டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்

ஒன்றைப் பற்றி எழுதிவிட்டு உடனே அதைப் படிக்கும் வாசகன் அதன்படி அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவது மிக மடத்தானமது. டால்ஸ்டாயும் இந்த மடத்தனத்தைத்தான் செய்தார் என்று சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய டால்ஸ்டாயின் 190வது பிறந்த நாளில் பேருரையாற்றிய ஜெமோ ( எழுத்தாளர் ஜெயமோகன்) சுட்டிக்காட்டினார்.

FB_IMG_1537091927503

ரஷ்ய பேரிலக்கியத்தில் நீங்கா இடம்பெற்று அதன் வழியாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட கொண்டாடப்பட்டு வருகிற இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாயை தனக்கொரு மிகப்பெரிய வழிகாட்டியாகக் கொண்டவர் ஜெமோ. டால்ஸ்டாயை தான் அணுகிய விதத்தை அவர் விவரித்தது, எனக்கமைந்ததுபோல், அங்கிருந்த அனைத்துத் தரப்பு வாசகர்களுக்கும் மிகப் பெரிய திறப்பாகவே அமைந்திருக்கும்.

FB_IMG_1537091919959

டால்ஸ்டாயின் படைப்புகளை தான் புரிந்து கொண்டதை விளக்குவதற்கு ரொமாண்டிச யுகச் சிந்தனையாளர்களான இமானுவேல் காண்ட்(பகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக்காட்டியவர்), ஹெகல்(மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவமான வரலாற்றுவாதத்தை உருவாக்கியவர்) மற்றும் சமூகத்தை எப்போதும் தன்வார்த்தைகளால் சீண்டிக்கொண்டிருந்த சோப்போனோவர் தொடங்கி நம்மூர் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி என தொட்டுத் துலக்கி காட்டியது, தேர்ந்த வாசகர்களே சிறந்த படைப்பாளியாக இருக்கமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

டால்ஸ்டாயின் மிகச்சிறந்த படைப்பான War and Peace (போரும் அமைதியும் என டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் NCBH வெளியீடாக வந்துள்ளது) போர்பற்றிய இயல்பான சித்தரிப்பைத் தரும் ஒரு படைப்பு. போர் என்பது ஒருபோதும் மாபெரும் கொள்கைகளுக்காக நடத்தப்படுவதல்ல; அது ஒரு தனிமனிதனின் அகங்கார வெளிப்பாடு மட்டுமே. போரில் கிடைக்கும் வெற்றிகள் ஆண்மையின் வீரியத்தால் அல்ல; அது ஒரு தற்செயல் பெருக்குகளின் விளைவு மட்டுமே என்றுணர்த்தியுள்ளார் டால்ஸ்டாய். போர் பற்றி வாசகர்கள் கொண்டிருக்கும் கோணத்தைத்தான் இவ்வெழுத்துக்கள் மாற்ற முடிந்ததேயொழிய, வாசகர்களையல்ல. இதன் பொருட்டு அயர்ச்சி கொள்ளும் டால்ஸ்டாய், தன் பிற்காலத்தில் தன்னுடைய முந்தைய படைப்புகளை நிராகரித்து நேரடியான நீதிபோதனைக் கதைகளை எழுத ஆரம்பிக்கிறார். ஒழுக்கம் மதத்திலிருந்து அரசியல் வழியாக குடும்பங்களில் நிறுவப்பட வேண்டியதில்லை என்று, இயல்பான நல்லொழுக்கம் கொள்ளும் கம்யூன் வகை வாழ்க்கை முறையை வலியுறுத்துகிறார்.

FB_IMG_1537091911881

இப்படி டால்ஸ்டாய் தன்னைத்தானே கைவிடுகிறார். இந்த கைவிட்ட (பிந்தைய காலத்து) டால்ஸ்டாய்தான் காந்தி போன்றவர்களை ஈர்த்திருக்கிறார் என்றால், இலக்கியத்தை பொழுதுபோக்குக்காக இல்லாமல் வாழ்க்கையை அறியும் முறையாகக் கொண்ட என்போன்றோருக்கு அந்த கைவிடப்பட்ட டால்ஸ்டாய்தான் ( முந்தைய காலத்து)வழிகாட்டி என்கிறார் ஜெமோ. பின்நவீனத்துவ சிந்தனையாளரான ரோலண்ட் பார்த்தின் புகழ்பெற்ற வாக்கியமான ‘ஆசிரியரின் மரணம்’ (Death of the Author) நினைவிற்கு வந்துபோனது.

படைப்பிற்குப் பிறகு படைப்பாளி அங்கில்லை. வாசகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அப்படைப்பின் படைப்பாளியும் அந்த வாசகர் கூட்டத்தில் ஒருவனே. வாசகர்களின் தன்னிலையே அந்த படைப்பின் வழியாக அவர்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அனுபவத்திற்கு காரணம். அந்த படைப்பாளியல்ல. இந்த பின்நவீனத்துவ சிந்தனை டால்ஸ்டாய் காலத்தில் கருக்கொள்ளாமல் போனது இலக்கியத்திற்கு பேரிழப்பே.

images (56)

3 thoughts on “டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்”

Leave a comment