ஜெமோவுடன் ஒரு காலை நடை
‘ஜெ இப்பத்தான் கீழ போனாரு…’ என்ற சத்தம் முணுமுணுப்பாய் அறையின் கதவு வழியே கசிந்து கொண்டிருந்தது, காலையில் முழிப்புத் தட்டியிருந்தபோது. சடுதியில் கிளம்பி மூன்றாவது தளத்திலிருந்து தரைதளத்திற்கு வந்தபோது, கச்சேரி களைகட்டியிருந்தது. தங்கும் அறைகளிருந்த கட்டிடத்தின் சுவர்களைச் சற்று நீட்டித்துக் கட்டப்பட்ட நீண்ட திண்ணையில் சிலர் அமர்ந்திருக்க, சுற்றிப்பலர் நின்றிருக்க நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெமோ. காந்தியம், கம்யூனிசம் என்று போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 40 பேரிருந்த அந்த கலந்துரையாடலில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.
ஆசியர்களை சற்றுத் தாழ்த்திப் பார்க்கும் மார்க்ஸியத்தின் இனவாதம், அதற்கான காரணம் என சுவாரஸ்யமாகச் சென்றது பேச்சு. ஆசியர்களை நாம்தான் இக்கட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற புரோலட்டேரியன்களுக்கும், அவர்களின் இருளைப் போக்கவேண்டி மெழுகுவர்த்தி ஏந்திய கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் ஏதும் வித்தியாசமில்லையென்று தோன்றியது. ‘மதம் மனிதர்களின் அபின்’ என்ற மார்க்ஸின் வாசகத்தை ‘அபின் ஒரு காயத்திற்கான மருந்து’ என்று வேறுகோணத்தில் யோசித்த மார்க்ஸியரான கோவை ஞானியும் நினைவுக்கு வந்தார். மார்க்ஸும் ‘இதயமற்றவர்களுக்கான இதயம் தான் மதம்’ என்ற தன் கூற்றின் மூலம் மதத்தின் தேவையை உணர்ந்தவராகவே தோன்றுகிறார். இலட்சியவாதத்தின் இலக்குகள் ஒன்றுதான், வழிமுறைகள்தான் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
மணி 8ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. சுற்றி இருந்தவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காயிருந்தது. சற்றும் தொய்வில்லாமல் உரையாடல் சுவாரஸ்யமாகச் சென்று கொண்டேயிருந்தது.
காந்தி இலட்சியவாதி மட்டுமல்ல. நடைமுறைவாதியும்கூட என்பதை எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனும் ஜெமோவும் மாறி மாறி அவருடைய வெவ்வேறு வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து சுட்டிக்காட்டிக் கொண்டேயிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள ஏதாவது இருக்குமென்றால் குஜராத்தியர்கள் ‘வாடிக்கையாளர்கள் நம் கடவுள்’ என்பதை மட்டும் பெற்றுக்கொண்டார்கள் என்ற ஜெமோவின் பேச்சிலெழுந்த குபீர் சிரிப்பில் பீதியானார்கள் அன்றைய நிகழ்வுக்கான ஆரம்பகட்ட வேலைகளை ஒருங்கிணைத்து கொண்டிருந்த விஷ்ணுபுரம் வட்டத்தினர்.
காலையுணவுக்கான ஏற்பாடுகளனைத்தையும் முடித்திருந்த விஜயசூரியன் “மணி…இப்பவே எட்டரை.இன்னும் ஒருத்தரும் சாப்பிட வரல. எப்படி நீங்க திட்டமிட்டபடி ஒன்பதரைக்கு லீனா மணிமேகலையுடனான நிகழ்வை ஆரம்பிக்க முடியும்்…” என்று அரங்காவிடம் பதற ஆரம்பித்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட ஜெமோ அறை நோக்கி கிளம்ப கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தது. அங்கிருந்த காற்றில் மார்க்ஸும், காந்தியும் கலந்தேயிருந்தார்கள்.
லீனா மணிமேகலை – பெண்ணியத்தின் இறுக்கம்
காலையில் சாப்பிட்டிருந்த பொங்கலில் கிடைத்த ஒரு மயக்க உணர்வை ‘தூக்கியடிச்சிருவேன் பாரு..’ என்ற வகையறாப் பதில்களால் கலைத்துப்போட்டு விட்டார் லீனா. அவர் முகத்தில் எப்போதும் இருந்த அந்த இறுக்கம் ஆணாதிக்க சமூகத்திற்கெதிராக தான் எப்போதும் கத்தியுடன் இருப்பவள் என்று சொன்னதின் விளைவென்றே எண்ணத் தோன்றியது. ஒரு பெண் என்ற காரணத்தால் மட்டும் தான் சந்தித்த வலிகளையும், அதை வென்றெடுத்த தன் வழிகளையும் நம்பிக்கைத் ததும்ப ததும்ப ‘பெண்கள் தின’ மேடைகளைப்போல பல மேடைகளில் பேசிய லீனாவிற்கு இது முற்றிலும் புதிய மேடை.
விழாவின் நாயகனான ராஜ்கௌதமனும் இந்த அமர்வில் கலந்து கொண்டார். பெண்களின் மாதவிலக்கு எப்படி தீட்டாக மாறியது என்ற திசையில் விவாதத்தை திருப்பிக் கொண்டார் லீனா. அவர் படைப்புகளிலிருந்து எந்த கேள்வியும் எழ அது அனுமதிக்கவில்லை அல்லது அதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட லீனா இழந்திருந்தார். அவரின் வலிமை, அவரது வலிகளை எதிர்கொண்ட வழி மட்டுமே. இதுவே பிற அமர்வுகளில் இல்லாத ஒரு காரசாரத் தன்மையை இவ்வமர்விற்கு அளித்தது எனலாம்.
ஆனால் தீட்டு பற்றிய அவருடைய புரிதல்கள் ஒதுக்கித்தள்ளிவிட முடியாதவை. விவாசயத்திற்கு முந்தைய வேட்டைச் சமூகங்களிடம், மழையால் தன்னுள்ளிருந்தவற்றை விளைச்சலாக வெளிக்கொணர்ந்த நிலத்தின் மேலிருந்த ஓர் அச்ச உணர்வுதான் பெண்களின் மாதவிடாயை ஒரு விலக்கத்தோடு பார்க்க வைத்தது என்றால், விவசாயச் சமூகங்களிடம் அவ்வச்சம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதையே ‘Mensural blood has Medicinal values’ என்ற லீனாவின் வார்த்தைகள் உறுதிபடுத்தின என புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சங்க இலக்கியங்களிலிருந்து நம் பண்பாட்டைத் தொகுத்து மறுவரையறை செய்து புரிந்து கொள்ளும் ராஜ்கௌதமனும், சங்க இலக்கியத்தில் விளைச்சலற்ற தரிசு நிலங்களை மேம்படுத்த பெண்களின் மாதவிடாய் காலத்து குருதி அந்நிலங்களில் ஊற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்றார். ஆக இதைத் தீட்டாக மாற்றிக்கொண்டதில் யாருக்கு லாபம் என்று அங்கிருந்த ஆண்களை நோக்கி லீனா கண் சிமிட்டுவது போலிருந்தது.
‘அடேய் ஆண் துரோகிகளே…’ என்று சூளுரைக்கும் பெண்ணியவாதிகளைவிட, ஆண்களை உரையாட அழைக்கும், அவர்களுடைய சமூக உளவியல் கட்டுமானங்களை அசைத்துப்பார்க்கும் பெண்ணியவாதிகளால்தான் மாற்றங்களை கொண்டுவர முடியுமென்ற ஜெமோவின் கேள்வியை, ‘ஆண்களை அறைந்துதான் உரையாடலுக்கு அழைக்க வேண்டும்…’ என்ற தொனியிலேயே லீனா எதிர்கொண்டார். கொஞ்சம் பயமும், அவர்மேல் பரிதாபமும் தொற்றிக்கொண்டது. அரங்கத்தின் அனைத்து மூலைகளிலும் இருந்து வந்த தொடர்கேள்விகளை லீனா எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், ஒதுக்கப்பட்ட ஒன்றரை மணி நேரத்தை தாண்டியிருந்ததால் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிகழ்வு முடிந்தும் அரங்கம் சலசலப்பிலேயே இருந்தது. ஜெமோவும் ஒருங்கிணைப்பாளர்களை நோக்கி சீறிக்கொண்டிருந்தார். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட இந்நிகழ்வு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இருக்கலாம்.
ராஜ்கௌதமன் – மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர்
[…] […]
LikeLike
[…] […]
LikeLike