தான் என்ற தன் முனைப்பின்றி இங்கு எதுவுமே சாத்தியமில்லை. இந்த தன்முனைப்பின் உச்சம்தான் பெரும் விழைவாக (பேராசை) இப்பிரபஞ்சத்தை தோற்றுவித்தது என்கிறது தத்துவங்கள். The world is just produced out of an Ego என்பது ஆச்சரியமளிக்கிறது.
இது யாருடைய தன்முனைப்பு என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால் நம்மால் அறிவியல், தத்துவம், மதம் என சுவாரஸ்யமாக பயணிக்கமுடியும். பெரு வெடிப்பிலிருந்து (Big bang) அல்லது Plank starல் இருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதென்றால், தன்னுள் நிலைகொள்ளாமல் இப்பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்? கடவுளா? கடவுள் இவ்வுலகைப் படைத்தாரா அல்லது கடவுள் தான் இவ்வுலகமா பரிணமித்தாரா? கடவுள் தான் இவ்வுலகைப் படைத்தார் என கடவுளுக்கு படைப்புச் சிறகை வழங்குபவை சில தத்துவங்கள். இல்லை கடவுளே இவ்வுலகமாக இருக்கிறார் என அவருடைய படைப்புச் சிறகை கத்தரிப்பவை சில தத்துவங்கள். கடவுள் மனிதனின் எல்லைகளை உணர்வதற்காக உருவாக்கப்பட்டவர் என தத்துவார்த்தமான அறிவியல் சொல்லும்.
ஆனால், இந்த தன்முனைப்பை, அறிவியலும், தத்துவமும் எப்படி புரிந்து கொண்டது என்பதை விட மதங்கள் எப்படி புரிந்து கொண்டன என்பது மிக சுவாரஸ்யமான ஒன்று. அசுரனை வதம் செய்ய தயாராகும் நவராத்திரி தினங்களில் இதைப் பற்றி ஆராய்வது ஒரு கூடுதல் சுவாரஸ்யம் தான்.
இப்பெரும் விழைவை (பிரபஞ்சத்தை) கடவுளாக உருவகிக்கின்றன மதங்கள். கடவுளர்களுக்கு பெண் உருவம் கொடுத்து போற்றியது இந்து மதமாகத்தான் இருக்க முடியும். இந்து மதம் பல்வேறு மதங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு தொகுப்பு மதம். சைவம் (சிவன்), வைணவம்( விஷ்ணு), சாக்தம் ( அம்மன்), காணபத்யம் (பிள்ளையார்) மற்றும் கௌமாரம் ( முருகன்) என்ற ஆறு உட்பிரிவுகளை கொண்டதுதான் இந்து மதம்.
நவராத்திரி வழிபாடுகள், சாக்த வழிபாட்டின் உச்சம் என்கிறார்கள். சிவபிரியையான துர்கை அல்லது காளி, விஷ்ணுபிரியையான லஷ்மி மற்றும் பிரம்மப்பிரியையான சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களும் அம்பிகை எனும் ஒரு தெய்வமாக மாறி மஹிசாசுரன் என்ற அசுரனை வதம் செய்ததைத்தான் நவராத்திரியாக கொண்டாடுகிறார்கள்.
இந்தியத் தத்துவங்களின் படி, இவ்வுலகில் முதலில் தோன்றிய மனிதர்கள் அசுரர்களாகத்தான் இருக்க முடியும். அவர்களுடைய பெரும் விழைவால்தான் மனித குலம் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்தது. ஒருவரின் மிக விரைவான வளர்ச்சியை நாம் அசுர வளர்ச்சி என்று சொல்வதற்கு இதுதான் காரணம் போலும். வளர்ச்சி எப்போதும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். இதை வரைமுறைப்படுத்த, அசுரர்களின் வளர்ச்சி பல்வேறு அறக்கோட்பாடுகளால் தழைப்படுத்த அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டுப்பட்டு உயர்பவர்கள் தேவர்கள் என்றும், மறுப்பவர்கள் அசுரர்கள் என்றும் ஆகிறார்கள்.மனிதர்களின் இப்பரிணாம வளர்ச்சியை சுட்டிக்காட்டும் குறியீடுதான் நவராத்திரியின் பொருட்டு வைக்கப்படும் கொழுவின் படிக்கட்டுகள் என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்படியில், ஓரறிவு கொண்ட தாவரங்களும்; கடைசிப்படியில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவும் வீற்றிருப்பது ஐதீகம். இந்த அடுக்கு வரிசையை ஏற்க மறுக்கும் மனிதர்களை பெரும்பாலும் அசுரர்களாக உருவகிக்கிறது நமது புராணங்கள். உடனே புராணங்கள் புரட்டு என்று கிளம்புவதை விட, இந்திய நிலப்பரப்பில் பரவியிருந்த பல்வேறு பழங்குடிகளின் தெய்வங்களை ஒரு சரடில் தொகுத்து ஒன்றினைத்ததும் புராணங்கள்தான் என்பதை நினைவு கூர வேண்டும். கொற்றவை, காளி, பார்வதி என்ற பல்வேறு நிலப்பரப்பின் பெண் தெய்வங்களை சிவபிரியைகள் என்று ஒன்றிணைத்தது புராணங்கள்தான். இதுபோலத்தான் விஷ்ணுவின் பிரியைகளும், பிரம்மாவின் பிரியைகளும் தொகுக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த மும்மூர்த்திகளும் பல்வேறு நிலத்தெய்வங்களின் தொகுப்புதான். சிவன் என்பது ஒரு கடவுள் அல்ல.
இந்தப் புராணங்கள் பல்வேறு ஆச்சாரங்களையும், திருவிழாக்கள் வழியாக வலியுறுத்துகின்றன அல்லது நெடுங்காலமாக அவற்றை நிலைநிறுத்துகின்றன.நவராத்திரியின் போது வலியுறுத்தப்படும் வீட்டுத் தூய்மை, கூட்டு வழிபாடு போன்றவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
அசுரர்கள் என்பவர்களும் மனிதர்களே. சொல்லப்போனால், நாம் அனைவருமே அசுரர்களாய் இருந்துதான் பரிணமித்துள்ளோம். நம்முள் உறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் அந்த அசுரனை ( கட்டற்ற காமம், வெறுப்பு, சுயநலத்தில் திளைத்தல் போன்றன) வீழ்த்த வேண்டும் என்கின்ற தத்துவப் புரிதலையும் இந்த மகிஷாசுரனை வென்ற இந்த அம்பிகை நமக்கு புராணங்கள் வழியாகத்தான் சொல்கிறாள்.
இந்த ஆச்சாரங்களும் ( முறைப்படுத்தப் பட்ட பழக்கவழக்கங்கள்), தத்துவங்களும் தான் மதங்களின் உள்ளடக்கமாக உள்ளன. இவ்விரண்டையும் அருமையாக இணைத்திருப்பவை தான் புராணங்கள். அதற்காக மதங்களை ஒட்டுமொத்த சதி என்று வெறுத்து ஒதுக்குவதும் (இடதுசாரிப் பார்வை) அல்லது மானுடத்தின் உச்சம் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் (வலதுசாரிப் பார்வை) மடமையே.
நவராத்திரி வாழ்த்துக்கள்!!!

Image sourced from
Maa Siddhidatri – Navratri Day 9 https://share.google/xRlTW3iKympDj2o4B