ஒரு பிரமிடை மேல்கீழாக திருப்பி வைத்தது போலிருந்தது அந்த பிரமாண்டமான குளம். பெரிய ஆலயத்தின் பொற்றாமரைக் குளமாக இருக்கலாம். அத்தலைகீழ் பிரமிடின், இருபக்கங்கள் ஒன்று சேரும் ஒரு மூலையிலுள்ள நீண்ட படிக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாயகி. தன்னை எது இயக்கி இங்கு கொண்டு வந்திருக்கிறது என்று புரியாத குழப்பமுமாய்; அச்சமும் பாதுகாப்பும் ஒன்று சேர்ந்து தந்த பதற்றமும், மகிழ்ச்சியுமாய் தனக்கு பின்னால் சற்று மேலேயுள்ள படிக்கட்டுகளில் நின்று பேசிக் கொண்டிருக்கும் நாயகனின் கோபத்தில் கொப்பளித்து வரும் சொற்களை மௌனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்.
“ஒன்னவிட ரெண்டு வயசு கம்மி அந்த பொண்ணுக்கு…” என்று ஆரம்பித்து, அந்த 15 வயசுப் பெண் காவல் நிலையத்தில் சிதைக்கப்பட்டு இறந்துபோனதையும், அவளைப் பிணமாய் ஏந்தி வந்த அத்தந்தையின் இயலாமையைக் கண்ட பரிதவிப்பில் எழுந்த உச்சக்கட்ட கோபத்தில் அதற்குக் காரணமான காவலாய்வாளரின் வலது கையை வெட்டி வீசியதையும் அதே கோபத்துடன் “இனி..இனி..ஒரு பொண்ணத் தொடமுடியாது அவனால…” என்று சொல்லி பதற்றமடைந்திருந்த ஷோபனா முன் பதற்றத்துடன் அமர்கிறார் ரஜினி. கோபம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. கலைந்ததுபோல் வாரப்பட்டிருந்த ரஜினியின் கேசம் உண்மையிலே கலைந்து போயிருந்தது.
பட்டப்பகலில், தங்களுடைய அன்றாடங்களில் திளைத்திருந்த திரளான ஜனங்களின் முன் நடந்த இவ்வன்முறையை தான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து, செய்வதறியாமல் திகைத்த வண்ணம் பார்த்திருந்த ஷோபனா, இன்னமும் அதே திகைப்போடு அமர்ந்திருக்கிறார். தற்போது ரஜினியின் அருகாமையால் பதற்றமும் கூடச் சேர்ந்திருக்கிறது. “இதெல்லாம் உனக்குப் பிடிக்காது…நீ பாட்டுப் பாடுற பொண்ணு..டான்ஸ் ஆடுற பொண்ணு…” என்று பிதற்றிக் கொண்டிருந்த ரஜினியை நோக்கி “பிடிச்சிருக்கு….” என தன் கலங்கிய பெருவிழிகளாலும், உதடுகளாலும் ஒரு சேரக் கூறுகிறார். அதற்குப்பின் ராஜாவின் இசையாசியோடு அவர்களிருவரும் சங்கமிக்கும் அப்பாடலில் நாமும் சங்கமிக்கிறோம்.
தளபதியில் வரும் ரஜினி போன்ற கதாபாத்திரங்களால் ஒரு பெண்ணை கூட்டு வல்லுறவு புரியும் நிகழ்வுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுபோல் மாண்டோ போன்ற கவிஞர்களால் முடிவதில்லை. தன் கண்ணெதிரே நிகழ்ந்த அக்காட்சியைக் காண முடியாமல் தன் உயிரை மாண்டோ மாய்த்துக் கொண்டார் என கவிஞர் அ.வெண்ணிலா, சமீபத்தில் நிகழ்ந்த ஆத்மாநாம் நினைவு விருது விழாவில், அவ்விருதை கவிஞர் வெயிலுக்கு வழங்கும்போது குறிப்பிட்டார். ஆத்மாநாமும் அப்படி தன்னை மாய்த்துக் கொண்ட கவிஞரே. பெரும்பாலான கவிஞர்களின் இதுபோன்ற தற்கொலைகளுக்குப் பின்னால் இருப்பது அவர்களுடைய மென்மனத்தில் இருந்து விளையும் ஆற்றாமையும், கோபமும்தானா? அல்லது பிறரின் துயரை, பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வழியாகவே பார்க்கும் Empathy யா?. இது புறத்தில் நடந்ததை சதா அகத்தில் வைத்து விரித்தெடுக்கும் அந்த கவிஞர்களுக்குத் தான் வெளிச்சம்.
எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையேற்றிருந்த அதே ஆத்மாநாம் விருது நிகழ்வில், அங்கு தற்காலிகமாக கடை விரித்திருந்த ஒரு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிய ‘இரு தந்தையர்’ (சுந்தர் சருக்கை ஆங்கிலத்தில் எழுதியதை ஸ்ரீனிவாச ராமானுஜம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்) என்ற புத்தகத்தில் இருந்த ராமானுஜம் பற்றிய நாடகத்தில் கணித மேதை ஹார்டியின் தற்கொலை முயற்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. ஹார்டி தன்னுடைய கண்டுபிடிப்புகளிலேயே சிறந்ததாகக் கருதும் ராமானுஜத்தின் இளவயது மரணத்திற்கு தான் தொடர்ந்து அவருக்கு அளித்த அழுத்தம்தான் காரணமென்று சமூகம் பேசுகிறது என்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இராமனுஜம், ஹார்டி போன்ற மேதைகளை ஒரு கட்டத்திற்கு அப்பால் இயக்குவது, அவர்களுடைய துறை சார்ந்த ஆர்வத்தைவிட, அந்த ஆர்வத்தால் சமூகத்திற்கு விளையப்போகும் நற்பலன்கள் தான். தங்கள் மேதமையால் விரிவடைந்த அகத்தில், ஒட்டுமொத்தச் சமூகத்தையும் உள்ளடக்கிக் கொள்கிறார்கள். இந்நிலையில், அச்சமூகத்திலிருந்து எழும் சிறு சீண்டல்கள் கூட அவர்களுடைய அகத்தை வெகுவாக பாதிக்கின்றன. கிட்டத்தட்ட கவிஞர்களுக்கு எழுந்த அதே அகச்சிக்கல்தான் மேதைகளையும் உட்செரித்துக் கொள்கிறது. விரிவடைந்த இவர்களுடைய அகம், தன்னுடைய மீள் தன்மையைத் தாண்டி விரிவடைவதுதான் இச்சிக்கலுக்கு காரணமோ என்று தோன்றுகிறது.
அதே விழாவில் பேசிய ஜெயமோகன் மற்றும் பத்ம விருது பெற்ற சித்தன்சு அவர்களின் உரையின் வழியாக சராசரி மனங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் அன்னையின் அகத்தில் தன் குழந்தைகளைத் தாண்டி யாருமில்லை. கணவரை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்றார் சித்தன்சு, ஒரு மெல்லிய புன்முறுவலுடன். ஒரு விருந்து என்கிறபோது வருகை தரும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த அன்னையின் அகம் இடமளித்து விரிவடைகிறது. சூழ்நிலைகளுக்கேற்ப, தங்களுடைய அகத்தையும், புறத்தையும் மறுவரையரை செய்து கொள்ளும் எதார்த்த மனநிலை கவிஞர்களிடமும், மேதைகளிடமும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அதிலும் பெரும்பாலான சமகால மனிதர்களின் அகத்தில், அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களின் கஷ்டங்களை ஒரு பகடியின் வழியாகத்தான் அவர்களுக்கு உணர்த்த முடிகிறது என்ற ஜெயமோகனின் வார்த்தைகள் மிகவும் நிதர்சனமானவை. கவிஞர்களைப்போல, இவர்கள் ஒரு நிகழ்வை தங்களுக்குள் ஊறவைப்பதில்லை. இவர்கள் மேதைகளைப் பற்றி மட்டுமல்ல; யாரைப்பற்றியுமே எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. தங்களுடைய விரிவடைந்த அகத்தால், தன்னையே எரித்து இவ்வுலகின் இருளைப் போக்கும் கவிஞர்களுக்கும், மேதைமைகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள இந்த சராசரி மனிதர்களின் மனநிலையை ஏன் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை? என்பது புரியாத புதிர் தான்.
[…] பிரபஞ்ச ஒழுங்கு / ஒழுங்கின்மைபற்றிப் பேசுவதும் நீண்டு விட்டது. கலைஞர்களில் பெரும்பாலோர் இதுபோல பிரபஞ்ச ஒழுங்கின்மைக்குப் பலியாவதும் இயல்புதான். சித்தர்களும் சாதுக்களும் பிரபஞ்ச ஒழுங்கின் பக்கம் இருப்பதும் நியதிதான். சராசரி மனுஷர்கள் இப்படியும் அப்படியும் இருக்கிறார்கள் அல்லது ஒன்றில் நிலைகொள்கிறார்கள்.விக்ரமாதித்யன் அவர்களின் இந்த வரிகளைப் படித்ததும் ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை பற்றிய அறியாமை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று போல் தெரிந்தது. அந்த பிரபஞ்ச ஒழுங்கில் நின்று கொண்டிருக்கும் சித்தர்களுக்கும் சாதுக்களுக்கும் இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு பெரிதாக பொருட்படுத்தப் பட வேண்டியவர்கள் அல்ல தான். ஆனால், இந்த பிரபஞ்ச ஒழுங்கின்மையிலிருந்து, அந்த ஒழுங்கிற்குள் சென்று கொண்டிருக்கும் அல்லது முயலும் கவிஞர்களின் நிலைமை பதிக்கும், மும்மலங்களான பாசத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட பசுக்களை நினைவு படுத்துகிறது. வேதாந்தத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால் கர்மத்திற்கும், ஞானத்திற்கும் இடையிலிருப்பவர்கள். ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு, இங்கிருக்கும் ஒழுங்கின்மை ஒரு சுமையாக, வெளிவர முடியாமல் உள்ளிழுக்கும் புதைகுழியாக மாறிவிடுகிறது. இதில் சிக்கி மாண்டவர்களாக டால்ஸ்டாய் மற்றும் பாரதி போன்றவர்களை பிரபஞ்ச இயல்பு என்ற தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் விக்ரமாதித்யன். இவருடைய செறிவான கவிதைகளை விரித்தெடுத்துக் கொண்டே போகமுடியும். இக்கட்டுரை நம்மை ஆழங்களுக்கே இட்டுச் செல்கிறது. கவிஞர்களின் மனதை சாமானியர்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. இரு வருடங்களுக்கு முன்பு நடந்த கவிஞர் ஆத்மாநாம் விருது விழாவில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பத்ம விருது பெற்ற சித்தன்சு அவர்களின் உரை வழியாக கவிஞர்களின் நிலைமயாமைக்குக் காரணம் அவர்களால் சராசரிகளைப் போல எந்தவித குற்றவுணர்வுமின்றி ஒழுங்கிற்கும், ஒழுங்கின்மைக்கும் இடையில் ஊஞ்சலாட முடியவில்லை என்ற புரிதலுக்கு இட்டுச் சென்றது (https://muthusitharal.com/2019/11/28/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%…). […]
LikeLike