நரன்- சாம்ராஜ் – ஒரு ‘அற்புதக்’ கூட்டணி
சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார்.
‘அற்புதம்’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் தோழர்களால் அவர்களைப்பற்றிய எந்த பெருமையையும் பேசமுடியாது என்ற பகடியில் ஆரம்பித்த சிரிப்பலையை “அவர் வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்கு. அதனால அவர் ஒரு பூர்ஸ்வா (முதலாளி வர்க்கம்). அவர் வீட்டுக்கு போகக்கூடாது” என்ற தொடர் பகடிகள் மூலம் அமர்வு முழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்க வைத்தார் சாம். மேலோட்டமாக இது கம்யூனிச தோழர்களைப் பற்றிய பகடியாக தோன்றினாலும், பொன்னுலகக் கனவில் எப்போதுமே இருந்த தோழர்கள், இந்த உலகை திருத்தவந்த அறிவுஜீவிகளாக தங்களை எண்ணிக்கொண்ட தோழர்கள் மேற்கத்திய மார்க்ஸியத்திலிருந்து வெளியேறி தங்களுக்கான ஒன்றை உருவாக்கிக் கொள்ளும் திறனற்றவர்களாக ரஷ்யப் பெருமை பேசுபவர்களாக சுருங்கிப் போனதைப் பற்றிய சாம்ராஜின் ஆதங்கமாகவே இருந்தது.
சாம்ராஜ் அருவி மாதிரி கொட்டுபவராக இருந்தால், நரன் வார்த்தைகளை அளந்து பேசுபவராகவே இருந்தார். தான் எழுதவந்த விதம், தந்தையில்லாத தனக்கு தாயால் கற்பிக்கப்பட்ட ஒழுங்கு, தன் வாழ்வில் நேர்ந்த சில துயரச் சம்பவங்களிலிருந்து மீழ்வதற்காக எழுத ஆரம்பித்த முயற்சி என உணர்ச்சிப் பூர்வமாகவே இருந்தது. தோழர்கள் பாஸையில் சொல்லவேண்டுமானால் ‘இது ஒரு அற்புதமான அமர்வு’.
மணி 5த் தொட்டிருந்தது. என்னதான் வசதியான அரங்கமாக இருந்தாலும், அப்போதைக்கு வெளிக்காற்று வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பிணைத்திருந்த இவ்விரு அமர்வுகளுக்குப் பிறகு ஒரு மணிநேர இடைவெளி கிடைத்தது. அரங்கின் நுழைவாயிலில் சூடான சுண்டலும் தேநீரும் பருகத் தரப்பட்டது. அருகே தமிழினி, பாரதி புத்தகாலயம் மற்றும் நற்றிணை பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். கூடவே ஜெமோவால் ஊக்கம் பெற்ற நூற்பு மற்றும் குக்கூ தன்னற அமைப்பினரின் உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வெகு நாட்களாகவே அவர்களுடைய சைனீஸ் காலர் வெள்ளை நிறச்சட்டையையும், கருப்பட்டியில் செய்த கள்ளமிட்டாயையும் வாங்கும் எண்ணமிருந்தது. இன்று அதை ஈடேற்றிக் கொள்ளமுடிந்தது.
ராஜ்கௌதமனின் விடுபட்ட புத்தகங்களோடு, ஸ்டாலினின் அனைத்துப் புத்தகங்களும், எம.ஏ. சுசீலா அவர்கள் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் அசடனும் சேர்ந்து கொண்டபோது தோளும் கையும் சற்று வலிக்க ஆரம்பித்தது. அறையில் சென்று அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு, அரங்கு அமைந்திருந்த திவான் பகதூர் சாலையில் கால்தளர ஒரு மாலை நடையில் ஒவ்வொரு பத்து மீட்டருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளை வாசகர்கள் சுற்றியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாஞ்சில் நாடன், லஷ்மி மணிவண்ணன், தேவதேவன், ஸ்டாலின், வேணுகோபால், அடுத்த அமர்வைச் சிறப்பிக்க போகும் தேவிபாரதி என பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது. இது ஒரு ஜாக்பாட் நிகழ்வுதான். ஜெமோ மனக்கண்ணில் வந்து வந்து போனார்.
இயக்கம், சிந்தனை, கட்சித் தொண்டர்கள் மற்றும் இவைகளை இணைக்கும் தலைமை என பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினைச் சூழ்ந்திருந்த வாசகர்களுடன் ஐக்கியமானேன். இயக்கங்களிலிருந்து தான் சிந்தனைகள் தோன்றமுடியும். கழகங்கள் அல்லது கட்சிகள் மூலம் அச்சிந்தனைகளை தொண்டர்கள் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்பவரே சிறந்த அரசியல் தலைவராக முடியுமென்ற ஸ்டாலினின் வாதம் இவற்றைப் பற்றிய என்னுடைய புரிதல்களுக்கு ( https://muthusitharal.com/2017/11/20/கமலும்-தலைவனும்-தமிழகமும/ ) வலு சேர்ப்பதாக இருந்தது.
தேவிபாரதி – நேர்மை
மணி ஏழு இருக்கும் என்று நினைக்கிறேன் தேவிபாரதியின் அமர்வு தொடங்கியபோது. மேலை நாடுகளில் நடந்த Writers’ Residency நிகழ்வுகளில் கலந்து கொண்டதைப் பற்றிய கேள்விக்கு, அதனால் என் எழுத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்று விசிறியடித்துவிட்டார். அவ்வளவாக ஆங்கிலப்புலமை தனக்கிருந்ததில்லை என்பதை தஸ்தயேவ்ஸ்கியின் Idiot நாவலைப் படித்துவிட்டு, அதை மற்றவர்களுக்கு கதையாக சித்தரித்ததையும்; அதைக் கேட்டவர்கள் மெய்மறந்து, “கதை ரொம்ப அருமையா இருக்கு, ஆனால் Idiot கதை வேறு” என்று பகடி செய்ததையும் நேர்மையாக வெளிப்படுத்தினார்.
தன்னுடைய கதைகளில் ஏதாவது ஒரு இடத்தில் உண்மை ஒரு துளியாவது ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதை மகராஜ் கதையின் கரு உருவான விதத்தைப் பற்றி விளக்கியது, இந்திரா பார்த்தசாரதியின் கதையென்பதே உண்மையை வைத்துப் புனைவது தானே என்ற சொல்லாடலை நினைவு படுத்தியது. மகராஜ் கதை, தனக்கு கீழே வேலைபார்க்கும் ஊழியர் ஒரு அரண்மனையில் வசிக்கிறார் என்ற ஒரு உண்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு புனையப்பட்டது என்பது அவருடைய புனைவுத்திறமைக்கு ஒரு சான்று.
தன்னுடைய ஆதர்ச எழுத்தாளராக டால்ஸ்டாயை கொண்டிருக்கும் தேவிபாரதி, வாழ்க்கையின் நிலையாமையைக் கடக்க உதவும் ஒரு ஆசானாகவும் அவரைப் பார்க்கிறார். தன்னை இயக்கும் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பெரும் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் தேவிபாரதி, அதை மற்ற எவரையும் தொடக்கூட அனுமதிப்பதில்லை என்ற ஆச்சரியத்தோடு அமர்வை முடித்தார்.
அவ்வப்போது அவருடைய வார்த்தைகள் உடைபட்டதை, அவரது நேர்மையின் குறியீடாக எடுத்துக் கொண்டேன். இரவு உணவுக்குப் பிறகு இலக்கிய வினாடி வினாவில் கலந்து கொள்ளும் விருப்பமுள்ளவர்கள் இதே அரங்கிற்கு வருகை தரலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இலக்கியப் பசி தணிந்து வயிற்றுப்பசி மேலோங்கியிருந்தது. எப்படித்தான் எரிபொருள் தீர்ந்துபோகிறதோ என்ற நினைப்போடு வயிற்றை நிரப்பிக் கொள்ள நிகழ்வுகள் நடக்கும் முதல்தளத்திலிருந்து உணவு பரிமாறப்படும் கிடைத்தளத்திற்கு விரைந்தேன்.
உணவுத்தட்டிலிருந்து, உணவு மேஜைகளின் விரிப்பு வரை மிக சிரத்தையுடன் ப்ளாஷ்டிக் பொருட்களை தவிர்த்திருந்தார்கள். வாழையிலை போர்த்தியிருந்த அந்தத் தட்டில் ஒரு வெங்காய ஊத்தப்பம், இட்லி, சில சேமியா வகையறாக்கள், அளவான நெய்யில் தளதளத்த கேசரி என வைத்திருந்த அனைத்தையும் மிச்சமில்லாமல் சாப்பிட்டிருந்தபோது, தட்டைப் போர்த்தியிருந்த இலை உணவின் சுவடேதுமற்று முன்பிருந்தது போலவே இருந்தது. தோழர்களின் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ‘அற்புதமான’ இரவுணவு. பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழினி வசந்தகுமாரிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, எதிரில் அமர்ந்திருந்த தேவிபாரதியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அறையில் சென்று சற்று சாய்ந்து அன்றைய நிகழ்வுகளை அங்கிருந்த சென்னை வட்ட நண்பர்களான மாரிராஜ், யோகேஸ்வரன் மற்றும் முரளியுடன் அசைபோட ஆரம்பித்தேன். பெரும் பணபலமும் ஆள்பலமும் நிறைந்த அமைப்புகளால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய இதுபோன்ற நிகழ்வை பிசிரில்லாமல் ஒருங்கிணைக்கும் இலக்கிய தன்னார்வலர்களை மட்டுமே கொண்டுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் நிபுணத்துவம் பொறாமைக்குரியது. இவர்களிடம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது என்றெண்ணியவாறே வினாடி வினா நிகழ்ச்சிக்காக மீ்ண்டும் அரங்கு நோக்கிச் சென்றோம்.
குவிஸ் நேரம் – இலக்கியப் பரிசோதனை
எதிர்பாராமல் கிடைக்கும் இடைவெளிகளை நிரப்பிக் கொள்வதற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் நிகழ்வுகளில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று ஒரு முக்கிய அங்கமாக மாறிப்போயுள்ளது. சினிமா, இசை மற்றும் இலக்கியம் என அனைத்தையும் தொடர்புபடுத்தி மிக சுவாரஸ்யமான கேள்விகளை உருவாக்கியிருந்தார் ‘குவிஸ்’ செந்தில். கடினமானவையும் கூட. தமிழ் இலக்கியமட்டுமில்லாமல் இந்திய மற்றும் உலக இலக்கியத்திலிருந்தும் கேள்விகளிருந்தன.
கிட்டத்தட்ட நூறுபேர் கலந்து கொண்டனர். பதிலளிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்காள எழுத்தாளரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், இவ்விழாவின் முதன்மை சிறப்பு விருந்தினருமான அனிதா அக்னிஹோத்ரி மற்றும் ஜெமோ கையெழுத்திட்ட ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு சுற்றுகள். ஒவ்வொரு சுற்றிற்கும் 8 கேள்விகள். மேடயிலிருக்கும் புத்தகங்கள் பத்தாதென்று ஜெமோ சில புத்தகங்களை அங்கிருந்த பதிப்பகங்களிலிருந்து அள்ளி வந்தார்.
நாவலின் படிமம், கடைசிவரி, சினிமா மற்றும் இசை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி கேட்கப்பட்ட கேள்விகள் முடியும்முன்பே நிறைய கைகள் உயர்ந்தன. கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் எனக்கு ‘out of syllabus’ போல்தோன்றி சற்று நேரத்திலேயை ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி விட்டது. தமிழன் தாழ்வுணர்ச்சி கொள்வதற்கு காரணமா வேண்டும். இருந்தாலும் ‘காம்யூவின் பிளேக் நோயிலிருந்து தன் படிமத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்று ஜெமோவால் குறிப்பிடப்பட்ட நாவல் எது?’ என்ற கேள்விக்கு U. ஆனந்தமூர்ததியின் ‘சம்ஸ்காரா’ என்று கூறி ஜெமோ கையெழுத்திட்ட வேணுகோபால் அவர்களின் ‘ஆட்டம்’ நாவலை ஜெமோவிடமிருந்து பரிசாக பெற்றுக் கொண்டது ஆறுதலாக இருந்தது. “அது ஆனந்தமூரத்தி அல்ல அனந்தமூர்த்தி” என்று புன்னகையோடு என் பிழையைச் சரிசெய்தார் ஜெமோ.
அங்கிருந்த வாசகர்களின் இலக்கிய IQ அனிதா அக்னிஹோத்ரி அவர்களை மிகவும் ஆச்சரியத்திலாழ்த்தியது. அதை பெருமிதத்தோடு ரசித்துக் கொண்டிருந்த ஜெமோவின் புருவங்களையும் உயர்த்த வைத்தன சில கேள்விகளுக்கான பதில்கள். எழுத்தாளர் தன் படைப்பை வாசிக்கக்கோரும் உழைப்பை தயங்காமல் தரக்கூடிய ஆழ்ந்த வாசிப்பு கொண்ட உன்னதமான வாசகர் கூட்டமிது. இவர்களோடு நானிருந்தேன் என்ற பெருமையை அசைபோட்டுக்கொண்டே, அறைதிரும்பி உடைமாற்றி அடுத்த நாள் லீனா மணிமேகலை ஆண்கள் மேல் சொடுக்கப்போகும் சாட்டைபற்றியோ, ராஜ் கௌதமனின் பகடிப்பேச்சு பற்றியோ எந்தவித பிரக்ஞையுமற்று அசதியில் தூங்கிப்போயிருந்தேன். ஆனால் ஜெமோவுடனான அடுத்தநாள் காலை நடையை மட்டும் தவறவிட்டு விடக்கூடாது என்ற பிரக்ஞை மட்டும் தூக்கத்திலுமிருந்தது.
ஜெமோவுடன் ஒரு காலை நடை
[…] […]
LikeLike
[…] […]
LikeLike