
“நாளைக்கு யாருமே இங்க இல்லேன்னா கூட, ஷீத்தல் will cover for everyone…” என்ற ராகேஷிடம், “I will feel so empty after Ganesha leaves us tomorrow…” என்ற பதில்தான் இந்தப் பதிவிற்கான விதை என்று எண்ணுகிறேன். தத்துவார்த்தமாகப் பார்த்தால், மனிதகுலத்திற்கு அல்லது உயிரினங்களுக்கு இங்கு விதிக்கப்பட்டிருப்பது மாபெரும் வெறுமை எனலாம். இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே மனிதர்கள் தங்களைச் சுற்றி ஒரு உலகை புனைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட மனிதன் உருவாக்கிக் கொண்ட இப்புனைவைத்தான் இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதம் மாயை என்கிறது. நிர்குண பிரம்மத்தை, மனிதர்கள் சற்குண பிரம்மமாக மாற்றிக் கொண்டார்கள் என்கிறது.
கிட்டத்தட்ட நம்முடைய சடங்குகள், அதனையொட்டிய வழிபாடுகள், கொண்டாட்டங்கள், இவையனைத்தையும் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் மதங்கள் என அனைத்துமே இந்த வெறுமைக்கான எதிர்வினை என்றே எண்ணத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஷீத்தலிடம் இருந்து வந்த பதிலுள்ள ‘Empty’ இந்த வெறுமையைத் தான் சுட்டுகிறது.
எனது குடியிருப்பின் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் ஆறாவது நாள். தொடர்ந்து இந்த ஆறு நாட்களும், ஒரு சமுதாயமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதின் பயன்களை உணரமுடிந்தது. காலையிலும், மாலையிலும் பூஜை மற்றும் பிரசாதம். மாலையில் திருப்புகழ் தொடங்கி பிற மொழி விநாயகர் பஜனைப் பாடல்கள், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள், ஸ்லோகா உச்சரிப்பு போட்டிகள், அந்ராக்ஸரி என நீண்டு கொண்டே சென்றன. இறுதியில், இரவில் அடுத்த நாள் நிகழ்வுக்கான பிரமாண்ட கோலம். ஏற்கனவே Stormwater, Security enhancement, waste mgt, etc..etc..என வேலைப் பளுவால் விழி பிதுங்கியிருக்கும் குடியிருப்பின் நலச்சங்கத்தால் மட்டுமே ஏழு நாட்கள் தொடரும் இந்நிகழ்வை நடத்தி விட முடியாது.


Brigade Xanadu Bonito
ஆனால், எந்தவித குளறுபடியுமின்றி இங்குள்ள குடியிருப்புவாசிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக பெண்களின் பங்கு அளப்பரியது. அவர்களுக்கு ஒரு Gated Communityல் கிடைக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. ஒரு இயல்பான சுதந்திர உணர்வை அவர்களால் இங்கு உணரமுடிகிறது என்று எண்ணுகிறேன். இக்குடியிருப்பில் 680 வீடுகள் இருந்தாலும், அவையனைத்தையும் விழுங்கிச் செரித்து விட்டு பிள்ளையார் போல அமர்ந்திருப்பவை இங்குள்ள திறந்தவெளிகள். கிட்டத்தட்ட 15 acre பரப்பளவு கொண்டது. ஒரு குக்கிராமத்தை விட சற்றே பெரிய கிராமம். இந்த திறந்தவெளிகளை, கிட்டத்தட்ட தங்களுடைய வீட்டின் நீட்சியாகவே இங்குள்ள பெண்கள் உணர்கிறார்கள். Brigade என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது. இதனுடைய வடிவமைப்பாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள்…
வானிலிருந்து பார்க்கையில் மூன்று நேர்த்தியான செவ்வக அடுக்குகளாக இக்குடியிருப்பு காட்சியளிக்கும். உள்ளடுக்கில் கண்களை நனைக்கும் பசுமை வெளி. இத்தோட்டத்தை ஊடறுத்து பிரிக்கும் வரப்பு போல ஒரு block அல்லது தொகுப்பு குடியிருப்புகள். இரண்டாவது அடுக்கில் மற்ற தொகுப்பு குடியிருப்புக்கள். வெளியடுக்கில் இருபுறமும் பசுமை சூழ்ந்த சுற்றுப் பாதை அல்லது drive way. எப்பொழும் ஆள் அரவமின்றி அமைதியாகவே இச்சுற்றுப்பாதை இருப்பதற்கு முக்கிய காரணம், இங்கு வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படுவதில்லை. குடியிருப்பு வாசிகளின் வாகனங்கள் அனைத்தும் அடித்தளத்தில் தான் நிறுத்தப்படும். குடியிருப்புக்குள் நுழையும் அனைவரையும் ஆசுவாசப்படுத்தி ஆச்சரியப்படுத்துவது இந்த அகலமான பசுமை சூழ்ந்த நேர்த்தியாக பேணப்படும் சுற்றுப்பாதைகள் தான். உறவினர், நண்பர்களின் வருகையின் போது மட்டுமே, இச்சுற்றுப்பாதை அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும். இது ஒருவழிச் சுற்றுப்பாதையும் கூட. கிட்டத்தட்ட 30 அடி அகலமும், ஒரு கி.மீ சுற்றளலவும் கொண்டது.
இந்த தேர்த்தியான வடிவமைப்பும், குடியிருப்புவாசிகளின் ஒழுங்கும் தான் இந்த திறந்தவெளியை விசாலானமான ஒன்றாக தக்கவைத்திருக்கிறது. நம்முடைய மனம் அல்லது அகம், தொடர்ந்து புறச் சூழல்களால் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. புறத்தைப் பேணுபவர்களின் அகம் இயல்பாகவே அழகான ஒன்றாக விசாலமானதாக மாறிவிடுகிறது. இக்குடியிருப்பின் பெயரே அழகுதான். Spanish மொழியில் அழகிற்கு Bonito என்கிறார்கள்.
வேதபாராணயம்
விநாயக சதுர்த்தியின் ஆறாவது நாள் சற்று விசேஷமான ஒன்றாக இருந்தது. வடக்கிலுள்ள சுற்றுப்பாதையின் ஒரு பகுதி LED திரை கொண்ட நீண்ட மேடையாக மாறியிருந்தது. கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த மேடையின் பின்புறம் சூரியன் மென் சிகப்பாய் மறைவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். மேடைக்கு அருகில் அதன் வலப்பக்கதில் தான் Bonitoவின் பிள்ளையார் அம்மேடையில் நிகழவிருக்கும் வேதபாராயணத்தை எதிர்நோக்கி புன்னகையுடன் காத்துக் கொண்டிருந்தார் எங்களைப் போல. ஆனால், அது தன் தந்தையைப் போற்றி (நமக்கம்) வணங்கி (மந்திரம்) அருள் (சமக்கம்) வேண்டி நிற்கும் ஸ்ரீருத்ர வேதபாராயணம் என்றவுடன் அவர் எங்க போனாலும் இந்த அப்பாக்களின் தொல்லை தாங்க முடியலப்பா… Bonito மக்களே நீங்களுமா என செல்லமாய் மனதிற்குள் கோபித்திருக்கக் கூடும்.

இப்பதிவை எழுதுவதற்குத்தான் வேதபாராயணங்களைப் பற்றி சிறிது நேரம் இணையத்தில் தேடினேன். இந்த AI தேடலின் பதில்கள் சிறிது நேரத்திலேயே நம்மை வேதபாராயணத்தின் நிபுணனாக உணரவைக்கும் அபாயத்தை உருவாக்குபவை (rudramchamakam.com). ஆனால் வேதபாராயணம் செய்த வாத்தியார்களில் ஒருவர் முடிவில் இது ஸ்ரீருத்ரம் என்று அதனை விளக்கிச் சொல்லியதும் சில திறப்புக்களை அளித்தன. இது நிகழும் இடம் கோயிலாக இருக்கும். இல்லையெனில் அவ்விடத்தைச் சுற்றி கோயில் ஒன்று எழக்கூடும் என்பது ஐதீகம்.

பாராயணம் என்பதே தன்னை நோக்கிய ஒரு ஆழ்பயணம் என்று இதனுடைய வேர்ச் சொற்கள் சொல்கின்றன. Para = Transcendental; Yanam = Journey. வேதம் மட்டுமல்ல, எதனிலும் ஆழ்ந்து ஈடுபடும் பொழுது தன்னிலிருந்து சற்று நேரமாவது விடுபட முடிகிறது. ஒரு செயலில் முழுமுதலாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களே எதையாவது கற்கிறார்கள். அதன் வழி சாதிக்கிறார்கள். ஸ்ரீருத்ரம் நமக்குத் தருவது இதுவே. இங்குள்ள அனைத்திலும் உள்ள பரம்பொருளாக சிவனை உருவகித்துப் போற்றி என்னைக் காப்பாய் நீ என்று உருகி நிற்கிறது ஸ்ரீருத்ரம். நம் அப்பா இவ்வளவு பெரிய ஆளா என்ற தோரணையுடன் பிள்ளையார் நிற்பதைப் போலத் தோன்றியது எனக்கு.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், அந்த வேத உச்சரிப்பின் அதிர்வுகள் அவ்விடத்தை ஒரு தெய்வீக நிலைக்கு இட்டுச் சென்றன. That audio system was fool proof indeed. ஒவ்வொரு உச்சரிப்பின் அதிர்வுகளையும் எந்தப் பிசிறும் இல்லாமல் அங்குள்ளவர்களுக்கு கடத்திக் கொண்டே இருந்தன.
சனீஸ்வரர்

பிள்ளையாருக்கு நிகழ்ந்த அடுத்த சோதனை, தான் ஆனைமுகத்தவனாக மாறியதற்கு காரணமான சனீஸ்வரனின் வருகை. சனீஸ்வரனின் நாடகமும் அங்கு அரங்கேறியது. இந்நாடகக் குழுவின் ஒப்பனை அறைக்குள் இருக்கும் வாய்ப்பு கிட்டியது. நம் வாழ்வே ஒரு புனைவு என்றால், அதன் மேல் மீண்டுமொரு புனைவை வேஷமாய் போர்த்திக் கொள்பவர்கள் இக்கலைஞர்கள். எதிர்பாராத என்னைக் கண்டவுடன் சற்றுத் துணுக்குற்ற ராவணேஸ்வரனும், விஷ்ணு பகவானும் நான் யாரென்று தெரிந்தவுடன் இயல்பாகி நக்கலாக,
“நீங்கள் யார். எங்களுடைய ஒப்பனை அறைக்குள் நுழைவதற்கான காரணமென்ன?” என்று கர்ஜித்தார் ராவணன். தலையிலிருந்த கிரீடத்தை விழாமல் பிடித்துக் கொண்டே.
“தங்களை யார் கண்ணிலும் படாமல், மேடையின் பின்புறம் அழைத்து வரும்படி எனக்கு உத்தரவு ராவணேஸ்வரா…” என்று அவர்களுடன் ஐக்கியமானேன்.


40வது முறையாக இந்நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். புராண நாடகத் தமிழ் உச்சரிப்பதற்கு அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இவர்களுக்கு அது ஒரு சவாலல்ல. சுத்தமான தமிழ் உச்சரிப்பும், நாடகத்திற்குத் தேவையான அபாரமான உடல் மொழியையும் கொண்ட கலைஞர்கள் இவர்கள். அதிலும் சனி, ஈஸ்வரனையே திக்கு முக்காடவைத்து, அவர் முன் நின்று முழங்கி, பணிந்து அவரிடமிருந்தே சனீஸ்வரன் என்ற பட்டத்தைப் பெறும் காட்சி, it is a classic exhibition of not just their talent, it is an exhibition of the rich heritage of our art forms.




Xanadu village
நாடகமேடையிலிருந்து சற்று தொலைவில் நிறைய கடைகள். நாடகம் பார்ப்பவர்கள் அளவிற்கே அங்கும் கூட்டம். இரவு தூங்கச் சென்ற போது ஒரு கிராமத்தில் இருப்பது போல் தோன்றியது. இக்குடியிருப்பு இருக்கும் நொளம்பூர், சென்னை நகரத்தின் நெரிசல்களின் இருந்து விலகி ஒரு சின்ன ஊர் போல் இருந்தாலும், ஆறாம் நாள் நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து நடந்த விநாயகரை வழியனுப்பி வைக்கும் ஏழாம் நாள் நிகழ்வுகளும் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் இருக்கும் உணர்வையே அளித்தது. That village is called Xanadu.
It is a grand exhibit of the spirit of Brigade Xanadu Bonito…