பள்ளிக்கூடப் புத்தகத்தின் அட்டைப்படத்திலுள்ள அம்பேத்கரின் நிலைமையை மாரி செல்வராஜ் விவரிக்க விவரிக்க, அவருடைய வேதனை நமக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதியான உடல் மொழி, அவருடைய ஆழ்மனத்திலுள்ள தாழ்வு மனப்பான்மையை சிதறடித்துக் கொண்டு மேலெழும்பி ததும்பி வழிந்து அங்கிருந்த அனைவரையும் ஆட்கொண்டு உறைய வைத்தது. அந்த உறைந்த கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உட்கார இடமில்லாமல், நிகழ்வு நடக்கும் அரங்கத்தையொட்டியிருந்த அறையிலிருந்த புத்தகங்களுக்கு விழியைக் கொடுத்துவிட்டு, அரங்கத்தின் சுவர்களுக்கு செவியைக் கொடுக்க வேண்டியிருந்தது. நாள் தோறும் இளம் வாசகர்களை, இலக்கியம் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கு இவ்வரங்கு கொஞ்சம் சிறியதுதான். அவரோடு சேர்ந்து மிகச்சிறந்த ஆக்கங்களைத் தந்த இயக்குநர் வசந்தபாலனும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் அரங்கின் வாசலைத் தாண்டி நிற்க இடமின்றி பக்கத்திலிருந்த புத்தகங்கள் நிறைந்த அறையின் இடைவெளிகளையும் நிரப்பியிருந்தது.
காந்தி அடிக்கடி கூறி வந்ததைப்போல, மாற்றுத்தரப்புடன் உரையாட மறுக்கும் எந்த சமூகமும் முன்னகர்வதில்லை என்பதே ‘பரியேறும் பரிமாளின்’ சாராம்சமாக இருந்ததை அங்கு பேசிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டினார்கள். கூட்டம் முடிந்து அரங்கத்தை விட்டு வெளியேறி, அந்த புத்தக அறையில் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாரி செல்வராஜும் ஜெயமோகனும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக நின்றுகொண்டே ஆற்றிய அந்த உரையாடல், இன்னமும் அங்கு எஞ்சியிருந்த 30 அல்லது 40 பேருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.
எப்போதுமே பசுமையில் தன் கண்களை நனைத்திருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்போன்றோருக்கு, திருநெல்வேலி மாவட்டத்தின் சில வறண்ட நிலபரப்புகள் அளிக்கும் சோகத்தையும்; அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பௌர்ணமி இரவு நேரத்து அழகியலையும் மிக இயல்பாக ஜெமோ விவரிக்க ஆரம்பிக்க, அங்குள்ள மனிதர்களுக்குப் பின்னாலுள்ள சோகங்களையும், இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் நவீன தீண்டாமையின் கோரமுகங்களையும் மாரி விவரிக்க ஆரம்பிக்க அறையிலுள்ள அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டது அந்த உரையாடல்.
தலித் மாணவர்களின் புத்தகத்தில் பிரகாசமாய் ஒளிவீசும் கண்களைக் கொண்ட அம்பேத்கர், தலித் அல்லாத மாணவர்களின் புத்தகத்தில் பார்வையிழந்த குருடனாகவோ; அல்லது ஒட்டுமொத்தமாய் கிழிக்கப்பட்டிருப்பதையோ மாரி நினைவு கூர்ந்தது, அம்பேத்கருக்கு நிகழ்ந்த வரலாற்றுச் சோகம். இதைக் கண்டிப்பாக அந்த மாணவர்கள் செய்திருக்க மாட்டார்கள்; அம்பேத்கரை தலித் சமூகத்தின் தலைவராக மட்டுமே குறுக்கிக் கொண்ட பெரியவர்களின் சிந்தனைக் கோளாறுதான் இதற்கான காரணம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் சமீபத்தில் பதின்மவயது சிறுவர்களால் நடத்தப்பட்ட ஆணவக்கொலைக்கு சாதி வெறியைவிட விமர்சனங்களையோ, கேலிகளையோ, கிண்டல்களையோ தாங்கிக்கொள்ள முடியாத சவலைப்பிள்ளைத்தனம்தான் காரணமென்று மாரி சொன்னபோது மனம் பதற ஆரம்பித்தது. இதுதான் பிற்காலத்தில் சாதிவெறியாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
எங்கோ சில இடங்களில் நடக்கும் இந்த ஆணவக்கொலைகளை விதிவிலக்குகள் என்றும் புறந்தள்ள முடியவில்லை. ஒரு துளியானாலும் விஷம் விஷமே. அந்தக்காலங்களில் இதுபோன்ற பதின்மவயதுக்காரர்கள் மத்தியில் எப்படியாவதொரு கம்யூனிச தோழர் இருப்பார் வழிகாட்ட என்று ஜெமோ குறுக்கிட்டுச் சொன்னது நிசர்சனமான உண்மை. அதுபோன்ற புரோலட்டேரியன்கள் காட்சிப்பொருளாகிவிட்ட காலமிது. ஆசாரித் தெருவில் காந்தி சிலை இருப்பதாலேயே அவர் ஆசாரிகள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்தவராகத்தான் மாரிகூட இருந்திருந்திருக்கிறார். ஆனால், பரியேறும் பெருமாளின் ஒவ்வொரு காட்சிகளிலும் தான் எடுத்துக் கொண்ட அக்கரையை, எந்த சமூகத்தினரையும் புண்படுத்திவிடக்கூடாது என்பதிலிருந்த உறுதியை விளக்கியபோது அங்கிருந்த அனைவரும் வாய்பிளந்திருந்தோம்.
புகழ்பெற்ற சமூக ஆராய்ச்சியாளரான ராஜ்கௌதமன் தலித்தியச் செயல்பாடுகளை பின்வரும் நான்காக பிரிக்கிறார்:
1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை
2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை
3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை
4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.
பெரும்பாலும் பா.ரஞ்சித் தன் படங்களில் வலியுறுத்துவது முதல் இரண்டு வகைமைகளைத்தான். இரண்டுமே ஆதிக்கசக்திகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி. ஆனால் மாரி, இது நான்கும் கலந்த ஒரு கலவை ஒன்றை முன்வைக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஜெமோ குறிப்பிட்டது போல, தலித் விடுதலை என்பது மானுட விடுதலையை நோக்கிய நகர்வாக இருக்கும் பட்சத்தில் எந்த வகைமையை மாரி சார்ந்திருந்தாலும் அவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.
[…] https://muthusitharal.com/2018/12/02/காந்தி-ஆசாரியா/ […]
LikeLike
[…] https://muthusitharal.com/2018/12/02/காந்தி-ஆசாரியா/ […]
LikeLike