Bonito – சுதந்திர தினம்

ஆகஸ்ட் மாதம். இன்னமும் இரவில் குளிரூட்டியின் (AC) துணையின்றி உறங்க முடிவதில்லை. இரவை விட, மாலைக் காற்றில் வரும் அந்த வெப்பத்தின் வாடை மூச்சடைக்க வைப்பது. மாலையும் குளிரூட்டிதான் கடவுள். அடுத்த நாள் சீக்கிரம் எழ வேண்டும். குடியிருப்பில் நிகழும் 80வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக.

கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்து கொண்டிருக்கிறது, இக்குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்து.  பசுமைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு எழிலான குடியிருப்பு. கிட்டத்தட்ட 700 வீடுகள். இதனை நிர்வகிக்கும் அமைப்பை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும், தமிழகத் தேர்தலும் ஓரிரு வார இடைவெளியில் நடந்தது. EVM வருகைக்கு முந்தைய பாணியில் நடந்த தேர்தல். நிறைய குடியிருப்புவாசிகள், முதன் முறையாக இது போன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். அந்த பாரம்பரியத்தை இன்னமும் தக்கவைத்திருக்கும் பெருமை, இத்தேர்தலை மிக கவனமாக நடத்தித் தந்த Brigade நிறுவனத்தையே சாரும். கிட்டத்தட்ட ஒரு தேர்தல் ஆணையம் போன்றே செயல்பட்டார்கள். அதைவிட Bonito என்ற இக்குடியிருப்பின் பெருமை, 90 சதவீத வாக்களிப்பில் துலங்கியது. “In decades, we are seeing such a huge turnout of residents voting in the elections Brigade conducted…” என்று சிலாகித்தார் அந்த அதிகாரி.

Bonito ஒரு பொறுப்புமிக்க குடியிருப்பு என்ற நம்பிக்கையை இந்த ஒரு வருடத்தில் என்னால் உணர முடிந்தது. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட BXBOA (Brigade Xanadu Bonito Owners’ Association)ன் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு இதற்கு மிக முக்கிய காரணம். சில எதிர்ப்புக்களும் நேர்மறையாகவே முன்வைக்கப்பட்டன.

இவர்களின் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை மிக்க எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருப்பது இயல்பான ஒன்று என்றே தோன்றியது. மேலும் சுதந்திரநாள் இதுபோன்ற நிகழ்வுகளால் தான் சுதந்திரநாளாக இருக்கின்றது என்ற எண்ணம் உண்டு. சில நிகழ்வுகள் அது நிகழ்ந்த தருணங்களில் பெரும் பரவசத்தையும், உணர்வெழுச்சியும் உருவாக்கியிருக்கும். 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பரவசங்கள் நம்மை ஆட்கொள்வதில்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும், அது தொடர்ந்து நினைவு கூரப் படுவதாலேயே, அவை நம்முள் ஒரு சிறு பரவசத்தையும், நன்றி உணர்ச்சியையும் தக்க வைக்கிறது. கிட்டத்தட்ட கிறிஸ்து, கிறிஸ்துவாக்கப்பட்டது கிறிஸ்துவால் அல்ல. அவரது சீடர்களால் என்பது நினைவுக்கு வருகிறது.

காலை ஆறுமணிக்கெல்லாம் பொழுது முழுதும் புலர்ந்திருந்தது. அதிகாலையை தன்னுடைய தூரிகையால் காலையாக மாற்றும் இயற்கையின் ஓவியத்தை மணிரத்னம் செயற்கையாக தன்னுடைய படங்களில் வரைந்து காண்பிப்பார். ஒளிகளின் காதலர்களையே தன்னுடைய ஒளிப்பதிவாளராக தேர்வு செய்பவர். அதுவே, நம்மை ஒரு மோனநிலைக்கு கொண்டு செல்லும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்பவர்களால் இந்த ஓவியத்தை இயற்கையாகவே உணரமுடியும். அவர்களால் கூட அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் தூரிகையையோ, அதனை கையாளும் கைகளின் இலாவகத்தையோ உணரமுடிவதில்லை.

நிகழ்வு நடக்கும் Amphitheatre குடியிருப்பில் நடுநாயமாக வட்டவடிவில் வீற்றிருக்கும். அதனைச் சுற்றிலும் அடர்த்தியான பசுமை காவலிருக்கும். வீட்டின் பால்கனியில் நின்று இதனை தினமும் ஒரு சில நிமிடங்கள் அவதானிப்பது ஒரு தியானம்தான். அதுவும், ஏதாவது ஒரு நிகழ்வின் போது கணநேரத்தில் அது உருமாறிப் போவது நம்மை புன்னகைக்க வைக்கும். ஒலி அமைப்பு, தேசியக்கொடியின் கம்பம், அது வீற்றிருக்கும் மேடை, மூவர்ணத் தோரணங்கள் etc…etc…என Bonito சுதந்திர தின நிகழ்வுக்கு தயாராக ஆரம்பித்தது.

ஆனால், இரு வாரங்களுக்கு முன்பே நிகழ்வுக்கான தயாரிப்புக்கள் தொடங்கியிருந்தது. மிக நேர்த்தியாக BXBOAன் உறுப்பினர்களும் குடியிருப்புவாசிகளும் இந்த முன்தயாரிப்பை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தேமாதரப் பாடல்கள் பயிற்சி என நீண்டு கொண்டேயிருந்தது முன்தயாரிப்புக்கான பட்டியல். அனைத்துமே சுதந்திர தினம் பற்றியவையாகவே இருந்தது இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

முன் தயாரிப்பின்றி எந்நிகழ்வும் சாத்தியமில்லை. தேர்ந்த முன்தயாரிப்புக்களே சில magical அல்லது பரவசமூட்டும் நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன. இயற்கை தீட்டும் ஓவியம் போல ஒட்டுமொத்த நிகழ்வும் கச்சிதமாக நடந்தேறியது. இயற்கையின் ஓவியம் போலன்றி, இந்த ஓவியத்தை வரைந்த தூரிகைகளையும், அதை ஏந்தியிருந்த கைகளையும் கண்களால் காணமுடிந்தது. இக்குடியிருப்பை உயிர்ப்போடு வைத்திருப்பவை அந்தக் கைகள்.

இந்நிகழ்வில் என்னை ஆச்சரியப்படுத்தியது My Vision for India என்ற தலைப்பில் ஒரு மாணவி (9th or 10th std) எழுதிய கட்டுரையும் அதை அவர் பேசிய விதமும். நமது அரசியலமைப்புச் சட்டங்களின் சாரமான சமத்துவத்தை சுட்டிக் காண்பித்திருந்தது அக்கட்டுரை. அவருக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் என்ற சிறார் (பெரியவர்களுக்குமானது தான்) நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினேன்.

ஆனால், சற்று பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு இறுதியில் நடந்த Women Empowerment பற்றிய ஒரு Musical Drama தான். இந்திராவையும், ஜெயலலிதாவையும் தங்கள் பதாகைகளாக ஏந்தி தங்களின் உறுதியை வெளிப்படுத்திய அந்தப் பெண் குழந்தைகள் இந்திய சுதந்திரத்தின் ஆன்மாவை சீண்டிப் பார்ப்பவர்கள். இங்குள்ள அனைவரும் சமம். ஒருவரால் சுவாசிக்க முடியும் என்றால், அவரால் ஓட்டளிக்கவும் முடியும் என்று அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கிய முதல் ஜனநாயக நாடு இந்தியா. சில ஐரோப்பிய நாடுகள், அதன் பின்பே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. 80வது ஆண்டில் இருக்கிறோம், இன்னமும் இந்தப் பெண் சுதந்திரமும் பாதுகாப்பும் நம்மிலிருந்து சற்று தூரத்திலேயே உள்ளது. ஆனால் எட்டி விடக்கூடிய தூரம்தான்.

https://youtu.be/r0eosddSszM?si=Mrx8BteSxDlnxmWh

Leave a comment