லாமல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

 

சென்னை வெள்ளத்திற்கு முன்னால் நானும் இந்த கேள்விகளைத் தான் கேட்டிருப்பேன். 2015 வெள்ளம் சென்னையை புரட்டியதைப் போல என்னையும் புரட்டித்தான் போட்டது ‘இந்து மெய்ஞான மரபில் ஆறுதரிசனங்கள்’ என்னும் ஜெமோவின் புத்தகம் வழியாக.

ஆறடி உயர தண்ணீர் அரணால் சுற்றி வளைக்கப்பட்ட என்னுடைய அபார்ட்மென்டின் 3வது தளத்தில் செய்வதறியாமல் விழிபிதுங்கி, தண்ணீர் வடியும் வரை செய்வதற்கொன்றுமில்லை என்ற ஞானத்தை அடைந்து கையிலெடுத்தது தான் இந்த புத்தகம்.

 

எனக்கிது ஒரு பரிணாம வளர்ச்சியென்று தான் சொல்லவேண்டும். கலங்கியிருந்த ஓடை தெளிந்து அதன் ஆழத்தை வெளிகாட்டியதைப் போல, இந்து ஞான மரபை வெறும் மதச் சடங்குகளாக மட்டும் சுருக்கியிருந்த எனக்கு அதன் தத்துவ ஆழங்களை காட்டியது இப்புத்தகம்.

 

அங்கே தொடங்கியது தான் ஜெமோவுடனான என் பயணம். விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் மற்றும் வெண்முரசு வரிசையின் தற்போதைய நாவலான மாமலர் வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

இவற்றை வாசிக்கும்போதெல்லாம் ஏதாவது எழுத உந்தப்பட்டதன் விளைவே கடிதங்களாகத் ஆரம்பித்து இந்த blog தொடங்கியது வரை நீடித்திருக்கிறது.

 

மேலும், சமூகவலைதளங்களின் மூலம் என்னுடன் தொடர்பிலுள்ளவர்களை விட ஜெமோவிடம் நெருக்கமாக உணரமுடிகிறது. ஒரு நெருங்கிய நண்பரோ, உறவினரோப் போல. இதற்கு முக்கிய காரணமாக நானென்னுவது அவர் எழுத்துக்களின் வழியாக கண்டடைந்த என் அவதானிப்புக்களை (insights or contemplation) தொடர்ச்சியாக கடிதங்கள் வழியே அவரிடம் வெளிப்படுத்திக் கொண்டது தான்.

 

சராசரியாக வாரமொரு கடிதமாவது  எழுதுகிறேன். அவற்றில் பெரும்பாலானவை அவரின் இணையதளத்தில் பிரசுரிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன.

 

அப்படிப்பட்ட இரண்டு கடிதங்கள் இன்று ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒன்று மத்திய அரசாங்கத்தின் தூய்மை பாரதம் திட்டம் பற்றியது (ஜெமோ இலக்கியத்தோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை).

 

இன்னொன்று, நத்தையின் பாதை என்ற மரபுகளை உணர்வதின் அவசியத்தை வலியுறுத்தும் தொடர் பற்றியது. இத்தொடர் தடம் என்னும் விகடனின் இலக்கிய இதழிலும் வெளிவருகிறது.

 

http://www.jeyamohan.in/103868#.Wg51b8tX7R4

 

http://www.jeyamohan.in/103864#.Wg51oMtX7R4
நானாக இக்கடிதங்களை எழுதுவதில்லை. பெரும்பாலும், வாசிப்பு தான் என்னை எடுத்து எழுதிக்கொள்கிறது.

சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2

images (5)

https://muthusitharal.wordpress.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/?preview=true

(பகுதி ஒன்றின் சுட்டி)

ஏன் சாதி
இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன்.

தொடரும்……

தொடர்ச்சி…..

பேரரசுகளின் தோற்றம்

 

பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறுநில அரசுகளாக இருந்தபோது வர்க்கங்களுக்கிடையே போட்டிமனப்பான்மையோ அதன் பொருட்டு விளையும் வேற்றுமைகளோ பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

 

பேரரசுகள் உருவாகி பேராலயங்கள் எழுப்பட்டபோது சாஸ்திர மற்றும் வேதம் தெரிந்தவர்களின் தேவை அதிகமாகி அவர்களுக்கு முன்னுரிமையும் சலுகைகளும் வழங்கப்பட்டு படிப்படியாக சாஸ்திரம் கற்றவர்களும் புரோகிதர்களும் பொருளாதார அடுக்கில் மேலே செல்கிறார்கள். இயல்பாக இது அனைத்து வர்க்கத்தினரையும் வேத சாஸ்திரங்களை கற்பதை நோக்கி நகர்த்தியது. Java demanda இருக்கும் போது எல்லோரும் Java படிக்கிறதல்லையா. அது போலத்தான.

 

சமன் குலைவு

 

இந்நகர்வால்  ஒரு காலத்தில் புரோகிதர் வர்க்கம் எண்ணிக்கையில்  மிகுந்து பிற தொழில்களைப் புரிபவர்களின் எண்ணிக்கை மிக அருகியிருக்கலாம். இச்சமநிலையைப் பேணுவதற்கு அனைவருக்கும் சமமான ஊதியங்களையோ சலுகைகளையோ பேரரசுகள் அளிக்க விரும்பவில்லையா? இல்லை பேரரசுகளுடன் நெருக்கமாக இருந்த புரோகித வர்க்கம் இதை தடுத்து விட்டதா? என்பதே கேள்வி. எவ்வளவு பொருள் கொடுத்திருந்தாலும் சூத்திரர்களின் வேலையை அவர்கள் செய்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியதே.

 

உலகம் முழுவதுமே பேரரசுகள் உருவாக்கிய பொருளாதாரச் சிக்கலாகத்தான் மார்கஸியம் இதை அணுகுகிறது.  பேரரசுகளிலிருந்து முதலாளித்துவம் வரை சமூகம் நகர்ந்ததிற்கு காரணம் இச்சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியால் தான்.

 

பெரும்பாலும் இச்சிக்கல்களுக்கான தீர்வு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு சாதகமாகவும் மற்ற வர்க்கங்களுக்கு பாதகமாகவும் தான் அமைகிறது. அதுவரைப் பேணப்பட்டு வந்த சமூகநீதி இத்தீர்வுகளால் குலைக்கப்படுகிறது.

 

கதவடைத்துக் கொள்ளுதல்

 

அப்படி ஒரு தீர்வாக அமைந்தது தான் புரோகிதர்கள் வேத சாஸ்திரங்கள் தங்களுக்க மட்டுமே உரியவை என்று முடிவெடுத்து தங்களை தனிமைப் படுத்திக்கொண்டது. அது நாள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து உருவாக்கிய வேதங்களும் சாஸ்திரங்களும், புரோகிதர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் மட்டுமே உரியதானது. பிற வர்க்கத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சாதியால் பூட்டப்பட்டிருந்த கதவிற்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்கள் பாட்டன் முப்பாட்டன்களுடைய வேதத்திற்கு அந்நியமாக்கப்பட்டார்கள்.

 

வேறு வழியின்றி பிறவர்க்கங்களும் (சத்திரியர்களும் வைசியர்களும்) இதைப் பார்த்தொழுகியதின் விளைவு ஒற்றுமையாக இருந்த வர்க்கங்கள் சாதிகளாக சிதறுண்டன. தொழிலை மட்டுமே பிரித்த வர்க்கங்கள் தொழிலாளியை பிரிக்கும் சாதிகளாக உருமாறியது இப்படித்தான்.

 

சூத்திரர்களின் தொழில்கள் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு, அவற்றை செய்பவர்கள் வேறெந்த தொழிலுக்கும் தகுதியற்றவர்கள் என்ற முத்திரை மிக ஆழமாக உயர்சாதியினரால் பேரரசுகளின் துணைகொண்டு பதிக்கப்பட்டது.

 

சாதியும் தகுதியும்

 

காலம் செல்லச் செல்ல பொருளாதார வசதிகளையும், தேவையான அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளும் ஆற்றல் உயர்சாதியில் பிறந்தவர்களுக்கே உரியதாகியது. இதற்காக சாதிகளும் உருமாறின. பண்டைய காலத்தில் சாதி என்றழைக்கப்பட்டது, நவீன காலத்தில் தகுதி என்று உருமாற்றம் கொண்டது. அதையொட்டி பல போட்டித் தேர்வுகள் உருவாகின. நீட் வரை இதுதான் காரணம்.

 

இத்தேர்வுகள் தகுதி என்ற பேரில் உரிமை உள்ளவர்களை மட்டுமே  தேர்ந்தெடுக்கின்றன என்றார் அம்பேத்கர்.காலம்காலமாக தேவையான தகுதியைப் பெறும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு சில காலங்களாவது இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்படவேணடும் என்று வாதாடி அதை அரசியலமைப்புச் சட்டமாக்கினார்.

 

தமிழ்நாட்டில் பெரியாரும் இதைப் பினபற்றி சமூகநீதியை நிலைநாட்ட விரும்பினார். ஆனால் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த பாடில்லை.

 

தேவையான தகுதியையும் வளத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்   புதிய உயர்சாதிகளாகத்தான் மாறிப்போனார்கள். பழைய உயர்சாதிகள் இவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்.

 

அம்பேத்கரோ பெரியாரோ கனவு கண்ட சமூகநீதி இன்னும் எட்டப்படவில்லை. சாதியின் இறுக்கமான கதவுகள் இப்போது நெகிழ்ந்திருந்தாலும்,  அக்கதவின் பரப்பு பெரிதாகி இன்னும் எளியோரை அழுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

அரசாங்கங்கள் மட்டுமே இக்கதவை முற்றிலும் கரைத்து விட முடியாது. அக்கதவுகளுக்குப் பின்னால் வசதியாக ஒளிந்து கொண்டிருக்கும் தனிமனிதர்களும் முயல வேண்டும்.

வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1

images (3)

வர்க்கம், சாதி, சமூகநீதி என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவற்றை என்னுடைய இது நாள் வரை வாசிப்பின் வழியாக தெளிவு படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவு. உங்களை குழப்பி தெளிவு பெறும் முயற்சியல்ல இது.

 

வர்க்கங்களாக சமநிலையில் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எவ்வாறு வெவ்வேறு சாதிகளாக பிரிந்தார்கள் அல்லது உருமாறினார்கள் என்பதை முதன்முதலாக ஆக்கப்பூர்வமாக ஆராய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதின் விழைவு தான் சாதி என்பதன் தோற்றுவாய் என்கிறார்.

 

வேற்றுமையில் ஒற்றுமை – வர்க்கங்கள்

 

வர்க்கங்களாக (புரோகிதர், சத்ரியர், வைசியர், சூத்திரர்) ஒன்றுபட்டிருந்த சமூகத்தில் பிரிவினை என்றொன்று இருந்திருக்கவில்லை. அதாவது, ஒரு வர்க்கத்திலிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு செல்வதற்கு தடைகளேதுமில்லை. அவரவர் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப எந்த வர்க்கத்திலுமிருக்கலாம்.

 

சூத்திரருக்குப் பிறந்தவர் புரோகிதர் ஆகலாம். சத்ரியருக்குப் பிறந்தவர் வைசியராகலாம். அதாவது பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் தொழில் அல்லது வர்க்கம் நிர்ணயிக்கப்படுவதில்லை. வேதம், வீரம், வணிகத்திறன் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்குரிய திறன் என அனைத்தும் பொதுவில் இருந்தன. வேதத்தை புரோகிதர்கள் மட்டுமோ,  வீரத்தை சத்ரியர்கள் மட்டுமோ சொந்தம் கொண்டாட தேவையொன்றும் இல்லாததாகவே வர்க்கங்களின் காலகட்டம் இருந்தது.

 

வர்க்கங்களின் சிதைவு

 

தன்னுடைய கதவுகளனைத்தையும் திறந்தே வைத்திருந்த வர்க்கங்கள் அதை மெல்ல மெல்ல மூட ஆரம்பித்து பிற வர்க்கங்களுடன்  கலவாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். இதை வளர்சிதை மாற்றம் என்பதா? இல்லை சமூகம் உருக்குலைந்து போவதற்கான மாற்றம் எனபதா?

 

ஒரு வர்க்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து வாசல்களும் இறுக மூடப்பட்ட பின் மிக ஜாக்கிரதையாக சாதி என்னும் பூட்டால் அக்கதவுகளை பூட்டிக்கொணடார்கள். இப்படி  தனக்குள் சென்று கதவடைத்துக் கொண்ட வர்க்கங்கள் தான் தங்களுடைய தனித்தன்மையை பேணிக்காத்துக்கொள்ள சாதி என்ற பூட்டை உருவாக்கின என்கிறார் அம்பேத்கர்.

 

இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இதை ஏதாவது ஒரு வர்க்கம் தான் தொடங்கியிருக்க வேண்டும். அதனால் அவ்வர்க்கத்தினருக்கு கிடைத்த பலன்களை கண்கூடாக கண்ட பிற வர்க்கத்தினரும் அதைப் பார்த்தொழுகியிருக்கவேண்டும் (பின்பற்றியிருக்க வேண்டும்) என்பது தான் அம்பேத்கரின் கணிப்பு.

 

இந்த சாதியை தொடங்கிய முதல் வர்க்கமாக அவர் சுட்டிக் காட்டுவது புரோகித வர்க்கத்தை. ஆனால் மற்ற வர்க்கங்களின் மேல் அதை ஒருபோதும் அவர்கள் திணிக்கவில்லை என்கிறார். அதற்கான ஆற்றலும் அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தன் வர்க்கத்தினரின் நலம் காக்கும் பொருட்டு அவ்வர்கத்தினைச் சேர்ந்த சில புத்திசாலிகள் கண்டடைந்த ஒரு முட்டாள்தனம் தான் சாதி என்ற கண்டுபிடிப்பு.

 

இந்த சாதி எனும் பூட்டின் திறவுகோள் தன் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அப்புத்திசாலிகள் கண்டுபிடித்தது தான் உடன்கட்டை ஏறுதல் எனும் சதி, கட்டாய விதவைக்கோலம்,அபலை அல்லது குழந்தைத் திருமணம் எல்லாம். கிட்டத்தட்ட தன் சொந்த வர்க்கத்தினரையே இந்த கட்டுப்பாடுகள் மூலம் வதைக்கத்தான் செய்தார்கள் இந்த அதிபுத்திசாலிகள்.

 

இந்த மரபின் நீட்சிதான் இன்று நாம் காணும் நவீன சாதியுகம். சாதிக் கட்டுப்பாடுகளான சதி, விதவைக் கோலம் மற்றும் அபலைத் திருமணம் இன்று ஒழிந்து விட்டது. ஆனால் சாதி மட்டும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.

 

*ஏன் சாதி*

 

இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன்.

 

தொடரும்…..

 தொடர்ச்சி

  https://muthusitharal.wordpress.com/2017/11/14/சாதி-வர்க்கம்-நீட்டு-பகு/?preview=true

இலக்கணமும் இலக்கியமும்

images (6)

 

கோவில் யானைக்கு சங்கிலியைக் கட்டி அதன் பலத்தை மறக்கடித்து அதன் எல்லைகளை குறுக்குவதைத் போலத்தான் இலக்கணம் படைப்பாளிகளின் படைப்புத் திறனைக் குறுக்கியுள்ளது.

 

இந்த பாவனையிலிருந்து  மீளும்போது மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும்.

 

இலக்கணத்தின் படி எழுதப்பட்ட சில பாடல் வரிகள்:

*🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

*🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

*🖌சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

*🖌பொருட்பெயர்:
 கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

*🖌இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

*🖌காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

*🖌தொழில் பெயர்:
 ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

*🖌இடவாகுபெயர்:
 உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

*🖌குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:  
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
 நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
 ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
 நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
 உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

*🖌பெயர்ப் பயனிலை:
 காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்….

மறக்க முடியாத வரிகள் தான். எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவையும் கூட. ஆனால், உலகம் இதோடு முடிந்து விடுவதில்லை.

 

மக்களனைவரையும் முட்டாள்களாக கருதுவதே இலக்கணவாதிகளின் வேலை.

ஆகவேதான் எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் நம்மை சிந்திக்கவிடாமல் செய்து விடுகின்றன இலக்கணவாதிகளின் படைப்புகள்.

*எவற்றின் நடமாடும் நிழல்கள்   நாம்* என்ற வரி எந்த இலக்கணத்திற்குள்ளும் அடங்காத ஒன்று.

 

நாம் யாருடைய பிரதி?  இந்த பிரபஞ்சத்தின் பிரதியா இல்லை கடவுளின் பிரதியா என ஒவ்வொருவரின் உள்ளுணர்வு அல்லது நுண்ணுணர்வுக்கேற்ப சாத்தியங்களை விரித்தெடுக்கக் கூடிய சொற்றொடர் இது.

 

இதுவே நம் சிந்தனையை விரித்து அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வது. இது தான் இலக்கியம்.

 

ஒரு மொழியை புரிந்து கொள்ள இலக்கணம் மிக அவசியமே. ஆனால், அது மூடி மறைத்த சாத்தியங்களை கணடுகொள்வதிற்கு அதிலிருந்து மீண்டே ஆக வேண்டும்.

இலக்கணம் தேங்கிய குட்டை. இலக்கியம் நீரோடை.
இலக்கியத்திற்கு மட்டுமல்ல, எத்துறையிலும் அதன் அடிப்படைகள் தரும் வசதியிலிருந்து மீளும்போது மட்டுமே போலியாகக் கட்டுண்ட யானையின் பலத்தை உணர முடியும்.

கண்ணதாசன் இதை உணர்ந்ததின் விளைவு தான்,

இலக்கணம் மாறுதோ……

இலக்கியம் ஆகுதோ…….

என்ற வரிகளை எழுத வைத்தது.

கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்

images (5)

எழுதுபவர்களுக்கு மேடையில் உரையாற்றுவது வசப்படுவதில்லை என்பதற்கு விதிவிலக்கு எழுத்தாளர் ஜெயமோகன். படிப்படியாக தன் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொணடவர். மிக நீண்ட, அதே சமயத்தில் மிகச் செறிவானவை அவருடைய உரைகள். தன்னுடைய வாசிப்பெனும் கடலில் இருந்து மத்து கொண்டு கடைந்தெடுத்தவை.

 

இச்செறிவான உரைகளை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொள்ள முடியுமென்றால், ஒரு குறுநாவலே எழுதிவிடமுடியும். என்னால் முடிந்தது இச்சிறிய பதிவு மட்டுமே.

 

சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் ஆற்றிய உரையிலிருந்து கருக்கொண்டு புனையப்பட்ட பதிவு இது.

 

கண்ணுக்கெட்டிய தூரத்தில் குதிரையின் உடலுடன் விரைந்து வந்து கொண்டிருந்த மனிதர்கள் போல் முகம் கொண்ட ஒன்றைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப்  போனான் எல்லைக் காவலன்.

 

இதென்ன விசித்திரமான விலங்கு. மனிதனுக்கும் குதிரைக்கும் பிறந்தது போல் என்ற வியப்புடனும், ஒருவகைப் பயத்தோடும் தன் இனத்தலைவனான கோண்டுவை நோக்கி விரைந்தான் கோண்டு. இவ்வினக்குழுவைச் சேர்ந்த அனைவருக்குமே பெயர் கோண்டு தான். அதுதான் அவ்வினத்தின் பெயரும். தனித்தனியாக பெயர் என்ற ஒன்று தேவையற்ற ஆதிப்பழங்குடிகள் அவர்கள்.

 

கோண்டு சொல்வதைக் கேட்டு வியந்தார் கோண்டு. “…என்னது மனிதத் தலையுடன் குதிரைகளா?  உளறுகிறாயா கோண்டு” என்றார்.

 

“உண்மை தான் கோண்டுத் தலைவரே“ என்று இன்னொரு கோண்டுவும் சேர்ந்து கொண்டான்.

 

“அப்படி நிறையவற்றை நானும் பார்த்திருக்கிறேன. என்ன ஆச்சர்யமென்றால், அதைப்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது குதிரைத் தலையும் இருக்கும். சில சமயங்களில் அவை இரு வேறு உருவமாகவும் பிரிந்து விடுகின்றன. ஒன்று முழு மனிதனாகவும், இன்னொன்று நம்மிடமுள்ள குதிரை போலவும் உள்ளது.” என்று அந்த கோண்டுவின் கூற்றுக்கு மேலும் வலு சேர்த்தான் இந்த கோண்டு.

 

தலைவன் கோண்டு கண் மூடி யோசனையில் ஆழ்ந்து விட்டான்.  திடீரென்று கண்கள் பிரகாசிக்க, முகம் மலர, உதடுகள் புன்னகைக்க , கைகளிரண்டையும் விரித்து “அவர்கள் நம்மை காக்க வந்த தெய்வங்கள்” என்றான்.

 

குதிரைகளை தன் வசதிக்கேற்ப பழக்கிக் கொள்ள முடியும் என்ற புத்திசாலித்தனமில்லாத சுயநலமற்ற அத்தனை கோண்டுத் தெய்வங்களும் அதை ஆமோதித்து அந்த மனிதக் குதிரைகளை தெய்வங்களாக ஏற்றுக் கொண்டனர்.