வருடமொரு முறை நடக்கும் பெருநிகழ்விது. இம்முறை சோழர்கால கட்டிடக்கலையையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் ITC நிறுவனத்திற்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இரைச்சலும் கும்மாளமும் வியர்வையும் அயர்ச்சியும் ஆச்சரியமுமாக நடந்து முடிந்தது.
ஒட்டுமொத்த ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரோடு ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து மூச்சுமுட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகச் சிக்கலான வேலை. பெரும்பாலும் திறந்தவெளிகளிலேயே நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறை தரத்திற்கு பெயர்போன ITCன் உள்ளரங்கத்தில்.
5.30 மணி நிகழ்வுக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது மணி மாலை 6ஐத் தொட்டிருந்தது. வழக்கமாக வரும் ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு நகரின் நடுவில் பிரமாண்டமாய் வீற்றிருக்கும் ITCஐ ஐந்தே நிமிடங்களில் எட்டியபோது கார்கள் முதன்மை வாயிலிருந்து வரவேற்பரையின் வாயில்வரை நீண்ட வரிசையில் காத்திருந்தன. கம்பீரமான காவலாளிகளின் உதவியோடு கணநேரத்தில் தொடர்வண்டிபோல அந்த வாகன வரிசை நகர ஆரம்பித்து அனைவரையும் உதிர்த்து விட்டு அங்கிருந்த சிப்பந்திகளின் உதவியோடு தான் இளைப்பாறும் இடத்தைநோக்கி விரைந்தன. “8.30 மணிக்கு வந்துடறேன் சார்..” என்று என் சாரதியும் விடைபெற்றுக் கொண்டார்.
எங்கிருந்தாலும் தொலைந்து போனதைப்போலவே உணரவைக்கும் பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டிட வடிவமைப்புகளைக் கொண்டதாயிருந்தது ITC. முதல் தளத்தில் வருகையைப் பதிவு செய்து விட்டு நிகழ்வு நடக்கும் இரண்டாம் தளத்திற்கு தானியங்கி ஏணி எங்களை ஏந்திச்சென்றது. சுற்றிலும் சுவரோவியங்களாய் மொகலாய மன்னர்களும், உயிரோவியங்களாய் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுமாக இரணடாம் தளத்தை அடைந்தபோது, மனிதக்கால் கொண்ட குதிரைகளும் (பொய்க்கால் குதிரை), பொய்க்கால் கொண்ட உயர்ந்த மனிதனும் ஆச்சரியப்படுத்தினார்கள். அருகிவரும் நாட்டார் கலைகளை காட்சிப்படுத்தி மரபை நினைவூட்டுகிறார்கள். நவீன வளர்ச்சிக்கு நாம் காவு கொடுப்பது நம் மரபுகளைத்தான். இது தவிர்க்க முடியாதென்றாலும், அவற்றை அறியாமலிருப்பதுதான் நம்முடைய பரிதாபமான சூழ்நிலை.
ஒருசில தடுமாற்றங்களுக்குப் பிறகு, சுவற்றில் மறைந்திருந்த மூன்றாளுயரமும் அகலமும் கொண்ட உள்ளரங்கிற்கான கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது ‘ஆளப்போறான் தமிழன் எந்நாளும்…’ என ஒட்டுமொத்த அரங்கமும் லேசர் ஒளியில் அமிழ்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது. அது எந்த தமிழனென்றுதான் இன்னமும் தெரியவில்லை.கால்பந்து மைதானத்தை நீளவாக்கில் வெட்டி எடுத்து வைத்ததுபோல் இருந்தது அந்த நீண்ட செவ்வக வடிவ அரங்கம். மேல் கூரை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறாள் உயரத்திலிருந்தும் அங்கிருந்த ஜனத்திரளுக்கு அதுபோதுமானதாக இல்லை.
அரங்கம் முழுவதும் தரையில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்புகளும், மேற்கூரையிலிருந்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் தன்னொளியால் நிரப்பிக்கொண்டிருந்த விளக்குகளும் ITCன் உயர்தரத்தை பறைசாற்றின. இந்த தரைவிரிப்புகளில் காலணியற்ற வெற்று பாதத்தோடு நடப்பது , இயற்கைப் புல்வெளிகளில் நடப்பதுபோல் ஒரு அலாதியான சுகத்தை தருவது. என்ன செய்வது, இந்த நாகரீக உலகத்தில் செயற்கை வழியாகத்தான் இயற்கையை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பிரமாண்டமான செயற்கைகளின் மேல் நாம் கொண்டிருக்கும் ஒரு ஈர்ப்பும் இப்பெருநிகழ்வில் கலந்துகொள்வதற்கான ஒரு தூண்டுதல். அத்தனை பெரிய அரங்கம் நிரம்பி ததும்பி வழிந்து கொண்டிருந்தது அந்த ஈர்ப்பினால்தான்.
மேடையின் முகப்பிலிருந்து போடப்பட்டிருந்த வெள்ளைத்துணி போர்த்திய ஒரு ஆயிரம் இருக்கைகள் தானும் நிரம்பி அவ்வரங்கத்தின் பாதிப்பகுதியை நிறைத்திருந்தது. தெரிந்த முகங்களின் தெரியாத குடும்ப முகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு்ம், சுவாரஸ்யமான மேடைநிகழ்வுகளை நின்று கொண்டே நோக்கியவாறும் நேரம் கடந்து கொண்டிருந்தது. லேசரின் வண்ணஜாலங்கள் மேடையில் உள்ள திரையில் புதுப்புது கற்பனாவாத உலகங்களை உருவாக்கி மேடை நிகழ்வுகளை சுவாரஸ்யமாக்கின. ‘மதுர குலுங்க ஒரு நையாண்டி ஆட்டம் போடு…’ என ஆடிய குழுவினர் கடைசிவரை என்ன நிற உடை அணிந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை அந்த லேசர் ஜாலத்தில். எல்லாம் மாயைதான் போலும் என்ற ஆதிசங்கரரின் அத்வைதத்தை எண்ணிக்கொண்டபோது, கால்கள் கடுக்க ஆரம்பித்ததை மாயை என்று ஒதுக்கித் தள்ளமுடியவில்லை. வயிறும் பசிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குமேல் மேடை நிகழ்வுகளில் ஒன்ற முடியவில்லை.
மணி 8ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. அரங்கத்தின் மறுபாதியினுடைய ஒரு பாதி குழந்தைகளின் விளையாட்டுகளுக்காக ஒதுக்கப்பட்டு மீதிப்பாதி உணவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. புரட்டாசி சனி என்பதாலோ என்னவோ அசைவ உணவிருக்கும் வரிசையை தேடவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட மறைத்துத்தான் வைத்திருந்தார்கள். அங்கிருந்த சிப்பந்திகள் முதல் குளிரூட்டிகள் வரைக்கும் இது சோதனைக் காலம்தான். குறையாது கூடிக்கொண்டே இருந்த திரளின் வெப்பத்தை தொடர்ந்து உறிந்து வெளியே துப்பிக் கொண்டிருந்த குளிரூட்டிகள் களைத்ததில் சற்று வியர்க்க ஆரம்பித்தது. அதேபோல நிரப்ப நிரப்ப தீர்ந்து கொண்டேயிருந்த உணவுவகைகளை நிரப்பி நிரப்பி சிப்பந்திகள் களைத்துப் போனதால் பலரின் உணவுத்தட்டுக்கள் தயிர்சாதத்திற்கும், சிக்கன் குழம்பிற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. பந்திக்கு முந்தியிருக்க வேண்டும்.
உணவை நின்று கொண்டு கூட சாப்பிட முடியாத அளவிற்கு நெரிசல். கால்கள் வலியெடுத்து உட்கார இடம்தேடி சாப்பாட்டுத் தட்டோடு, அப்போதும் அதிர்ந்து கொண்டிருந்த அரங்கை விட்டு வெளியேறி வரவேற்பரையில் ஏதாவது இருக்கை இருக்குமா என்று துலாவியும் பயனில்லை. ஆங்காங்கே போடப்பட்டிருந்த இருக்கைகளிலும், அங்கிருந்த மாடிப்படிகளிலும் நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் தட்டோடு அமர்ந்து, நின்று உண்ட களைப்பை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஊர்த்திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன. A testing time indeed for ITC. எங்களுக்கும்தான். பசியும் கால்வலியும் மெல்ல விடைபெற ஆரம்பித்தது. ஆனால் அயர்ச்சியும் களைப்பும் மட்டும் இன்னமும் இருந்தது.
ஆனால் இது போன்ற அயர்ச்சிகளை திருவிழா போன்ற இந்நிகழ்வுகளில் தவிர்ப்பது கஷ்டம் என்றே தோன்றுகிறது. இதைப் போக்குவதற்கான ஆற்றலை திருவிழாக் கூட்டத்தில் கலந்து கரைவதிலிருந்தே நாம் பெற்றுக்கொள்ள முடியும். இனிப்பு வகையறாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேஜைக்கருகே மீண்டும் தெரிந்த முகங்களை தெரியாத அவர்களுடைய குடும்ப முகங்களோடு சந்திக்கநேர, அயர்ச்சியும் களைப்பும் கூட கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற ஆரம்பித்தது. ஆனால் திறந்தவெளிக் காற்றே உடலுக்கு உடனடித் தேவையாக இருந்தது.
அங்கிருந்த சுவரோவியங்களுக்கும் வழியில் தென்பட்ட உயிரோவியங்களுக்கும் விடை கொடுத்து விட்டு தரைதளத்தை தொடும்போது மணி ஒன்பதை தொட்டுத் தாண்டிக்கொண்டிருந்தது. அங்கிருந்த சிப்பந்திகளின் நன்றிப் புன்னகையை ஏற்றுக்கொண்டு வெளியில் வந்து போது கிடைத்த அந்தக் காற்று, கொஞ்சம் வெம்மையாக இருந்தபோதிலும் சுகமாகத்தான் இருந்தது. நிர்மால்யமான அந்த வானத்தின் மானம் காப்பதுபோல நிலா பேருருக் கொண்டிருந்தது. இன்று பௌர்ணமியோ என்றெண்ணி வானம் நோக்கி வியந்திருந்த என்னிடம், “இல்லை..இன்னும் இரண்டு நாளில் என்றனர்..” மனைவியும் மகளும் ஒருசேர.