பொறியன் டூடாட்ஓ

images (76)

கைவிடப்பட்ட அந்த விவசாய நிலத்தைவிட்டு சூரியனும் தன் கதிர்களை வெகு விரைவாக விலக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாலைப்பொழுது அது. நெல் நாற்றுகளுக்குப் பதிலாக அங்கு நடப்பட்டிருந்த கைப்பேசிகளுக்கு உயிரளிக்கும் நெடிய கோபுரத்தை நோக்கி தன்தோள்களிரண்டும் தளர , நடை தடுமாற, தலைதுவள கைகளிரண்டையும் விரித்து உயர்த்தியவாரே ‘’நன்னயப் புள்ளினங்காள் …” என்று முனகி முழங்கிச் செல்கிறார் ஒரு முதியவர்.

இப்பொன்னுலகமும், பிரபஞ்சமும் பறவைகளால் ஆனது; ஆளப்படுவது என்ற நம்மாழ்வாரின் வரிகளான
“பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்” என்ற வரிகளை முனங்கிக் கொண்டேதான் பறவைகளின் காதலனும்; காவலனுமாகிய பக்ஷிராஜன் அந்த கோபுரத்தில் தூக்கிட்டு தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறார். கோபுரத்தினடியிலிருந்து படம்பிடிக்கப்பட்ட அக்காட்சியில் உறைந்திருந்த பார்வையாளர்களின் முப்பரிமாண கண்ணாடியோடு, உடல்துடித்து காலுதற கயிற்றிலிறந்து போய்கொண்டிருக்கும் பக்ஷிராஜனின் முகத்திலிருந்து கழன்று விழும் கண்ணாடியும் திரையைத் தாண்டி வந்து ஒட்டிக்கொள்கிறது. 2.0 வில் வரும் இந்த முதல்காட்சியும்; முதல் வசனமும் பக்ஷிராஜனின் கண்களின் வழியாகத்தான் ஒட்டுமொத்த படமும் பார்க்கப்படவேண்டும் என்பதை குறிப்புணர்த்துவது போலுள்ளது.

2-0-759-2

படம் முழுதும் இயக்குநர் சங்கரின் படைப்பூக்கமும், அதை திரையில் கொண்டு வருவதற்கான அவரது குழுவினரின் அயராத உழைப்பும் மிரள வைத்துக்கொண்டே இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, பார்வையாளர்களை பெருவாரியாக திரையரங்குகளை நோக்கி ஈர்த்த ஒரு படைப்பு. குறிப்பாக ஒரு மூன்று மணி நேரமாவது கைப்பேசியின் தொடுதிரை தன்னை சீண்டாமல் இருந்ததற்காக நம் விரல்களுக்கு நன்றி சொல்லியிருக்கும். இக்காலத்து கைப்பேசிகளுக்கும் ஒரு பக்ஷிராஜன் தேவை, நம்மிடமிருந்து அவைகளையும் பாதுகாக்க!!!

2-0-movie-review-2

பெரும்பாலும் தங்கள் சொந்த வாழ்க்கையை தான் கொண்ட இலட்சியங்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் பரிசோதனைக்கூடமாக மாற்றி, அதை பொதுவெளியிலும் காட்சிப்படுத்தக்கூடிய இலட்சியவாதிகளை உதவாக்கரையாகத்தான் இவ்வுலகம் பார்க்கிறது. புவிமையக் கொள்கையை(Geocentric) மறுத்து, சூரியமையக்கொள்கையை(Heliocentric) முன்வைத்த கலிலியோ முதல் இன்றைய பக்ஷிராஜன் வரை இதற்கு எவருமே விதிவிலக்கல்ல. கலிலியோவைக் காவுகொண்டது, அன்று மக்களை ஆண்ட மதம் என்றால்; பக்ஷிராஜனை இன்று மக்களையாளும் வியாபாரம் காவு கொள்கிறது.

மக்கள் தொடங்கி,வியாபாரிகள், அரசியல்வாதிகள் என நீதிமன்றம் வரை அனைத்து இடத்திலும் உதாசீனப்படுத்தப்படும் இந்த பறவைக்காதலர், இறுதியில் வேறு வழியின்றி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். கைப்பேசிக்கான கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தால் மாண்டுபோகும் மென்பறவைகளை விட மென்மையானவராய் அக் ஷய் நம்மை வெகுவாய் பாதிக்கிறார். இதுபோன்ற நியாயமற்ற சாவுகளுக்கு பதில்தான் என்ன, என்ற சாமான்யர்களின் கேள்விக்குப்பதிலாக பக்ஷியின் ஆன்மாவும், பட்சிகளின் ஆன்மாவும் சேர்ந்துகொண்டு செய்யும் அதகளமும், அதற்கு உறுதுணையாக இருந்த கிராஃபிக் காட்சிகளும் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ வகை. கண்டெய்னர் லாரியை பிய்த்துக் கொண்டு, சாரை சாரையாக கைப்பேசிகள் சுவரேறி குதித்து பழிவாங்குவது; வாயில் புகுந்து கொல்வது என சங்கரின் ஒட்டுமொத்த கற்பனைக்கும் அசத்தலான முப்பரிமாண வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

images (80)

எப்போதுமே எந்திரம்போல் வந்து போய்க்கொண்டிருக்கும் எமி ஜாக்சன் எந்திரமாகவே இங்கு அசத்தியுள்ளார். இந்த நிலா பொம்மை, இங்குள்ள மக்களைப் புரிந்து கொள்ள சினிமா, டிவி, சாப்பாடு மற்றும் Gossip பற்றி தெரிந்து கொண்டால் போதுமென்று நம்மை அசரடிக்கிறது.

images (81).jpeg

images (83)

மேலும் சங்கரைப்போல ரஜினியை ரசிக்கும் இயக்குநர் வேறெவரும் இருக்கமுடியாதென்றே தோன்றுகிறது. சிட்டி, 2.0வைத் தாண்டி வசீகரமான 3.0யையும் ரஜினியாய் உலவவிட்டிருக்கிறார். இந்த குட்டி 3.0 கூடிய விரைவில் அனைத்து பொம்மைக் கடைகளிலும் உலா வரலாம். An Indian brand Toy from Tamil cinema!!! இவர்களிருவரையும் வைத்துக் கொண்டு Holy Crowவாய் நிற்கும் பக்ஷியை துவம்சம் செய்யும் காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தாலும், இதுபோன்ற அறிவியல் மிகைக்கற்பனை (Scince Fantasy) படங்களில் இந்த அம்சங்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு விஷயம் தான்.

images (78)

Rajinikanth-cuckoo-crow-akshay-kumar-main

இது அறிவியல் புனைவு(Science Fiction) கதையல்ல என்பதை இப்படத்தின் வசனங்களை சங்கரோடு சேர்ந்து எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

அறிவியல்புனைவு என்பதன் விதிகள் மூன்று.

1. அது அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

2 அறிவியலின் முன்னூகங்களில் [hypothesis] மட்டுமே அது கற்பனையை ஓட்டமுடியும். அதன் நிரூபணவழிமுறை அறிவியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

3.அறிவியல்புனைவு என்பது வாழ்க்கையின் ஓர் உண்மையை, தத்துவத்தை அறிவியலைத் துணைகொண்டு சொல்வதாகவே இருக்கும். அதன் இலக்கு அறிவியலில் தாக்கம் செலுத்துவதல்ல, வாழ்க்கையை விளக்குவதே.

அறிவியல் மிகுபுனைவுக்கு(Science Fantasy) முதல் இரண்டுவிதிமுறைகளும் இல்லை. அது அறிவியலில் இருந்து குறியீடுகளை, வியப்பும் திகைப்பும் ஊட்டும் கதைகான வாய்ப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. அது ஒருவகை புராணக்கதைதான், அறிவியலை பாவனைசெய்கிறது. அது கேளிக்கையை அளிக்கிறது, கூடவே உருவகங்கள் வழியாகச் சிலவற்றைச் சொல்கிறது. அதன் குறியீட்டுத்தன்மையைக் கொண்டுதான் அதன் அழகியலைக் கணிக்கிறோம்.

ஜுராசிக் பார்க்கில் அத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி அந்த கொசு உயிரோடிருக்க முடியும் என்று அறிவியல்படி கேள்வி எழுப்பினால் அப்படத்திற்குள் நம்மால் செல்லவே முடியாது. பக்ஷிராஷனின் ஆன்மா எப்படி பறவைகளை துணைகொண்டு அரங்கை நிரப்பும் இராஜாளிப் பறவைபோல உருமாறமுடியும் என்று பகுத்தறிவுக்குட்பட்டு கேள்விகளை எழுப்பும்போது நாம் இப்படத்திலும் நுழைய முடிவதில்லை. சிட்டி போன்ற பொறியன்கள்(Robot) சாத்தியமா என்று அறிவியலால் இன்னும் விளக்கமுடியவில்லை. மேலும் பகுத்தறிவின் எல்லைகளை நன்குணர்ந்தவர்களே சிறந்த அறிவியலாளர்களாகவும் இருக்கிறார்கள். இது பகுத்தறிவென்றாலே கடவுள் மறுப்பு என்று சுருக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்து அறிவுஜீவிகளுக்கு புரியப்போவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக இது தமிழ் சினிமா இந்திய சினிமாவிற்கு அளித்துள்ள மிகப்பெரிய கொடை. இது கொண்டாடப்படவேண்டிய தருணமே.

images (82)

images (77)

Advertisements

காந்தி ஆசாரியா?

FB_IMG_1543759466493
பள்ளிக்கூடப் புத்தகத்தின் அட்டைப்படத்திலுள்ள அம்பேத்கரின் நிலைமையை மாரி செல்வராஜ் விவரிக்க விவரிக்க, அவருடைய வேதனை நமக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதியான உடல் மொழி, அவருடைய ஆழ்மனத்திலுள்ள தாழ்வு மனப்பான்மையை சிதறடித்துக் கொண்டு மேலெழும்பி ததும்பி வழிந்து அங்கிருந்த அனைவரையும் ஆட்கொண்டு உறைய வைத்தது. அந்த உறைந்த கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உட்கார இடமில்லாமல், நிகழ்வு நடக்கும் அரங்கத்தையொட்டியிருந்த அறையிலிருந்த புத்தகங்களுக்கு விழியைக் கொடுத்துவிட்டு, அரங்கத்தின் சுவர்களுக்கு செவியைக் கொடுக்க வேண்டியிருந்தது. நாள் தோறும் இளம் வாசகர்களை, இலக்கியம் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கு இவ்வரங்கு கொஞ்சம் சிறியதுதான். அவரோடு சேர்ந்து மிகச்சிறந்த ஆக்கங்களைத் தந்த இயக்குநர் வசந்தபாலனும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் அரங்கின் வாசலைத் தாண்டி நிற்க இடமின்றி பக்கத்திலிருந்த புத்தகங்கள் நிறைந்த அறையின் இடைவெளிகளையும் நிரப்பியிருந்தது.

FB_IMG_1543759503909

காந்தி அடிக்கடி கூறி வந்ததைப்போல, மாற்றுத்தரப்புடன் உரையாட மறுக்கும் எந்த சமூகமும் முன்னகர்வதில்லை என்பதே ‘பரியேறும் பரிமாளின்’ சாராம்சமாக இருந்ததை அங்கு பேசிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டினார்கள். கூட்டம் முடிந்து அரங்கத்தை விட்டு வெளியேறி, அந்த புத்தக அறையில் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாரி செல்வராஜும் ஜெயமோகனும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக நின்றுகொண்டே ஆற்றிய அந்த உரையாடல், இன்னமும் அங்கு எஞ்சியிருந்த 30 அல்லது 40 பேருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

FB_IMG_1543759585546

எப்போதுமே பசுமையில் தன் கண்களை நனைத்திருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்போன்றோருக்கு, திருநெல்வேலி மாவட்டத்தின் சில வறண்ட நிலபரப்புகள் அளிக்கும் சோகத்தையும்; அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பௌர்ணமி இரவு நேரத்து அழகியலையும் மிக இயல்பாக ஜெமோ விவரிக்க ஆரம்பிக்க, அங்குள்ள மனிதர்களுக்குப் பின்னாலுள்ள சோகங்களையும், இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் நவீன தீண்டாமையின் கோரமுகங்களையும் மாரி விவரிக்க ஆரம்பிக்க அறையிலுள்ள அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டது அந்த உரையாடல்.

FB_IMG_1543759548883

தலித் மாணவர்களின் புத்தகத்தில் பிரகாசமாய் ஒளிவீசும் கண்களைக் கொண்ட அம்பேத்கர், தலித் அல்லாத மாணவர்களின் புத்தகத்தில் பார்வையிழந்த குருடனாகவோ; அல்லது ஒட்டுமொத்தமாய் கிழிக்கப்பட்டிருப்பதையோ மாரி நினைவு கூர்ந்தது, அம்பேத்கருக்கு நிகழ்ந்த வரலாற்றுச் சோகம். இதைக் கண்டிப்பாக அந்த மாணவர்கள் செய்திருக்க மாட்டார்கள்; அம்பேத்கரை தலித் சமூகத்தின் தலைவராக மட்டுமே குறுக்கிக் கொண்ட பெரியவர்களின் சிந்தனைக் கோளாறுதான் இதற்கான காரணம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் சமீபத்தில் பதின்மவயது சிறுவர்களால் நடத்தப்பட்ட ஆணவக்கொலைக்கு சாதி வெறியைவிட விமர்சனங்களையோ, கேலிகளையோ, கிண்டல்களையோ தாங்கிக்கொள்ள முடியாத சவலைப்பிள்ளைத்தனம்தான் காரணமென்று மாரி சொன்னபோது மனம் பதற ஆரம்பித்தது. இதுதான் பிற்காலத்தில் சாதிவெறியாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது.

எங்கோ சில இடங்களில் நடக்கும் இந்த ஆணவக்கொலைகளை விதிவிலக்குகள் என்றும் புறந்தள்ள முடியவில்லை. ஒரு துளியானாலும் விஷம் விஷமே. அந்தக்காலங்களில் இதுபோன்ற பதின்மவயதுக்காரர்கள் மத்தியில் எப்படியாவதொரு கம்யூனிச தோழர் இருப்பார் வழிகாட்ட என்று ஜெமோ குறுக்கிட்டுச் சொன்னது நிசர்சனமான உண்மை. அதுபோன்ற புரோலட்டேரியன்கள் காட்சிப்பொருளாகிவிட்ட காலமிது. ஆசாரித் தெருவில் காந்தி சிலை இருப்பதாலேயே அவர் ஆசாரிகள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்தவராகத்தான் மாரிகூட இருந்திருந்திருக்கிறார். ஆனால், பரியேறும் பெருமாளின் ஒவ்வொரு காட்சிகளிலும் தான் எடுத்துக் கொண்ட அக்கரையை, எந்த சமூகத்தினரையும் புண்படுத்திவிடக்கூடாது என்பதிலிருந்த உறுதியை விளக்கியபோது அங்கிருந்த அனைவரும் வாய்பிளந்திருந்தோம்.

FB_IMG_1543759528580

புகழ்பெற்ற சமூக ஆராய்ச்சியாளரான ராஜ்கௌதமன் தலித்தியச் செயல்பாடுகளை பின்வரும் நான்காக பிரிக்கிறார்:

1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை

2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை

3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை

4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.

பெரும்பாலும் பா.ரஞ்சித் தன் படங்களில் வலியுறுத்துவது முதல் இரண்டு வகைமைகளைத்தான். இரண்டுமே ஆதிக்கசக்திகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி. ஆனால் மாரி, இது நான்கும் கலந்த ஒரு கலவை ஒன்றை முன்வைக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஜெமோ குறிப்பிட்டது போல, தலித் விடுதலை என்பது மானுட விடுதலையை நோக்கிய நகர்வாக இருக்கும் பட்சத்தில் எந்த வகைமையை மாரி சார்ந்திருந்தாலும் அவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.

IMG_20181201_1329450