பகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக் காட்டி மாறாத உண்மை என்று எதுவுமில்லை என்று சொல்ல வந்த “பகுத்தறிவுப் பயங்கரங்கள்” என்ற பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையை சாக்காக வைத்துக் கொண்டு மரபுகளோடு கட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்ட ஒரு கூட்டம் உருவானது உலகெங்கும். இங்கே தமிழகத்தில் உருவான அக்கூட்டத்தின் பதாகை சுதந்திர போராட்ட காலத்தில் கருக்கொண்ட ‘தனித்தமிழ்’ எனும் இயக்கத்திலிருந்து உருவான ‘தமிழ்தேசியம்’.
‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் ‘ என்ற தலைப்பிட்ட ராஜ் கௌதமன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு இந்த திடீர் தமிழ் காதலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று. படித்தவுடனேயே மனதில் எழுந்து வரிகொண்டதுதான் இங்குள்ள முதல் பத்தி.
ராஜ் கௌதமன் ஒரு இடதுசாரி சிந்தனையாளர், மார்க்ஸிய கோட்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சி கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வழக்கம் போல் அறிவார்ந்தவர்களும், நடுநிலையாளர்களும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத தமிழ் இலக்கியச் சூழலில் இவருடைய ஆக்கங்களும் தீவிர இலக்கியவாதிகளைத் தாண்டிப் பரிட்சயமாகவில்லை. அதிலும் இப்போதிருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இலக்கியத்தின் நுழைவு வாயிலான வணிக எழுத்துக்களின் (சுஜாதா போன்றவர்களின் ஆக்கங்கள்) வாசிப்பையும் காவு கொண்டபிறகு ராஜ்கௌதமன் போன்றவர்களெல்லாம் வாசிக்கப்படுவது சாத்தியமேயில்லாத ஒன்று.
ஆனால், இவர் போன்றவர்களை கண்டெடுத்து, உரிய அங்கீகாரம் பெறவைக்கும் வேலையை கடும் சிரத்தையுடன் ஆண்டுதோறும் செய்து வருகிறது புகழ்பெற்ற சமகால எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். வருடந்தோறும் ஒரு இலக்கிய ஆளுமையை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த இலக்கிய வாசகர்களைக் கொண்ட இவ்விலக்கிய வட்டத்தின் இந்த வருடத் தேர்வுதான் ராஜ்கௌதமன்.
தமிழில் எழுதும் இவர்போன்ற மார்க்ஸியத்தின் இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையும், சமூக பரிணாம வளர்ச்சியை அறிவுப்பூர்வமாக ஆராய உதவும் அதன் கோட்பாடுகளையும் உணர்ந்தவர்கள் தமிழ் சமூகத்திற்கான பெரும் கொடை. அதிலும் கார்ல் மார்க்ஸை வறட்டு பொருள் முதல்வாதியாக; அசட்டு நாத்திகவாதியாக சுருக்கிக் கொண்டிருக்கும் போலி முற்போக்குவாதிகளும், இலக்கியத்தை கழகங்களின் வெறும் பிரச்சார குரலாக மாற்றியி்ருக்கும் போலி இலக்கியவாதிகளும் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவர் மற்றும் கோவை ஞானி போன்ற தமிழ் மார்க்ஸியர்கள் கலங்கரை விளக்கம் போன்றவர்கள் என்பதை மறுக்கமுடியாது.
இப்புத்தகத்திலுள்ள சுத்த தமிழ் நேயம் என்ற தலைப்பிட்ட கட்டுரை 80களில் தமிழ்தேசியமாக இருந்து தற்போது தமிழ் ஃபாசிசமாக மாறிக்கொண்டிருக்கும் இயக்கங்களின் தோற்றுவாயை அலசியிருக்கிறது.
இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் சர்வவல்லமை கொண்ட வெள்ளையர்களின் ஆயுதமான ஜனநாயகம், கல்வி போன்றவற்றிற்கு எதிராக போராடவேண்டியதற்குத் தேவையான வலிமையை தங்களுடைய மரபை மீட்டெடுப்பதன் மூலம் பெறமுடியுமென்றுணர்ந்த ஒரு பிரிவினர், மரபிலக்கியங்களை மறுஆக்கம் செயவது; அதன் மூலம் மக்களிடம் பழந் தமிழர்களின் வளமான சிந்தனையை கொண்டு சேர்ப்பது என களத்திலிருந்தனர். அவரகளில் முக்கியமானவர்களாக இக்கட்டுரை குறிப்பிடுவது பாரதி, திரு.வி.க, வ.உ.சி, வ.வே.சு மற்றும் இராஜாஜி போன்றோரை. இவர்கள் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக மாறியது காந்தியின் வருகைக்கு பின்புதான். தேசிய விடுதலையே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கும், இலக்கியச் செழுமைக்கும் இவ்வியக்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் ராஜ் கௌதமன்.
அதேகாலகட்டத்தில், பிராமண சமூகங்களின் மேட்டிமைவாத போக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் கையிலெடுத்ததும் தமிழைத்தான். இவர்கள் தங்கள் மரபுகளை மீட்டெடுப்பதை விட அதன் பழம்பெருமைகளில் தஞ்சம் புகுவதையே நாடியிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை பழங்கால தமிழ் சமூகத்திலேயே அனைத்து சாதனைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என நிறை கொண்டு இறந்தொழிந்த காலங்களில் மட்டுமே வாழ்பவர்களாக இருந்தார்கள். சமகாலத்தில் ஏற்படும் வளர்ச்சியில் பங்கேற்காமல், அதிலிருந்து தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் தனக்குள் சுருங்கிப் போன ரஷ்ய ஜார் குடும்பங்கள் மற்றும் ஆங்கில பிரபுக்களின் ஃபிரெஞ்ச் மொழி போன்றோ அல்லது பிராமண மேட்டிமைவாதிகளின் சமஸ்கிருதம் போன்றோ தமிழையும் உருவாக்க விரும்பினார்கள் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த தூயதமிழ்வாதிகள். இவர்களிடமிருந்தது தாய்மொழிப்பற்றல்ல; வெறும் தனித்தமிழ்ப்பற்றே என்கிறார் ராஜ் கௌதமன். ‘தமிழ்தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளம்தான் இந்த ‘தனித்தமிழ்’ பற்று. ‘ஒன்றின் ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் இடதுசாரி முகம் காட்டும் வலதுசாரி குணமுடையது’ இவ்வியக்கம் என்கிறார்.
பிறமொழிகளுடன் உறவாடாத எதுவும் மேட்டிமைவாதிகளின் மொழியாகத் தேங்கி சமஸ்கிருதம் போல் அழியுமேயொழிய ஆங்கிலம்போல் மக்கள் மொழியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்பதை இவர்கள் உணரவில்லையா? இல்லை இவர்கள் பிராமண உயர்ஜாதியினருக்கு எதிராக தமிழைக் கையில் எடுத்ததன் நோக்கம் தங்களை இன்னொருவகையான மேட்டிமைவாதிகளாக ஆக்கிக் கொள்வதற்குத்தானா? என்ற கேள்வியே இக்கட்டுரையைப் படித்ததும் என்னுள் எழுந்தது. மேலும் தலித் சிந்தனையாளரான ராஜ்கௌதமன் இக்கட்டுரையில் கூறுவதைப்போல இவர்கள் ஏறிநிற்பதற்குத் தோள் கொடுத்த பிற சாதி இந்துக்களின் பிரதிநிதியாக தங்களை உருவகித்து மட்டுமே கொண்டார்களேயொழிய, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உயர்வில் அக்கறை கொண்டார்களா என்பது கேள்விக்குறியே.
இந்த தூயத்தமிழ் இயக்கமே இராபர்ட் கால்டுவெல்லின் ஆர்ய திராவிட உருவாக்கத்தால் தியாகராஜ செட்டியார் போன்றவர்களால் நீதிக்கட்சியாக உருமாறி பெரியாரின் வழியாக திராவிடக் கழகமாக எழுந்து நின்றது. மேலும், இவ்வியக்கம் பிராமண எதிர்ப்பை ஆத்திக எதிர்ப்பு என்று மாற்றிக்கொண்டு நாத்திகத்தை வளர்த்தெடுத்து, தனித்தமிழ்ப் பற்றை பொதுவுடைமையாளர்களுக்கு மடைமாற்றி விட்டது என்கிறார். எப்போதுமே எஞ்சியிருக்கும் பாட்டாளி மக்களின் மேல் இப்போது தனித்தமிழ்ப் பற்றை சுமக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு, ‘சமுதாயம்’ தமிழ் வார்த்தையல்ல; ‘குமுகாயம்’ தான் சுத்ததமிழ் என அவர்களைப் பயமுறத்துகிறது இந்த பழமைபேசிகளின் தமிழ்தேசியம். இதன் தற்போதைய சாதனை தாய்மொழிப் பற்று மறைந்து தனித்தமிழ்ப் பற்றாக; பிறமொழிகளையும், அம்மொழி பேசுபவர்களையும் வெறுத்தொதுக்கும் ஃபாசிசத்தன்மையை உருவாக்கியதுதான்.
பாரதி, வ.உ.சி போன்றோர் முன்னின்று நடத்திய நவீன தமிழியக்கமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது; தமிழை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது; மக்களுக்கானது என்று இக்கட்டுரைையை முடித்திருக்கிறார் ராஜ்கௌதமன். இத்தொகுப்பில் சிற்றிதழ், வணிகஇதழ், தமிழிலக்கியத்திலுள்ள அகம் புறம் சார்ந்து என மேலும் சில செறிவான மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளும் அடங்கியுள்ளன.
தற்போது நடந்துவரும் சென்னைப் புத்தக கண்காட்சியிலிருக்கும் NCBH அரங்கில் இப்புத்தகம் கிடைக்கிறது.
ராஜ்கௌதமன் அவர்களின் இன்னொரு கட்டுரைத் தொகுப்பான தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பற்றிய பதிவிற்கான சுட்டி
https://muthusitharal.com/2018/10/02/தலித்தியம்-ஒரு-புரிதல்/
[…] […]
LikeLike
[…] […]
LikeLike
[…] […]
LikeLike
[…] […]
LikeLike