நினைவும் மொழியும்

தூக்கி எறியும் இந்த விரல்கள் தான் இத்தேசத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்ற வரிகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. கவிஞர் சபரி, கவிஞர் சாம்ராஜ் அவர்களின் ‘வைகையாற்றுப்படை’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையில் இதனை குறிப்பிட்டிருந்தார். தொடுதிரைகள், அதிலும் கையடக்கமான தொடுதிரைகளின் வருகைக்குப் பிறகு scroll செய்வது தன்னையும் அறியாமல் நடக்கும் ஒரு அனிச்சை செயலாகி விட்டது.  சமூக உடகங்கள் எவ்வளவு முயன்றும், தன் பயனாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நிர்ணயிக்க முடிவதில்லை. Feedல் வரும் அனைத்தும் அந்த விரல்களால் கணப் பொழுதில் தூக்கி எறியப்படுகின்றன. அந்த கணப்பொழுதை ஒரு சில நிமிடங்களாக மாற்றுவதெப்படி என்பதை நோக்கித்தான் அனைத்து படைப்பாளிகளும் இயங்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். கிட்டத்தட்ட பார்வையாளரின் சிந்தனையை மழுங்கடிக்கும் இந்தச் செயலில் இருந்து சிந்தனையை வளர்த்தெடுக்கும் மொழி தன்னியல்பாகவே விலகி விடுகிறது. இதன் பொருட்டே உலகம் முழுவதும் வாசிப்பின் அவசியம் அறிவியலாளர்களால் வலியுறுத்தப்படுகிறது என்பதை சபரி இவ்வுரையில் சுட்டிக் காண்பித்தார்.

மொழி வழி வரும் சிந்தனையும், காலம் வழி கிடைக்கும் நினைவுகளுமே ஒருவரை படைப்பூக்கமிக்கவராக வைத்திருக்க முடியும் என்பதை வைகயாற்றுப்படை புத்தகம் காட்டியிருக்கும் மனிதர்களின் சித்திரங்கள் வழியாக உணர்த்த முயன்ற உரையிது. ஸ்காண்டிநேவிய தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஒரு போர்க்கடவுளின் துணை வழியாக இதனை விளக்கியது மிக சுவாரஸ்யமான ஒன்று. அக்கடவுளின் தோளில் அமர்ந்து அவரிடம் முனுமுனுக்கும் இரு காகங்களின் சித்திரம் மனதை விட்டு அகல மறுக்கிறது. ஒரு காகம் சிந்தனையின் உருவகம் மற்றொன்று நினைவினுடையது. உடல் வழுவை தன்னுடைய பிரதான ஆற்றலாகக் கொண்டிருக்கும் போர்க்கடவுளுக்கெதற்கு இவ்விரண்டும் என்ற கேள்வியும் தோன்றியது. தொன்மங்கள், நாம் மூளையுழைப்பு மற்றும் உடலுழைப்பு என்ற இருமைக்குள் செல்வதற்கு முந்தைய ஆதி காலத்தையவை என்று என்னை சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சாம்ராஜ் கவிஞர் மட்டுமல்ல. இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தன் நினைவாற்றலுக்கு கச்சிதமான மொழி வடிவத்தைத் தந்திருப்பவர். அவருடைய பிரசித்தி பெற்ற கொடைமடம் நாவலில் வரும் ஒரு தோழரால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்திற்கு சிரிக்க இயலாமல், வீட்டிற்கு வந்து தான் சிரிக்கவே மறந்து போனதை நினைத்து வெடித்து அழும் சித்திரம் இன்னமும் நினைவில் உள்ளது.

இது போன்ற பல மனிதர்களை, சபரி குறிப்பிட்டு சொன்னதை போல,  வலுவாக இருக்கும் தன்னுடைய நினைவு நரம்புகளில் இருந்து மொழியின் வழியாக மீட்டெடுத்திருக்கிறார் சாம்ராஜ்.

இந்நிகழ்வில் பேசிய சாம்ராஜின் நண்பர் வரதராஜனின் பார்வை மிக முக்கியமானதாக தோன்றுகிறது. சாம்ராஜின் நினைவு நரம்புகள் துக்கத்தால் வலுவிழக்காதவை. தன்னுடைய நுட்பமான பகடிகள் வழியாக அந்த வலுவை இன்னமும் தக்க வைத்திருப்பவர். ஆனால், விகடனில் தொடராக வெளிவந்த இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அத்தனை துக்கம் நிறைந்த ஒன்றாக மாறியிருப்பது சாம்ராஜின் இயல்பிற்கு சற்றே செயற்கையான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டார். இப்பார்வையுடன் என்னால் ஒத்துப்போக முடிகிறது. இதனைவிட பரிதாபகரமான மனிதர்களின் வாழ்வை காட்சிப்டுத்தியிருந்த சாம்ராஜின் கொடைமடம் நாவலின் நுட்பமான பகடிகள் துக்கங்களின் ஆழத்தையும். விரிவையும் சீண்டிப் பார்ப்பவை.

அனைவரின் உரைகளுக்குப் பிறகு, அங்கிருந்த பார்வையாளர்களுக்கும் மேடையில் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு நிலவியிருந்த இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அனைத்தும் கூரிய சொற்கள். கையில் மைக் கிடைத்து விட்டதென எவரும் முடிவிலாமல் உளரவில்லை. ஒரு பத்து பேராவது மேடையேறி இருப்பார்கள். சாம்ராஜையும் அவரது படைப்பையும் நெருங்கி அறிந்தவர்கள். அதனைப் பற்றிய தன் உணர்வுகளை சுமந்தலைபவர்களாகத் தோன்றினார்கள். ஒட்டு மொத்த நிகழ்வும் ஒரு உணர்வெழுச்சிக்கு சென்று விட்டது. தன்னுடைய பேச்சால் நிகழ்வுகளை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் சாம்ராஜையும் இந்த உணர்வெழுச்சி ஆட்கொண்டதை உணரமுடிந்தது. தன்னுடைய அனைத்து வார்த்தைகளையும் அங்கிருந்தோருக்கு வழங்கி விட்டதுபோல, என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை என்பது போல நின்றிருந்தார். That speech is un-typical of Samaraj and he was overwhelmed like the rest of us.

சென்னையின் மையப்பகுதிகளை அல்லது TTK சாலை போன்ற Cultural centresஐ நிமிடங்களில் அடைந்து விட முடிந்த ராஜ்பவன் அருகிலிருந்த இடத்திலிருந்து சென்னையின் மேற்கு மூலையிலிருக்கும் முகப்பேருக்கு இடம் பெயர்ந்த பிறகு, இலக்கிய நிகழ்வுளில் கலந்துகொள்வது சற்று குறைந்து விட்டது. இந்நிகழ்விற்கு முந்தைய நாள், என்னுடைய புதிய குடியிருப்பில் Carnival என்ற பெயரில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஒரு மினி தி.நகராக மாற்றியிருந்தார்கள். ஆனால், இது போன்ற ‘போலச் செய்யும்’ நிகழ்வுகளிலிருந்து  இலக்கிய நிகழ்வுகள் எப்போதும் வெளியே நிற்பவை. அசலானவை. நம்முடைய நேரத்தையும், உழைப்பையும் கோரி நிற்கும் அனைத்து தகுதியையும் தன்னுள் கொண்டவை.

Leave a Reply