தன் இரண்டு உள்ளங்கைகளையும் கைதட்டுவது போல் இணைத்து “எனக்கு இந்த ஆய்வும் புனைவும் இப்படித்தான் ஒட்டியிருக்கு. இப்படி இரண்டும் struck ஆகிப்போனது தான் என் கோளாறுன்னு என் வீட்டுக்காரம்மா கூட சொல்றாங்க” என்று ஒட்டிய உள்ளங்கைகளை பிரிக்க முயன்று தோற்பதுபோல் பாவனை காட்டினார் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் நாயகன் ராஜ்கௌதமன். “ஆனா..இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு…” என ஒட்டியிருந்த கைகளை பிரித்து இடதுதோளை உடம்போடு ஒட்டிக்கொண்டு, இடதுகை சுட்டுவிரலை மட்டும் உயர்த்தி, வலது தோளை சற்றுத் தாழ்த்தியது, பெரிய மேடைகளில் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான உடல்மொழி. அவரது பேச்சுமொழியும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இரண்டிற்கும் அப்படியொரு ஒத்திசைவு. இடதாகவும் வலதாகவுமற்றவர்கள் இரண்டு கெட்டான பார்க்கப்படும் சமகாலச்சூழலில்,
மார்க்ஸிய மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளோடு தன் உள்ளுணர்வையும் புனைவுத் தன்மையையும் துணைக்கு அழைக்கும் இவர்போன்ற நடுநிலையான தமிழ்பண்பாட்டு ஆய்வாளர்கள் ஒரு கலங்கரை விளக்கமே.
இலக்கியச் சரடில் விடுபட்ட முத்துக்களை கண்டெடுத்து கோர்ப்பதில் வல்லவர்களான, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர், ராஜ்கௌதமனை கண்டடைந்ததில் வியப்பொன்றுமில்லை. 2010ல் வெறும் தயிர்சாதத்துடன் தொடங்கிய இம்மகத்தான பணி இந்த ஒன்பதாவது வருடத்தில் 200 பேர் தங்கி 500 பேர் பங்கேற்கும் இலக்கியத்திருவிழாவாக மாறிப்போயுள்ளது. மார்க்சியர் கோவை ஞானி போன்றவர்களின் இதுபோன்ற ஆரம்ப காலத்து இலக்கியச் செயல்பாடுகளை ஒரு இயக்கமாக விரித்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் ஜெயமோகனை ( ஜெமோ) ஆதர்சமாகக் கொண்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பெருங்கொடை.
2016ன் டிசம்பரின் இறுதிவாரத்தில் ஒருநாள் உடம்பிலுள்ள கற்களை உடைத்தெறியும் பட்டறைகள் நிறைந்த அந்த மதுரையின் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலில் எதிர்பாராதவிதமாக எழுத்தாளர் வண்ணதாசனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து ஓரிரு நாட்களாயிருந்தது அப்போது. ஜெமோவின் வாசகர் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “கோயம்புத்தூர் வந்திருந்தீங்களா?” என்பதே அவருடைய முதல்கேள்வியாக இருந்தது. அந்த வருடம் அவருக்குத்தான் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்தது. சந்தித்த ஓரிரு நிமிடங்களிலேயே அவர் கதைகள்போல் மனதில் வாஞ்சையாக ஒட்டிக்கொண்டார். நிகழ்வுக்கு போயிருந்தால் இதுபோன்ற நிறைய தருணங்கள் கிட்டியிருக்கும். அடுத்த வருடமும் இப்பெரு நிகழ்வை தவறவிட்டேன்.
இம்முறை 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டும் சென்னையிலிருந்து கிளம்பிய இரண்டடுக்கு குளிரூட்டிப் பெட்டியில் தரையில் படுக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. மனைவியையும், மகளையும் திண்டுக்கல்லில் விட்டுவிட்டு கோவை கிளம்பியபோது மணி காலை ஒன்பதைத் தொட்டிருந்தது. இன்னும் அரை மணிநேரத்தில் ராஜஸ்தான் சங்கத்தில் நிகழ்வுகள் தொடங்கியிருக்கும். கூகுள் வழிகாட்டியோ, அச்சங்கமிருக்கும் ஆர்.எஸ்.புரம் போய்ச் சேர்வதற்கு இன்னும் 166 கி.மீ என்று காட்டியது. அன்று காலை முழுதும் நடக்கப்போகும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களான கலைச்செல்வி, சரவணன் கார்த்திகேயன் மற்றும் சரவணன் சந்திரனின் கலந்துரையாடலை தவறவிடப்போகிறோம் என்ற எரிச்சலை ‘நினைவோ ஒரு பறவை…விரிக்கும் அதன் சிறகை…’ என்று 80களின் இளையராஜா சற்று குறைத்தார்.
90களில் கல்லூரி காலங்களில் கோவையிலுள்ள CIT கல்லூரியின் வருடாந்திர கலைநிகழ்ச்சியான Harmonyக்கு சென்றது நினைவடுக்களிலிருந்து மேலெழுந்து வந்தது. சில பொருளாதாரக் காரணங்களால், படிக்க வாய்ப்புக் கிடைத்தும் தவறவிட்ட கல்லூரியிது. அந்நினைவுகளை மீண்டும் கீழடுக்குக்கு அனுப்பிவிட்டு, அந்த பிப்ரவரி மாதத்திலும் ஆட்டிப்படைத்தக் குளிரில் குளிப்பதற்குக் கூட மனமில்லாமல் அக்கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் உலாவிய நினைவுகளை மட்டும் மேலடுக்கில் வைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு இப்போது தான் கோவை நோக்கிய பயணம். அந்த குளிரெல்லாம் இப்போது விட்டுப் போய்விட்டதென்று கோவை நண்பர்கள் சொல்லியும் சில குளிராடைகளை எடுத்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 3 மணிநேரப்பயணத்திற்குப் பிறகு கோவையை நெருங்கியபோது மணி 12த் தொட்டிருந்தது. சென்னையின் டிசம்பர் மாதக்குளிர்கூட அங்கில்லை. மென்வெயில் சற்றே சுட்டெரித்தது.
சில நிமிடப் பயணங்களில் தெருவுக்குத் தெரு வித்தியாசம் காண்பிக்கும் சென்னையின் பன்முகத்தன்மையின் ஒழுங்கீனங்கள் ஏதுமற்று கோவையின் தெருக்கள் எல்லாம் ஒன்றுபோலிருப்பது போலத் தோன்றியது. வண்டியின் இயந்திரம் எந்நேரத்திலும் எரிபொருள் வேண்டி கூவும் நிலையிலிருந்தது. எங்களுடைய இயந்திரமும்தான். இரண்டையும் நிரப்பிவிட்டு நிகழ்வு நடக்கும் ராஜஸ்தான் சங்கத்தை அடைந்தபோது மணி 1.30த் தொட்டுத் தாண்டியிருந்தது. காலை அமர்வுகள் அனைத்தும் முடிந்து மதிய உணவிற்காக நிகழ்வு நடக்கும் முதல்தளத்திலிருந்து ஒவ்வொருவராக கீழிறங்கி வந்து கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்த பெட்டியை எடுத்துவிட்டு சாரதிக்கும் வண்டிக்கும் விடை கொடுத்துவிட்டு, சில நிமிட ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு வித்தியாசமான அக்கட்டிடத்தின் வரைபடம் புலப்படத் தொடங்கியது. கூகுளைப் போல எல்லா இடத்திலும் வழிகாட்டுவதற்கு ஏதாவதொன்றைத் தேடும் பழக்கத்திற்கு வந்திருக்கிறோம். இப்படி அனைத்தையும் out source செய்து விட்டால் நம்முடைய உடம்பின் பாகங்கள் அனைத்தும் பயனற்று நாம் ‘மச்ச’ அவதாரத்திற்கே திரும்பி விடுவோம் போலுள்ளது. பரிணாம வளர்ச்சிக்கு சரியான எதிர்ப்பதம் என்னவென்று தெரியவில்லை. Devolution? ஆனால் அது ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதுபோல் எனக்கொரு பிரம்மையுண்டு.
முகப்புப் படிகளில் ஏறியவுடனே நம்மை உள்வாங்கிக் கொள்ளும் பிரமாண்ட அரங்குகளைப் போலன்றி ஒரு நீண்ட செவ்வக வடிவிலான சுவற்றோவியம் நம்மைத் தடுத்து ஆச்சரியப்படுத்துகிறது. அதையொட்டி இடதுபுறம் மேலேறிச் செல்லும் படிக்கட்டுகள் சென்றடையும் இடைமட்டத் தளத்தில் உணவருந்தும் அறையிருந்தது. அங்கே பெட்டியோடு நின்றிருந்த எனக்கு சாகுல் தங்கும் அறைக்குச் செல்லும் வழியைக் காட்டி மீனாவிடம் என் வருகையைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். இந்நிகழ்வை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் சிலர் இவர்கள் என்று தெரிய ஆரம்பித்தது. சாகுலின் இந்தக் கரிசனம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் கல்யாண நிகழ்வை நினைவுபடுத்தியது. முத்து என்று அறிமுகம் செய்து கொண்ட என்னிடம் “லண்டன் முத்துவா? என்று வினவியவரிடம் “ இல்லை. ‘முத்துச்சிதறல்’ முத்து “ என்றேன். ஜெமோவின் வாசிப்பு தந்த அடையாளமிது.
சற்றுநேரத்தில் அங்கு பரபரப்போடு வந்த ஜெமோவிடம் காலதாமதத்திற்கான காரணத்தை தயங்கித் தயங்கி சொல்லியதும் என்னைச் சாப்பிடச் சொல்லிவிட்டு மீண்டும் பரபரக்க ஆரம்பித்தார். சற்று அருகில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. உருவத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத கணீர் குரல். இப்படி பேசிப்பேசியே உடல் சிறுத்தவர் போல இருந்தார். இந்த இரண்டு நாட்களிலும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு வாசகர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. விழா நாயகன் ராஜ்கௌதமன் அவர்களின் சமகாலத் தொடர்ச்சி இவர். மிக முக்கியமான பண்பாட்டு கள ஆய்வாளர். ஜெமோவால் பெரிதும் மதிக்கப்படுபவர். இவரை மட்டுமல்ல, தீவிர களப்பணியாளர்கள் அனைவரையுமே பெரிதும் மதிப்பவர். என்னால் முடியாததை அவர்கள் செய்கிறார்கள் என்பார்.
அந்த வளாகத்தினுள்ளேயே இருந்த பக்கத்து கட்டிடத்தில் தங்கும் அறைகள் இருந்தன. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விசாலமான தனித்தனி அறைகள். மூன்றாவது தளத்திலிருந்த எனக்கான அறையை மீனாவிடம் உறுதி செய்து கொண்டு பெட்டியை அங்கு கிடத்திவிட்டு கீழிறங்கியபோது சரவணன் சந்திரனை வாசகர்கள் சூழ்ந்திருந்தார்கள். நானும் சென்னை வட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரும் வள்ளியப்பனும் அவர்களோடு சேர்ந்து கொண்டோம். தன்னுடைய ‘சுபிட்ச முருகன்’ நாவல் பற்றியும் கிட்டத்தட்ட 4000 சொற்கள் அடங்கிய தன்னுடைய முகநூல் பற்றிய பதிவுகளையும் சுவாரஷ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார். காலையில் நடந்த இவருடைய கலந்துரையாடல் இதைவிட சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மணி 2.30த் தொடவிருந்தது. அடுத்த நிகழ்வுக்காக அரங்கம் தயாராய் இருந்தது. ஒரு 500 பேர் வசதியாக அமரலாம். நெருக்கியடித்தால் ஒரு 600 பேர் அமரலாம். அனைவரின் மூச்சுக்காற்றையும் பரவலாக்கி விடும் வகையில் மிக உயரத்திலிருந்தது மேற்கூரை. முதன்மை நிகழ்வுகளுக்கான பெருமேடைக்கு சற்று முன்னால் ஒரு நான்கு பேர் மட்டும் அமரும் வகையில் செயற்கையாக ஒரு சிறுமேடை அமைக்கப்பட்டிருந்தது, கலந்துரையாடல்களுக்காக.
ஸ்டாலின் ராஜாங்கம் – காந்தியை நான் படிக்கத் தேவையில்லை
நிகழ்வு ஆரம்பிக்கும்போது சரியாக மணி 2.30த் தொட்டிருந்தது. இந்த வரியை அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் எழுதவேண்டியிருக்கும். அத்தனை இராணுவ ஒழுங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் நிபுணத்துவம் ஆச்சரியமான ஒன்று. பெரும்பாலான இலக்கிய வட்டங்கள் வெறும் வட்டங்களாகவே(பூஜ்யம்) மாறிப்போவது இந்த ஒழுங்கு வளர்த்தெடுக்கும் நிபுணத்துவம் கைகூடாமல் போவதால்தான். அரங்கு முழுதும் நிரம்பியிருந்தது. அமைதியான அந்த அரங்கின் மேடையில் கடலூர் சீனுவால் அமரவைக்கப்பட்ட ஸ்டாலின் தன்னுடைய கணீர் குரலில் அயோத்திதாசர் பற்றி பேச ஆரம்பித்தார்.
19ம் நூற்றாண்டில் தமிழ் பண்பாடு மறுவரை செய்யப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலகட்டம் எனலாம். ஆனால் இந்த மறுமலர்ச்சியை பெரும்பாலும் கையிலெடுத்த பிராமண-சத்திரிய-வேளாள கூட்டணியின் குறைபாடுகளையும் திரிபுகளையும் சுட்டிக்காட்டுபவராக அயோத்திதாசர் இருந்ததை விளக்கினார். வணிகர்களுக்கான மதமான சமணம் தமிழ் மேல் கொண்டிருந்த செல்வாக்கை மறைப்பதாகத்தான் இருந்தது இம்மறுமலர்ச்சி. குறிப்பாக சமண மொழியான பிராகிருதத்தின் ‘திரி’ சைவத்தின் தனித்தமிழ் இயக்கத்தால் ‘திரு’ என மாற்றப்பட்டது. திரிகுறள், திருக்குறள் ஆனது என நூல் தொடங்கி ஊர்ப்பெயர்கள் வரை சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலும் தலித் சமூகத்தினருக்கு எதிரியாகவே சித்தரிக்கப்படும் காந்தியைப் பற்றி நான் வாசிக்க வேண்டியதில்லை என்று ஒருவரின் கேள்விக்குப் பதிலாக அளித்தார். பெரும்பாலும் முன்முடிவுகளையும் ஊகங்களையும் தரவுகளின் அடிப்படையில் நான் உதறியிருக்கிறேன் என்ற ஸ்டாலின், அதற்கு உதாரணமாக காந்தியின் மேல் தன் சமூகம் வழியாக கொண்டிருந்த முன்முடிவுகளை எவ்வாறு கள ஆய்வில் தான் கண்கூடாக கண்ட ஹரிஜன் இயக்கதின் விளைவுகள் மாற்றின என்பதைக் கூறினார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்த முஸ்லிம்களுக்கான இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு வேண்டாம் என அம்பேத்கரின் பூனா ஒப்பந்தத்தை தோல்வியுறச் செய்திருந்தாலும், அதை ஈடுகட்டுவதற்காக அவர் ஆரம்பித்த ஹரிஜன் இயக்கத்தால் நாடெங்கிலும் தலித்துகளுக்கு கிடைத்த நன்மைகள் மிக முக்கியமானவை என தரவுகளின் வழி உணர்ந்ததால், நான் காந்தியைப் பற்றி செவிவழியோ அல்லது படித்தோ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்றார்.
நம்பிக்கையான உடல்மொழியும், கணீர் பேச்சு மொழியும் அவருடைய கள ஆய்வுப்பணிகளிலிருந்து கிட்டியவை. இதுவே அவரை இதுபோன்ற கலந்துரையாடல்களை எதிர்கொள்வதில் எழுத்தாளர்களைவிட ஒருபடிமேல் வைக்கிறது. இதற்கு முத்தாய்ப்பாய் இதுவரை எழுதப்பட்ட தலித் வரலாறுகள் ஒன்றை நிரப்பியோ, மற்றொன்றை எதிர்த்தோதான் எழுதப்பட்டுள்ளது என்றும்; ஆனால் ஒரு முழுமையான தலித் வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்றும்; அதை எழுதும் தகுதியுள்ளவராக உங்களை மட்டும்தான் நான் சொல்வேன் என்று ஜெமோ கூறியதை நம்பிக்கையான புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட சுவாரஸ்யமான பதில்களை அளித்ததில் நொடிகளில் நிகழ்வுக்கான ஒட்டுமொத்த நேரமும் முடிந்தது போலிருந்தது. நாள் முழுவதும் பதிலளிப்பதற்குத் தேவையான ஆற்றலோடும் அறிவோடும் ஸ்டாலின் இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடுத்த அமர்வு பற்றிய பதற்றம் தொற்றிக் கொள்ள மிக முக்கியமான இந்த அமர்வு அவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வளர்ந்து வரும் எழுத்தாளரும் கவிஞருமான நரனும், தமிழ் மற்றும் மலையாள இலக்கிய வட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான சாம்ராஜ் கூட்டணியின் கவிதைக்கான அமர்வு ‘’அற்புதமாக’ தொடங்கியது. இந்த அற்புதம் என்ற வார்த்தையை வைத்து த.மு.எ.ச வை வச்சு செய்துவிட்டார் பகடிக்கு பெயர்போன சாம்ராஜ்.
நரன் சாம்ராஜ் – ஒரு ‘அற்புதக் கூட்டணி’
நண்பர் முத்து குமார் நன்றாக அமைந்துள்ளது.
LikeLike
மிக்க நன்றி முரளி.
LikeLike
[…] […]
LikeLike
[…] […]
LikeLike