
ஹல்லேலூயா…லாலலாலா…
மாஷா அல்லா…லாலலாலா….
ஹரே கிருஷ்ணா….ஹரே ராமா….
என ஆரம்பித்து திருப்பதி பாலாஜியில் முடித்தவுடன், தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து இறங்கி மேடையில் நின்றவாறே சுற்றியிருக்கும் பார்வையாளர்களின் கரகோசத்திற்கு ஏற்ப தன் இரு கைகளின் கட்டை விரலையும் உயர்த்திக் கொண்டேயிருந்தார் அலெக்ஸ். முகத்தில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், நான் திக்குமுக்காடிப் போய்விடவில்லை என்பதை மறைக்கும் எளிய புன்னகை. Amazon Primeக்காக அலெக்ஸ் தனியொருவனாக நடத்திய அந்த Stand up comedy நிகழ்ச்சி எனக்கு மிகவும் அசாத்தியமான ஒன்றாக தெரிந்தது.
அந்த இரண்டு மணி நேரத்தில், தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளை, தன்னுடைய படைப்பூக்கத்தில் உதித்த புனைவுலகத்திற்கு இழுத்து வந்து ‘வச்சு செய்துவிட்டார்….’ என்றே சொல்லவேண்டும். இளையராஜா, AR, வழியாக கமல், ரஜினியையும்; MSV, சீர்காழி வழியாக சிவாஜியையும் தன்னுடைய இசையறிவு, குரல்வளம் மற்றும் அபரிதமான நகைச்சுவையுணர்வு கொண்ட உடல்மொழி வழியாக அவர்களுடைய படைப்புத் திறனுக்குள் உட்புகுந்து தன்னையும் ஒரு தனித்துவமான படைப்பாளியாக நம்முன் நிறுவிக்கொண்டிருக்கிறார் இந்த 44 வயதான முன்னால் Software engineer.
கடந்த 20 வருடங்களாக தமிழகத்தின் அனைத்து திறமையாளர்களையும் இந்த மென்பொருள் துறை முளையிலேயே கிள்ளி சுவீகாரமெடுத்துக் கொண்டதுபோல் தோன்றினாலும், அலெக்ஸ் போன்றவர்களுக்கு ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் திடீரென்று குதித்து இறங்கி தங்களுடைய கனவை சாத்தியப்படுத்துவதற்குத் தேவையான பக்குவத்தையும், மிக முக்கியமாக பொருளாதார வசதியையும் கொடுத்தது இத்துறைதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இசையின் வழியாக ஒரு முழுநீள மேடை நகைச்சுவையை சாத்தியப்படுத்துவதை, வெறுமே நகைச்சுவையென கடக்க முடியவில்லை. அதிலும் சீரான நீரோடை போல சென்று கொண்டிருக்கும் நிகழ்வு, திடீரென குறுக்கிடும் தடைகள் மேல் எம்பிக் குதித்து செல்வது போல, தன்னுடைய ஒட்டு மொத்த நிகழ்வையும் வடிவமைத்துக் கொண்டிருக்கிறார் அலெக்ஸ். தன்னுடைய அனைத்து திறமைகளுக்கும் தானே தீனி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமே. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா மற்றும் AR இசைக்குழுக்களில் கோரஸ் பாடுபவர்களின் நிலையையும் மற்றும் MSVன் நான்கு தாளங்கள் வழியாக அவருடைய பாடல்களை காதலில் இருந்து மறுபிறவி வரை சித்தரித்ததும் அலெக்ஸின் கலை ஆளுமைக்கு ஒரு சான்று.
It is wonderful to watch ‘Alex in wonderland’!!!