
கருணையையும், அன்பையும் தன்னுள்ளிருந்து அள்ளியள்ளி இறைக்கிறார்கள் மாறாவும், அவனுக்கு சிறுவயதில் அடைக்கலம் தந்த வெள்ளையாவும். தனக்கு அளிக்கப்பட்ட அன்பை பன்மடங்கு பெருக்கி சுற்றியுள்ள அனைவருக்கும் அளிக்கிறான் மாறா. தன் தாயைப் போலவே, தன் உடலையும் மூலதனமாக்க முயலும் தந்தையிடமிருந்து காப்பற்றப்படும் பதின்ம வயது மகள்; 10 வயது சிறுமியை தன்னுடைய அதீத நம்பிக்கையால் கொன்று விட்டதால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியில் தற்கொலைக்கு முயலும் பெண் மருத்துவர் என மந்தையிலிருந்து வழி தவறிய ஆடுகளை இரட்சிப்பவராக இருக்கிறார் மாறா.
இப்படி வாழ்க்கைச் சக்கரத்தின் இயல்பான சுழற்சியில் இயங்க முடியாதவர்களை அல்லது அச்சுழற்சியின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டவர்களைக் தன் வயிறு முழுவதும் நிரப்பிக் கொண்ட கருவுற்ற அன்னையாய் வளர்ந்து நிற்கிறது அந்த கம்யூன் போன்ற இடம். ஆனால், அச்சுழற்சியைப் பற்றிய ஒரு கனவும், ஏக்கமும் கொண்டவர்களாகத்தான் வெள்ளையா உருவாக்கிய இந்த கம்யூன்வாசிகள் இருக்கிறார்கள். அங்கிருப்பவர்களுக்கு எந்த விதமான தளைகளுமில்லை. சுதந்திரத்தின் காற்றை சுவாசித்து சுவாசித்து களைத்துப் போயிருந்தவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு குடியும், வெள்ளையாவின் பால்யக் காதலைப் பற்றிய சீண்டலும் தான்.
வெள்ளத்தில் தொலைந்து போன தன் காதலியைத் தேடித் தேடி ஓய்ந்து, தன்னுடைய போஸ்ட்மேன் வேலையிலிருந்து ஓய்வும் பெற்று விடுகிறார் வெள்ளையா. ஆனால், தன் காதலியின் நினைவுகளையும், அன்பையும் மற்றும் உறைய விடாமல் பசுமையாக வைத்துக் கொள்ள முயல்கிறார். அவருடைய எப்போதைக்குமான காதலிக்கு எழுதிய கடிதங்களில் உள்ள எழுத்துக்கள் விடைபெற முயன்றாலும், வலிந்து அவற்றின் மேல் மீண்டும் மீண்டும் எழுதி தன் அகத்திலுள்ள அவளுடைய நினைவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார் வெள்ளையா. மாறாவோ, தன் அகத்திலுள்ள அனைத்தையும் ஓவியங்களாக மாற்றி ‘நீர் வழி படூவும் புனை போல’ கால வெள்ளத்தில் பயணித்துச் செல்வதையே விரும்புகிறார். ஒவ்வொரு நாளையும் புதிதாகவே வாழ விரும்புகிறார். இருவருமே தங்கள் அகத்தின் மேல் சற்று அவநம்பிக்கை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வெள்ளையா, எங்கே தன் அகம் தன் காதலியை கைவிட்டுவிடுவோமோ என்று பதறுகிறார். மாறாவோ, எங்கே தன் அகம், அதன் நினைவுகளால் தன்னை சிறைப்படுத்தி விடுமோ என்று பதறி சுற்றித் திரிகிறான்.
கலை உணர்வு மிக்கவர்களுக்கு மாறாவின் ஓவியங்களும், அவர் அறையிலிலுள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஒரு visual treat indeed. அப்படி அவர் வரைந்த வெள்ளையாவின் கதை பற்றிய ஓவியம் தான், வெள்ளையாவின் காதலியை இறுதியில் அவருடன் சேர்த்து வைக்கிறது பாரு வழியாக.
மாறாவுக்கு வெள்ளையா சொல்லிய அதே கதை, அவருடைய காதலியால் பாருவுக்கும் சிறுவயதில் சொல்லப்பட்டிருக்கிறது என்ற ஒரு மிகையான அல்லது செயற்கையான விஷயத்தை மறைப்பதற்காக படம் முழுவதும் எதார்த்தமாக சித்தரிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், மாறாவின் மேல் பாருவுக்கு ஏற்படும் ஈர்ப்பு அத்தனை எதார்த்தங்களையும் செயற்கைத்தனமாக்கி விடுகிறது.
மிக கனமான இக்கதையை தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே கதாபாத்திரம், கேமிராவும், ஒளிப்பதிவும் மட்டுமே. மாறாவும், பாருவும் இறுதிக்காட்சியில், மலைமேல் நின்றிருக்கும் பசும் புல்வெளியும், அவர்களிருவர் மேல் பிரகாசமாக படர்ந்திருக்கும் மங்கிக் கொண்டிருக்கும் சூரிய ஒளியும், அவர்களுடைய செயற்கைத்தனத்தை கடும் பாடுபட்டு மறைக்க முயன்றிருக்கிறது.
[…] இப்படத்திற்கு பதிவர் முத்து எழுதியுள்ள விமர்சனம் கண்ணில் பட்டது. நல்ல பார்வை. https://muthusitharal.com/2021/01/10/maara-the-christ/ […]
LikeLike