கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாட்டில் இருந்து மீண்டு கொண்டிருப்பதால், வாசிப்பின் அடர்த்தி வெகுவாக குறைந்து போயிருந்தது. வாசிப்பு இல்லையென்றால் எங்கிருந்து எழுதுவது, எழுவது…? சமீபத்தில் நடந்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்காக சென்னை வந்திருந்த எழுத்தாளர் ஜெமோவை (ஜெயமோகன்) நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எப்போதும் வாசகர்களால் சூழப்பட்டிருக்கும் தருணத்தில் மட்டுமே அவரை சந்திருத்திருந்த நான் அன்று அவரது அறையில் ஒரு சிலருடன் மட்டுமே சந்திக்க நேர்ந்தது. ஒரு 30 நிமிட உரையாடலுக்கு பிறகு, அவரது அறையில் தனியாக விடப்பட்டேன். சிறிது நேரத்திற்கு பிறகு, மாலை விழா இருப்பதால் ஜெமோ சற்று கண்ணயர விரும்பினார்.
நான் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதிரிலிருந்த வட்டவடிவ கண்ணாடி மேஜையில் அவர் பாதி படித்திருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கத்திலிருந்த நீண்டு அகன்றிருந்த கண்ணாடி ஜன்னல் சென்னையின் நெரிசலை ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்து. இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணம். கையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் மொழி பெயர்த்திருந்த ஆன்டன் செக்காவின் சிறுகதைகள் அடங்கிய புத்தகம்; இடது பக்கத்திலிருந்த ஜன்னல் வழியாக எப்போதும் அயர்ச்சியூட்டும் சென்னையின் நெரிசலை ஓவியமாகப் பார்க்கும் மனநிலை; வலது பக்கத்தில் நான் எப்போதும் இறுகப் பற்றியிருக்கும் ஜெமோ ஆழ்ந்த உறக்கத்தில். இழந்த ஆற்றல் அனைத்தும் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு. கண்ணின் குறைபாடு விரைவில் சரியாகி விடும் என்ற ஒரு திடீர் நம்பிக்கை அல்லது இந்த குறைபாட்டை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத் தேவையில்லை என்ற அப்போது வந்த தைரியம் எனக்கு சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. The magical moment?
இரு வாரங்களுக்குப் பிறகு, மன்றம் (https://www.mandram.org/) என்ற அமைப்பினரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர்களுடைய மாதாந்திர நிகழ்வில் சிறப்புரை ஒன்று ஆற்றக்கோரி. சற்று நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல்வேறு துறை வல்லுநர்களை, அவரவர் துறைகளைப் பற்றி தமிழில் பேசவைக்கும் மேடைகளை உருவாக்கித் தருபவர்கள் இவ்வமைப்பினர். இவர்களுடைய நேரடி நிகழ்வு ஒன்றில் நான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறேன். அந்நிகழ்வைப் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை என்னுடைய தளத்தில் பதிந்திருந்தேன். (https://muthusitharal.com/2018/11/17/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/)
இதிலிருந்து என்னுடைய பதிவுகளை மூன்று வருடமாக தொடர்ந்து வருவதாக என்னை அழைத்த இவ்வமைப்பினர் கூறினார். அதற்குப்பின் பாரதி பாஸ்கர் மற்றும் அழிசி பதிப்பக நிறுவனரான சீனிவாசன் கோபால் போன்றவர்களும் இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றியிருந்ததைப் பற்றி தெரிந்து கொண்டேன். இருவருமே ஜெமோவின் தீவிர வாசகர்கள் என்னைப் போல். சரியென்று ஒத்துக் கொண்டேன். இவ்வுரைக்கான தயாரிப்பு என்னுடைய இலக்கிய வாசிப்பை சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது. Dec 8ம் தேதி நடந்த இந்நிகழ்வின் காணொளி:
இந்நிகழ்வு முடிந்த இரண்டு நாட்களில், நண்பர் காளிபிரசாத் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான ஆள்தலும் அளத்தலும் பற்றிய விமர்சன கூட்டத்தில் பேசுவதற்கான வாய்ப்பு கிட்டியது. கடைசி நிமிடத்தில் முடிவு செய்யப்பட்ட இந்நிகழ்வு Dec12ம் தேதி நடந்தது. மறுபடியும் வாசிப்பு, உரை தயாரிப்பு.
இந்த உரைகளுக்கு என்னை தகுதியானவனாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது விழா Dec 25 மற்றும் 26ல். இவ்வருடம் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. மிக நேர்த்தியாக அரங்கேற்றப்பட்ட பல்வேறு இளம் மற்றும் மூத்த படைப்பாளிகளுடனான வாசக உரையாடல்களையும் உள்ளடக்கிய நிகழ்விது. வருடம் முழுவதும் நான் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான எரிபொருளை இங்குதான் பெற்றுக்கொள்கிறேன். A recharging station indeed!!!
https://www.facebook.com/100008908201177/posts/2712986519008262/
What a Dec it has been for me…
[…] டிசம்பர்- பொன் முத்துக்குமார் […]
LikeLike