முன்பகுதி
ராஜ்கௌதமன் – மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர்

லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர் ராஜ்கௌதமனை அறிமுகப்படுத்தும்போதே அங்கிருந்தோருக்கு புரிந்துவிட்டது. ஒரு இருமுறையாவது அந்த ஓரிரு நிமிட தன்னைப்பற்றிய அறிமுக உரையில் குறுக்கிட்டிருப்பார் ராஜ்கௌதமன் . ஒரு சட்டகத்திற்குள் சிக்கும் மனிதரல்ல இவர். அவருடைய உடல்மொழியிலிருந்த கட்டற்ற துள்ளலும் அல்லது இறுக்கமின்மையும், பேச்சுமொழியிலிருந்த எள்ளலும், வாசகர்களுக்கு முன்பிருந்த அந்த மேடை அவர்கள் மத்தியில் நகர்ந்து வந்ததைப்போல ஒரு உளமயக்கை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கேள்விக்கும் எங்கெங்கோ நீண்டு சென்ற அவரின் பதில்களை மடைமாற்றி ஒழுங்குபடுத்துவத்தில் திணறித்தான் போனார் ஜெமோ.
உங்களுடைய ஆய்வுகள் சில முன்முடிவுகளை மனதில் கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றன என்ற பரவலான குற்றச்சாட்டுக்குப் பதிலாக, “ஆமா..அப்படித்தான் சொல்லிட்டுத் திரியுறானோவுங்க…அவுங்க இஷ்டமது. ஏன்..நீங்க கூட தான் அப்படிச் சொன்னீங்கன்னு நினைக்கிறேன்..” என்று பக்கத்திலிருந்த ஜெமோவைப் பார்க்க, “இல்ல..அந்த குற்றச்சாட்டுக்கு நான் பதில்தான் எழுதினேன்…” என்று ஜெமோ தெளிவுபடுத்தினார். “இருந்தாலும், உங்ககிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும். அப்படியே படிப்படியா மேல கொண்டு போய்… திடீர்னு கீழபோட்ருவீங்க…” என்று ஜெமோவைக் கலாய்த்தார். இதே வெளிப்படைத்தன்மையை அவரது ஆராய்ச்சி கட்டுரைகளிலும் பார்க்கலாம். கூறுமுறை மட்டுமே வேறு.
சமீபகாலங்களில் தங்களிடமிருந்து தலித்துகள் மேம்பாடு பற்றிய காத்திரமான படைப்புகளோ, ஆராய்ச்சி கட்டுரைகளோ வரவில்லையே என்ற கேள்விக்கு, எனக்கு அதற்கான தேவை ஏற்படவில்லை என்றார். தேவைப்பட்டால் எழுதுவேன் என்றவரிடம் விடாது “அப்ப…இப்போது அதற்கான தேவையில்லையா?” என்ற தொடர் கேள்விக்கு…சற்று காட்டமாக “அவனவனுக்கு பிரச்சினை இருந்தா மட்டும் வா…தீர்வைத் தேடலாம்…மத்தவனுக்குன்னு என்னிடம் வராதீங்க…” என்று உரத்த கூறி…”திடீர்னு சீரியஸ் ஆயிடுச்சுல…” என்று புன்னகைத்தார்.

கடந்த ஆறுமாதங்களாக தொடர்ந்து அவருடைய படைப்புகளை வாசித்ததில், அவரைப்பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்ததால் ராஜ் கௌதமனின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இளமையில் வறுமையைவிட தீண்டாமையே மிகக்கொடியது என்பதை மிகத் தெளிவாக அவரது படைப்பான ‘சிலுவைராஜ் சரித்திரம்’ வழியாக உணர்ந்து கொள்ள முடியும். வறுமையும், தீண்டாமையும் சேர்ந்திருந்த தன் பால்யத்தை நினைவுகூர விரும்பாத; குறிப்பாக தன் பால்யம் சார்ந்த நிலப்பரப்பை வெறுத்தொதுக்கும் மனநிலைதான் இன்றும் அவரிடம் மேலோங்கியுள்ளது. தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமையை கல்வி வழியாகவே இல்லாமலாக்கிக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் வழியாக இந்த தீண்டாமைக்கான அவசியம், நம் பண்பாடு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மறுவரையறை செய்து தொகுக்கப்பட்டது என பல விஷயங்களை தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழியாக தெளிவும் படுத்தியுள்ளார். தலித்தியம் என்றால் என்ன? அது யாருக்கானது? அதன் செயல்பாடுகளை எப்படி தொகுத்துக்கொள்வது என்ற அக்கட்டுரைகள் தற்போது திராவிடம்; இந்துத்துவம்; கம்யூனிசம்; தலித்தியம் என குழம்பிப்போயிருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெளிவையும் பெரும்திறப்பையும் அளிக்கக் கூடியவை.
மார்க்ஸிய தத்துவத்தைப் பொறுத்தவரை எதிர்காலம் எப்போதுமே பிரகாசமானது. அதிலும் அத்தத்துவத்திலிருந்து முளைத்த கம்யூனிசத்திற்கு பொன்னுலகம் எதிர்காலத்தில் மட்டுமே உள்ளது. மார்க்ஸியத்திற்குப் பின்வந்த பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையோ எதிர்காலத்தின் மேல் ஒருவகையான அவநம்பிக்கை கொண்டிருப்பது. ஆனால் இந்த இரண்டுவகைச் சிந்தனை கோட்பாடுகளையும் தன் ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ள ராஜ்கௌதமனிடம் உங்களுக்கு எதிர்காலத்தின் மேலிருப்பது நம்பிக்கையா இல்லை அவநம்பிக்கையா என்ற கேள்விக்கு காலையில் இருக்கும் நம்பிக்கை மாலையானதும் குறைந்து விடுகிறது என்று மலுப்பலாக பதிலளித்தார். “அப்ப காலைல மார்க்ஸியவாதி…மாலைல பின்நவீனத்துவவாதி…” என்று நக்கலடித்தார் ஜெமோ.

தனக்கு நேர்ந்த அனைத்து கீழ்மைகளையும் பரந்த வாசிப்பின் வழியாகவே கடந்திருக்கும் ராஜ்கௌதமன், விழாவின் சிறப்பு விருந்தினரான வங்கத்தைச் சேர்ந்த அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கேள்விக்கான பதிலில் அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்த மார்க்ஸியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவை நினைவு கூர்ந்தார். “எனக்கு மட்டும் மகன் பிறந்திருந்தால் அவர் பெயரைத்தான் வைத்திருப்பேன்..” என்று அவர் எழுதிய ‘லோகாயவாதம்’ எனும் புத்தகத்தை உச்சிமுகர்ந்து மெச்சினார். அவருடைய இன்னொரு புத்தகமான ‘இந்திய தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்’ மகாயான பௌத்தத்தின் தோற்றத்தையும் அது வேதத்திலிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை ஆதிசங்கரர் நிறுவிய விதத்தையும் சுட்டிக்காட்டியது நினைவுக்கு வந்து போனது. இப்புரிதலோடு ராஜ்கௌதமனின் அயோத்திதாச பண்டிதர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கும்போது பௌத்தமதத்தின் உருமாற்றங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம்மால் வரைந்து கொள்ளமுடியும்.

வாசகர்களிடமிருந்து எழுந்த கேள்விகளின் வழியாக இவ்வரங்கின் தனித்தன்மையை உணர்ந்து கொண்ட ராஜ்கௌதமன், மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவிலும் அதை பிரதிபலித்தார். “ நான் கண்ட மேடைகளில் ஒரு அறிவுஜீவி மட்டும்தான் இருப்பார். அவரைச் சார்ந்து சிலர் சேர்ந்திருப்பார்கள். ஆனால், இந்த விழா மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கு இணையான இலக்கிய அறிவுஜீவிகள்தான் கீழேயும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு இது வித்தியாசமான மேடை..” என்றது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
ராஜ்கௌதமனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேள்வியான “தலித் சமூகத்தைச் சேர்ந்த நீங்கள், உங்கள் சமூகத்தையொடுக்கிய சமூகங்களைச் சேர்ந்த புதுமைபித்தனையும், பாரதியையும் கொண்டாடுவது ஏன்?” என்ற கேள்வி எழும்பியதும் மிகவும் பரவசமானார். “என்னைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்டவர்களுக்காக தங்கள் சொந்த சாதியினரை எதிர்த்து நிற்பவர்களும் தலித்துகள்தான். அவர்களைப் போற்றுவதில், வழிகாட்டியாகக் கொள்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை” என்றார். “தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது இதுபோன்று தங்கள் சாதியினரின் குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்களா?” என்ற காட்டமான கேள்வியையும் எழுப்பினார். மாலை நடந்த விருது விழாவில் “காடு போன்றொரு நாவலை ஒரு தலித் மட்டுமே எழுதமுடியும். ஜெயமோகன் ஒரு தலித்்..” என்று கூறியது, ஜெமோவை அவர் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் புதுமைப்பித்தன் இடத்தில் வைத்தது போலிருந்தது.
அமர்வு முடிந்து அவரைச் சந்தித்தபோதும் புதுமைப்பித்தனைப்பற்றியே சிலாகித்துக் கொண்டிருந்தார். அவருடைய இரு படைப்புகளைப் பற்றிய என்னுடைய அவதானிப்பை அவரிடம் காண்பித்து அவருக்கும் சேர்த்து நான் புளங்காகிதம் அடைந்து கொண்டேன்.

விருது விழா
ராஜ்கௌதமன் அவர்களின் அமர்விற்குப்பிறகு, அனிதா அக்னிஹோத்ரியின் அமர்வு, மதியஉணவு, மற்றும் மலையாள இயக்குனரும் எழுத்தாளருமான மதுபாலின் அமர்வு என அனைத்து அமர்வுகளும் முடிந்தபோது மணி 3.30ஐத் தொட்டிருந்நது. இன்னும் இரண்டு மணி நேரமிருந்தது விழா தொடங்குவதற்கு. அமர்வுகளின் போதிருந்த ஆற்றல் திடீரென்று குறைந்து இல்லாமலானது போல் தெரிந்தது. சென்னையின் தி.நகர் தெருக்களின் அனைத்து கடைகளையும் உள்ளடக்கி, ஆனால் நெரிசலில்லாமலிருந்த ஆர்.எஸ்.புரம் வீதிகளைச் சுற்றி இழந்த ஆற்றலை மீட்டுக் கொள்ளமுடிந்தது. சுடசுடத் தயாராகிக் கொண்டிருந்த A1 நேந்திரம்பழ சிப்ஸை வீட்டிற்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியபோது விழா ஆரம்பிக்க இன்னமும் ஒரு மணிநேரமிருந்தது. அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறில் மற்றும் காளி பிரசாத்தின் உறக்கம் எனக்கும் தொற்றிக்கொள்ள, தூங்கியெழுந்திருந்தபோது விழா ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்களே இருந்தது. மதுபால் தன் அமர்வு முழுதும் மலையாளத்திலேயே பேசியது கனவில் வந்து தொந்தரவு செய்தது. கூடவே இரண்டு நாட்களும் தமிழ் தெரியாமல் அனைத்து அமர்வுகளிலும் கலந்துகொண்ட அனிதா அக்னிஹோத்ரி நினைவில் வந்து போனார்.


திட்டமிட்டபடி சரியாக 5.30க்கு ராஜ்கௌதமன் பற்றிய கே.பி.வினோத் இயக்கிய நேர்த்தியான ஆவணப்படத்தோடு துவங்கிய விழா சுனீல் கிருஷ்ணன், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, அனிதா அக்னிஹோத்ரி, மதுபால் மற்றும் ராஜ்கௌதமனின் கச்சிதமான உரைகளோடு முடிவுக்கு வந்தது. மேடையிலிருந்த அனைவருக்கும் மேகாலயாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆளுயரச் சால்வையும், ராஜ் கௌதமனுக்கு கூடவே ஆளுயர மாலையும் விருதும் வழங்கப்பட தள்ளாடியதைப்போல் பாவனை செய்து கொண்டு அதைப் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண்ட மேடையை ஒட்டுமொத்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைத் சேர்ந்வர்களும் நிரப்பி குழு புகைப்படம் எடுத்தபின் ஜெமோவிடம் விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பி பெட்டியை எடுத்துக்கொண்டு வழியில் தென்பட்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கத்தின் வாசலை அடைந்தபோது கோவை ஞானி அரங்கத்தின் வாயிலில் தனது வண்டிக்காக காத்திருந்தார் தன்னுடைய இருசக்கர நாற்காலியில். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில் நிறைந்திருந்த மனது ததும்பி வழிய ஆரம்பித்தது.

[…] […]
LikeLike
[…] விஷ்ணுபுரம் விழா -முத்துச்சிதறல் […]
LikeLike
[…] விஷ்ணுபுரம் விழா -முத்துச்சிதறல் […]
LikeLike