நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுமே சரியாக, அதாவது நமக்கு சாதகமாகவே, இருக்கும் என்ற அசட்டு நம்பிக்கையிலேயே வாழ்ந்து மடிந்துவிடத் துடிக்கும் நடுத்தரவர்க்க மனநிலையை காட்சிப்படுத்துவதில் ராதாமோகனுக்கு கிடைத்த மீண்டுமொரு வெற்றி. இம்முறை, அருகிக் கொண்டுவரும் வேலைக்கு செல்ல முடியாத மனைவிகளின் பெருமூச்சுக் காற்றை, “Hello…” என்ற வசீகர மொழியாக்கியிருக்கிறார்.
தினமும் பறவைபோல பறந்து துடித்து வாழவிரும்பும் நடுத்தரவர்க்கத்திற்கு ஒவ்வாத மனநிலையைக் கொண்ட ஜோதிகாவை, +2வைக் கூடத் தாண்டாத அவருடைய கல்வியின்மையை காரணம் காட்டி முடக்கிவைக்கிறது அவருடைய நடுத்தரவர்க்க குடும்பம். அதிலிருந்து, தன் கனவுகளைச் சிறகாய் வளர்த்துப் பறந்து விஜி வந்தடையும் இடம் ஒரு பண்பலை வானொலி நிலையத்தின் RJவாக. அதுவும் இரவில் கிரங்கடிக்கும் வகையில் வாசகர்களின் அந்தரங்க பிரச்சினைகளைப் பற்றி பேசவேண்டிய ‘மதுவுடன் ஒரு இரவு’ எனும் நிகழ்ச்சியின் RJ மதுவாக.
கலையாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டினை ஒரு குழந்தை நுழைந்து கலைத்துப் போடுவதை போல தன் ருசியான இரவுணவாலும், கிரங்கடிக்கும் குரலாலும், வாசகர்களின் வில்லங்கமான கேள்விகளுக்கு ஒரு தேர்ந்த உளவியலாளர் அளிக்கும் தீர்வுகளைப் போன்ற முதிர்ச்சி பதில்களாலும், அந்நிறுவனத்தை தலைகீழாக்கி விடுகிறார் விஜி.
தான் ஓட்டும் இரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களால் உறக்கமின்மையில் தவிக்கும் இரயில் ஓட்டுநரின் கேள்வியாகட்டும்; தான் சந்திக்கும் பெண்களின் கண்களை உற்று நோக்க முடியாமல் அவர்களின் மார்பகங்களையே அளவெடுக்கும், பெண்களுக்கான உள்ளாடை விற்பனைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் கேள்வியாகட்டும்; RJ மதுவாக விஜி தன்னுடைய மாறாத அதே கிரங்கடிக்கும் குரலில் அளிக்கும் பதில்கள் புத்துணர்ச்சி மருந்து. தங்களுடைய சோகங்களை, பிரச்சினைகளை, குறிப்பாக தங்களுடைய தனிமையையும் பகிர்ந்து கொள்ளும் வாசகர்களுக்கான நிகழ்ச்சியாகிப்போகிறது விஜியின் ‘மதுவுடன் ஒரு இரவு’.
வழக்கம்போல் நடுத்தர குடும்பங்களுக்கே உரிய பாசச்சேறு விஜியை மீண்டும் உள்ளிழுத்து முடங்க வைக்க முயல்கிறது. விஜி தன் வேலையை விட்டுவிட முடிவு செய்தவுடன், “இன்னும் கொஞ்ச நேரம் இக்குழந்தை என் நிறுவனத்தை கலைத்துப் போடக்கூடாதா”என ஏங்குகிறார் அந்நிறுவனத்தின் தலைவி. விஜி போன்ற பெண்களின் ஆதர்சம் இவர். ‘மதுவுடன் ஒர் இரவு’ நான் நடத்தியிருந்தால், “நிறைய இரவு மிருகங்களுக்கு தீனி போட்டிருப்பேன். ஆனா, நீங்க அந்த மிருகங்களுக்குள் உறைந்திருக்கும் குழந்தையை வெளிய கொண்டு வந்துருக்கீங்க” என்று நெகிழ்கிறார் அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். இப்படி படம் முழுதும் மனதில் பதியும் வசனங்கள், இப்படத்திற்கு மிகப்பெரிய உறுதுணை.
“என் வீட்டில் வாஷிங் மெஷின் கூடதான் இல்ல. அதுக்காக அந்த இடத்துல உங்க வாஷிங் மெசின கொண்டு வந்து பார்க் பண்ணுவீங்களா என்ன..” என தன் கார் பார்க்கிங்கை உபயோகித்தவர்களிடம் சிடுசிடுக்கும் எம.எஸ். பாஸ்கர்; “நான் தனியா இருக்கேன். அவன் தனிமையில் இருக்கான்” என ரொமான்ஸ் காட்டும் மனோபாலா; ஒரு துடைப்பக்கட்டையை Home Delivery செய்ய தன் மூட்டுவலியை பொருட்படுத்தாமல் இல்லாத நான்காவது மாடிவரை ஏறியிரங்கும் வழியல் மன்னன் மயில்சாமி என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் அருமையாக ஜோதிகா என்னும் மையத்துடன் இணைக்கப்பட்டிருப்பது அருமையான திரைக்கதை உத்தி.
சேவைப் பொருளாதாரத்தின் விளைவுகள் இப்படம் முழுதும் நுண்பகடி செய்யப்பட்டாலும், அவை தந்திருக்கும் வாய்ப்புகளையும் சரிசமமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இக்கதையை பெண்ணுரிமை அல்லது பெண்ணியம் என்ற புரட்சிக் கருத்தாங்கங்களுடன் கூடுமானவரை ஒன்றவிடாமல் தடுத்து பிரசார நெடியைத் தவிர்த்திருப்பதால், ஜோதிகாவிடம் சிறைபட்டிருந்த அந்த “Hello…” என்ற வார்த்தை சுதந்திரச் சிறகுகளோடு அவருடைய உதடுகளிலிருந்து உருகி வெளியேறி காற்றில் மிதந்து நம்மையும் கிரங்கடிக்கத்தான் செய்கிறது.