Munch Tantra

பல்லாயிரக் கணக்கான சதுர அடிகளை உள்ளடக்கி, வானுயர்ந்திருந்த அந்த பிரமாண்டமான வணிக வளாகத்தில் ஒரு 100 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு இடத்தில் இரு இளைஞர்கள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இருபதுகளின் நடுவில் இருக்கலாம் அவர்களுடைய வயது. அவர்கள் அணிந்திருந்த அடர் கருப்பு நிற ஜுன்ஸுக்குள்  நேர்த்தியாக செலுத்தப்பட்டிருந்த மென் சிவப்பு நிற டீ-சர்ட் கசங்கலேதுமின்றி ‘Munch Tantra’ என புன்னகைத்தது. இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் உணவகங்களுடைய விருந்தோம்பல் சமீப காலங்களில் மலைக்க வைக்கிறது. நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் இத்துறையில இருப்பதும் அதற்கு ஒரு முக்கிய காரணம். ‘Dignity of labour’ இத்துறையில் மிகவும் உயர்ந்திருக்கிறது என்பதை அவ்விளைஞர்களின் பரபரப்பு உணர்த்தியது.  தொலைவில் இருந்து பார்ப்பதற்கு அது ஒரு தோசைக் கடை என்று சொல்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் இருந்தது அக்கடை. ஆனால், அங்கிருந்து வந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களின் கையில் இருந்த தட்டில், பொன்னிறத்தில் தோசை மின்னிக் கொண்டிருந்தது படுகச்சிதமான உருளை வடிவத்தில். கூடவே தேங்காய்ச் சட்னியும், காரச் சட்னியும். நடந்துகொண்டே ஒரு வாடிக்கையாளர், பசியுடன் தோசையின் நடுப்பகுதியை கிள்ள மொறுமொறுவென நடுப்பகுதி நொறுங்கியது.

ஆர்வம் மிக, மிகக் குறுகிய அக்கடையை நெருங்கியதில் அடுப்பையோ, தோசைக்கல்லையோ எங்கும் காண முடியவில்லை. ஒரு மூலையில் இருந்த இயந்திரத்தில் இருந்து சுடச்சுட தோசைகளை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்திற்கு எனக்கொன்றும் புரியவில்லை. ” That is a dosa making machine” என்ற, என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்த, நண்பனை நம்பாமல் எந்திரனைப் போல மீண்டும் கடையை நோட்டமிட்டேன். இன்னொரு மூலையில் கல்லாப் பெட்டி அமைந்திருந்த மேஜையில் அனைத்து UPIகளின் QR codeகளை ஏந்திய நிறைய பலகைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பணம் செலுத்துவதில் நடந்த QR புரட்சிக்கு பழகி விட்ட அளவிற்கு இந்த தோசை எந்திரம் எனக்கு இன்னமும் பழகவில்லை. அதே மிரட்சியுடன் நோட்டத்தை தொடர்ந்ததில் மீதியிருந்த இரு மூலைகளில்  ஒன்றில் சின்னதாக ஒரு wash basin ( அது அவ்விளைஞர்களின் உபயோகிப்பதற்காக மட்டும் என்றான் நண்பன்) மற்றொன்றில் delivery counter. ஒரு சமையலறையற்ற சமையல் கூடமாய் காட்சியளித்த இந்த Munch Tantra என்ற சங்கிலித் தொடர் உணவகத்திற்குப் பின்னால் உள்ள Funngised என்ற நிறுவனத்தின் ஆற்றலையும், உழைப்பையும், உத்திகளையும் அதன் நிறுவனரான என் நண்பன் பெருமையுடன் விவரிக்க விவரிக்க நான் பொறாமையும் ஆச்சர்யமுமாய் அவனை நோக்கிக் கொண்டிருந்தேன்.

Funngised

இதற்கு அர்த்தம் தேடியதில் கூகுள் கைவிரித்து விட்டது. வடிவமைப்பை தங்களின் வேடிக்கையான வாடிக்கையாக்கிக் கொண்டதுதான் இந்நிறுவனம் என்றான். Design என்ற வார்த்தையைத் திருப்பிப்போட்டு Funனோடு இணைத்திருக்கிறார்கள்,  ‘மாத்தி யோசி’ வகையறாக்களைச் சேர்ந்த இந்த Startup நிறுவனம். பெரும்பாலும், லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு ஆரம்பிக்கப்படும் எந்த நிறுவனமும், காலப்போக்கில் தேங்கி இல்லாமலாகி விடவே வாய்ப்புகள் அதிகம். லாபத்தை தன்னுடைய செயல்பாடுகளின் விளைவுகளின் ஒன்றாக மட்டுமே கருதும் புத்திசாலி நிறுவனங்களே தங்களை தேங்காமல் காத்துக் கொள்கின்றன.

உணவுத் துறையில் இடைவிடாது நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தது, இவர்கள் இதுவரை உபயோகித்திராத படைப்புத் திறனுக்கு நிறைய தீனி போட்டுள்ளது. சிறிய உணவகங்களில் எப்போதுமிருக்கும் சுகாதாரக் குறைபாடு,  வாடிக்கையாளர்களின் திருப்தியின்மை, சமையலறை நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளால் தொடர்ந்து வீணாகும் உணவு மற்றும் அதன் உட்பொருட்கள் என குறைகள் மட்டுமே இந்த ‘மாத்தி யோசி’ வகையறாக்களின் கண்ணில் பட்டுள்ளது. இக்குறைகளை முடிந்தவரை சரி செய்ய இவர்கள் வழக்கம் போல் எல்லா Start up நிறுவனங்களும் கையிலெடுக்கும் Robotic Process Automation (RPA), Artificial Intelligence (AI), Internet Of Things (IOT) என வாடிக்கையான விஷயங்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை வைத்துக் கொண்டு இவர்கள் வடிவமைத்திருக்கும் Munch Tantra  என்ற சங்கிலித் தொடர் உணவகம் வித்தியாசமாக உள்ளது. உணவுத்துறையின் நுட்பங்களை புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத ஒருவரால் ஒரு சிறு உணவகத்தை 10லிருந்து 12 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து விட முடியும் என்பது என்னளவில் ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே தோன்றுகிறது. அந்த வணிக வளாகத்தில் உள்ள Munch Tantra உணவகத்தில் பரபரத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களும் நான் நினைத்ததுபோல் அதன் பணியாளர்கள் அல்ல; உரிமையாளர்கள் என்பது மேலும் ஆச்சரியமூட்டியது. இதை சாத்தியப்படுத்திய அவர்களுடைய உத்திகளை நன்கு புரிந்து கொண்டு, இவர்களுடைய பயணத்தைப் பற்றி தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.

https://fungised.in/

https://munchtantra.in/

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s