
செட்டிநாட்டு வீடுகளுக்கே உரிய பிரமாண்ட முகப்பு கொண்ட வீடு. தெருவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்தாறடி உயரத்தில் வீட்டின் நுழைவாயில். இரண்டாள் உயரமிருக்கும், நுழைவாயில் கதவை அடைவதற்கான அப்படிகளின் அகலம். எரிக்கும் காரைக்குடி வெயிலிலும் தான் அணிந்திருந்த இரண்டாம் அடுக்கு மேலாடையை சரி செய்துவிட்டு, கலைவதற்கு வாய்ப்பேயில்லாத தலைமுடியை கலைந்ததாய் நினைத்து சரி செய்து கொண்டே படிகளில் ஏறியவரை மரியாதையும் வெட்கமும் கலந்த புன்னகையோடு வரவேற்கிறார் ஸ்ரீவித்யா.
சினிமாவிற்காக அவ்வீட்டை வாடகை பேச வந்திருந்த தனக்கு கிடைத்த மரியாதையால் புழங்காகிதமடைகிறார் அஜீத். ஆனால் அம்மரியாதைக்குப் பின்னால், தன் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளையாவது தட்டிப்போகாமல் அமைய வேண்டும் என்ற ஏக்கம்; இவளுக்குப்பின் பிறந்த இரண்டு மகள்களை கணவனை இழந்த நான் எப்படி கரை சேர்க்கப் போகிறேன் என்ற பதற்றம் என நிறைய சோகங்கள் அணி வகுத்து நிற்பதை பார்வையாளர்களான நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
வீட்டைப் பார்க்க வந்தவரை தன்னைப் பார்க்க வந்ததாய் நினைத்து தன் கடைசி ஆழம்வரை நாணத்தால் சுருங்கி நிற்கிறார் தபு. அவருடைய உயரத்திற்கு அந்த நாணம் செயற்கையாக இருந்தாலும், ரசிக்கும்படி இருந்தது. மிகையற்ற ஒப்பனையில் வீடும் தபுவும் ஜொலிக்க, தான் அமெரிக்காவில் கற்றுக்கொண்ட அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி தபுவை Yes சொல்ல வைக்கிறார் அஜீத். தன்னுள்ளே ஒழிந்து விளையாடி அசௌகரியமூட்டிய பரவசத்திலிருந்து விடுதலை பெற வைத்த Yes என்ற அந்த வார்த்தைக்கு மனதுக்குள் நன்றி சொல்லியவாறே, இன்னமும் குறையாத நாணத்துடனும், அடங்கிக் கொண்டிருக்கும் படபடப்போடும் உயிர்பெற ஆரம்பித்த சிலையாய் நின்றிருந்தாள் சௌம்யா. ஒரு Yes என்ற சொல்லுக்குப் பின்னால் இத்தனை உணர்ச்சிகள் விரிந்திருப்பதை உணராத மனோகர், வீட்டிற்கான நாள் வாடகை குறித்து பேச ஆரம்பித்ததும் அதுவரை அங்கு நிலவிய பரவசம் வடிய ஆரம்பித்து வெடித்தழுகிறாள் சௌம்யா.
இவ்வுலகில் எனக்கென அமைந்த எதையுமே நான் தேர்வு செய்யாத போது, கணவனை மட்டும் நான் ஏன் தேர்வு செய்ய வேண்டுமென்ற ஒரு உலகியல் மறுப்பிற்குள் தன்னை அடைத்துக் கொண்ட சௌம்யாவை, மெல்ல மெல்ல விடுவிக்கிறார் இயக்குனர் மனோகர்.
மீனாட்சி, சௌம்யாவின் எதிர்துருவம். சௌம்யாவின் ஆழுள்ளத்தில் மட்டுமே நிகழும் பரவசங்கள், மீனாட்சியின் பூனைக் கண்களிலிருந்து, பால் முகத்தில் படர்ந்திருக்கும் பூனைமயிர்க்கால் வரை நிகழ்கிறது. தபு போல், தன்னுடைய அனைத்து பரவசங்களையும் Yes என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சுருட்டி வைப்பவள் அல்ல ஐஸ்வர்யாராய். தன்னுடைய பரவசத்தை வெளிப்படுத்த கம்பனிலிருந்து பாரதி வரை சொற்களைத் தேடும் மீனாட்சி, நினைவுகள் கடந்த காலத்திற்குரியவை; சிந்தனைகள் எதிர்காலத்திற்குரியவை என இரண்டையும் ஒதுக்கி நிகழ்காலத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கிறார். மழையில் நனைந்து அவளுடைய சிறகுகள் விரிக்க முடியாமல் போகும் போதெல்லாம், அவற்றை கோதி உலர்த்தி மீண்டும் சிறகடிக்க வைக்கிறார் பாலா என்ற ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்.

இப்படி இருவேறு துருவங்களான தபுவும், ஐஸ்வர்யாவும் மட்டும் தங்களுடைய மீட்சியை மம்முட்டி மற்றும் அஜீத் வழியாக கண்டடையவில்லை. வாழ்க்கையில் சாதித்துக் காட்டுவது மட்டுமே ஆண்மையின் அடையாளம் என்ற சூழலில் சிக்கித் துவண்டு போகும் மம்முட்டியும், அஜீத்தும் கூட தங்களுக்கான மீட்சியை இவ்விரு பெண்களின் வழியே தான் கண்டடைகிறார்கள்.