தலித்தியம் – ஒரு புரிதல்

IMG_20180925_1337412

தீட்டுகள் நிறைந்த சமூக தீட்டான சாதிதான் ஒழிக்கப்பட வேண்டுமேயொழிய, மதமல்ல என்கிறார் அம்பேத்கர். சாதிகளைவிட, அதை முத்துக்களாக கோர்த்து வைத்திருக்கும் மதம்தான் ஒழிக்கப்படவேண்டும் என்கிறார் பெரியார். மதத்தை சமூகத்திலிருந்து உருவி விட்டாலும், சிதறிய முத்துக்களாய் சாதி இருந்து கொண்டேதான் இ்ருக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வை அம்பேத்கருடையது.

ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் ஜெயமோகனின் ‘இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/ ) , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ எனும் இந்நூல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. திராவிடத்தாலும், இந்துத்துவத்தாலும், இனவாதத்தாலும் அலைக்கழிக்கப்படும் இன்றைய இளையதலைமுறைகளின் கையில் எப்போதும் இருக்கவேண்டிய வழிகாட்டி நூலிது என்றே எண்ணத்தோன்றுகிறது.

அம்பேத்கரை தலித்துகளின் தலைவராக குறுக்கிக் கொண்ட தலித்துகளுக்கு (பஞ்சமர்) மட்டுமல்லாமல்; பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக சுருக்கிக் கொண்ட முன்னால் சூத்திரர்களுக்கும் (சமூக அடுக்கில் உயர்ந்திருக்கும் இன்றைய இடைநிலை சாதிகள்); நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று புலம்பும் இன்றைய பிராமணர்களுக்கும் (முந்தைய பரமாத்மாக்களுக்கும்), பிராமணரல்லாத பிற உயர்சாதியினருக்கும் (முந்தைய நிலப்பிரபுகள்) கூட இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரிய திறப்பைத் தருபவையாகவே இருக்கமுடியும்.

இப்புத்தகத்திலுள்ள 15 கட்டுரைகளுமே, ஏதோ போகிறபோக்கில் வெறுப்பில் உமிழப்பட்டவையல்ல. நிறைய தரவுகளுடனும், அதற்கும் மேலான பொறுப்புணர்ச்சியுடனும் தலித்துகளின் முன்னேற்றம் பற்றிய தன்னுடைய பார்வையை அனைத்து கட்டுரைகளையும் முன் வைத்திருக்கிறார் ராஜ் கௌதமன். எனக்கு நெருக்கமாக இருந்த சில கட்டுரைகளைப்பற்றிய அவதானிப்புக்கள்தான் இப்பதிவு.

ராஜ்கௌதமன் படைப்புகள் எனக்கு அறிமுகமானது பற்றி நான் எழுதிய இன்னொரு பதிவிற்கான சுட்டியை இங்கு கொடுத்துள்ளேன்.

https://muthusitharal.com/2018/08/22/தனித்தமிழும்-தாய்மொழிப்/

தமிழக தலித்தும் தமிழ் இலக்கியமும்

இக்கட்டுரையை படித்து முடித்தவுடனே தலித் இலக்கியமென்றொன்று ஏன் உருவாகி வந்திருக்கிறது என்று புலப்பட்டது. இங்கு நாம் காணும் அனைத்து மாற்றங்களும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்திலேயே தொடங்கியிருக்கும். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை தொடங்கி சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கான உரிமைகள் வரை நிறைய சுட்டிக்காட்ட முடியும். ஒடுக்குபவர்களுக்கு எதிராக திரளும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியமும் சரி; போராட்டங்களும் சரி, இன்றொன்றை ஒடுக்குவதாகவே அமைந்துள்ளன. தனக்குக் கீழ் ஒடுக்கப்படுவதற்கு யாருமற்ற தலித்துகளின் எழுச்சியே அவர்கள் விடுதலையை மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சாதிப்பிணியிலிருந்து விடுதலை செய்ய முடியுமென்கிறது இக்கட்டுரை.

மேலும் பிரிட்டிஷாரின் வருகையிலிருந்து திராவிட எழுச்சிவரை ஏற்பட்ட மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எப்படி தலித் என்பவர்கள் இம்மாற்றத்தில் பிறரால் உபயோகப் படுத்தப்பட்டார்கள் என்பதையும் ஒரு வரைபடம்போல் அருமையாக சுட்டிக்காட்டியிருக்கிறது இக்கட்டுரை.

பேரரசுகளை நடத்துவதற்குத் தேவையான சமூக அடுக்கை உற்பத்தி செய்வதற்கான கருத்தியலை இந்து மதத்தின் வழியாக நிறுவி, அந்த அடுக்கில் தங்களை மேலானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர் என்றழைக்கப்படும் பிராமணர்கள். இக்கருத்தியல் முற்றிலும் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவ்வடுக்கை குலையாமல் நிலை நிறுத்திக்கொள்ள ஒழுக்கம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில், கடைசியடுக்கில் இருந்த உடலுழைப்பைத் தவிர வேறொன்றுக்கும் வாய்ப்பளிக்கப்படாத தலித்துகள் ஒடுக்கப்பட்டார்கள் என்றால்; வீட்டில் பெண்கள்.

நிலையாமையை கடந்துசெல்ல உதவும் ஒரு கைத்தடியான மதத்தை, இறுகிய மரமாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் அதைச்சுற்றியே இயங்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். அதாவது மதத்தை நிறுவனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் வழியாக ஆளும் வர்க்கத்தினரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள்.இந்து மதத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் இந்தப்போக்கு இருந்துள்ளது. இவையெல்லாம் சமூக அடுக்கின் மேலிருப்போரால் நியாயப்படுத்தப் பட்டாலும், தலித்துகளின் பார்வையில் எப்படி நியாயமாக இருக்கமுடியும் என்பதே இக்கட்டுரை நம்முன் வைக்கும் கேள்வி. இதையொட்டியே அம்பேத்கரின் நிலைப்பாடான, ஒழிக்கப்படவேண்டியது மதமல்ல; சாதிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிலையற்ற இவ்வாழ்க்கையின் ஒரு அங்கமாக மதம் கைத்தடிபோல் இருந்துகொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது.

மதங்களிலிருந்து கிடைக்கும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வுலகை ஆள முடியாது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷார், தங்கள் அறிவியலுடனும் அதன் வழி கண்டடைந்த ஜனநாயகம், கல்வி, பூர்ஷ்வா (முதலாளித்துவ) பொருளாதார அமைப்புகள் மற்றும் பல இத்யாதிகளுடன் தமிழக கடற்கரைகளில் வியாபார வெறியுடன் கால்வைத்தபோது, பிராமண-சத்திரிய-வேளாள கூட்டணி இங்கே சனாதன தர்மத்தின்படி ஏகபோக வாழ்க்கையில் கொளுத்திருந்தது.

பிரிட்டிஷாரின் கைக்கு அதிகாரம் மாறியபின் ஏற்பட்ட சமன்குலைவு, அதிகாரத்தோடு எப்போதும் கைகோர்த்துக் கொள்ளும் பார்ப்பனர்களை வேறுவழியின்றி தங்களுடைய வைதீக நெறிகளை தளர்த்திக்கொள்ளச் செய்தது. ஆங்கிலம் கற்றல்; மாட்டுக்கறி உண்ணும் பறையருடன் சகஜமாக பழகுதல் என மாற்றங்களைத் தழுவிக்கொண்டு, வழக்கம்போல் பிரிட்டிஷ் அதிகாரத்திலும் இவர்களே கோலேய்ச்சினார்கள். இவர்களுக்கெதிராக வேளாளர்கள் திராவிடர் என்ற பெயரில் எழவேண்டிய சூழல். எழுச்சியின் நோக்கமெல்லாம் பார்ப்பனர்களின் இடத்தை தாங்கள் பிடிப்பதுதான். இதற்கு பிரிட்டிஷாரின் ஜனநாயக அரசியல் அவர்களுக்கு கைகொடுத்தது. 2 சதவீதம் மட்டுமே இருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக தங்களை திராவிடர் என்றும், தங்களுக்கு கீழிருந்த தலித்துகளை ஆதிதிராவிடர்கள் எனவும் திரட்டிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். இதற்கு சைவமும் தமிழும்கூட அவர்களுக்கு உதவின.

ஆனால் பார்ப்பனர்கள் கைவிட்டுக்கொண்டிருந்த வைதீக கெடுபிடிகளை திராவிடர் போர்வையிலிருந்தவர்களால் விடமுடியவில்லை. வழக்கம்போல் தலித்துகளை சமூகத்தின் கடைசியடுக்கில் வைப்பதைத்தான் இந்த திராவிடர்களும் செய்திருக்கிறார்கள். எனவே தலித்துகளுக்கான விடுதலை எவரிடமிருந்தும் கிடைக்கப்போவதில்லை; தனக்குள்ளேயே ஒரு சாதிய ஏறுவரிசையைக்கொண்ட தலித்துகள் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே அது சாத்தியம் என்று வலியுறுத்துகிறது இக்கட்டுரை.

பார்ப்பனரும் வேளாளரும் தமிழகமும்

இக்கட்டுரை கிட்டத்தட்ட முன் குறிப்பிட்டுள்ள கட்டுரையின் நீட்சியாகத்தான் உள்ளது. பிரிட்டிஷார் வருகைக்கு முன்புவரை, அதாவது தமிழகத்தை ஆண்ட மண்ணின் மைந்தர்கள் காலம் தொடங்கி விஜயநகர பேரரசின் வழியாக ஆண்ட தெழுங்கர்கள் காலம்வரை ( குறுகியகால முகமதியர் ஆட்சி தவிர) தமிழகத்தில் பண்பாட்டுச் சிக்கல் பெரிதாக எழவில்லை. பார்ப்பன-சத்திரிய-வேளாளர் கூட்டணி கடைபிடித்த சனாதன முறைகளுக்கு ஒரு பங்கமும் ஏற்படவில்லை.

ஆனால் பிரிட்டிஷாரின் வியாபார வெறிக்கும், அவர்கள் கொண்டுவர நினைத்த எந்திரப் புரட்சிக்கும் இங்கு நிலவிய இந்த சாதி அடிப்படையிலான பண்பாடுகள் மிகச்சிக்கலாக இருந்தன. பறையர் உணவுண்ணும் இடத்தில் உயர்சாதியினர் நுழைவதைக் கூட விரும்பாத இந்த சாதித் துயரத்தை முதன்முதலில் கலைத்துப்போட்ட பெருமை பிரிட்டிஷாரையே சேரும். இந்ந பண்பாட்டுச் சிக்கலை எதிர்கொள்ளும் பொருட்டு நடந்தவைகளே பார்ப்பன வேளாள கூட்டணியில் உடைப்பை ஏற்படுத்தின என்று புரிந்து கொள்கிறேன். இராபர்ட் கால்டுவெல்லின் ஆரிய திராவிட ஆராய்ச்சிகளும் கூட இவ்வுடைப்புக்கு தூபம் போட்டிருக்கலாம்.

நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உணர்ந்து தங்களை வேறுவழியின்றி மாற்றிக்கொண்டு, பார்ப்பனர்கள், பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களிலிருந்த அனைத்து வாய்ப்புகளையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். வெளியே சமத்துவமாகவும், வீட்டிற்குள் வைதீகமுமாக இருந்தார்கள் என்கிறது இக்கட்டுரை.

நிலப்பிரபுத்துவ மயக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத உயர்சாதியினரான வேளாளச் சாதியினர் தெளிந்தபோது
அலுவலகவேலை, சொத்துத்தனியுடைமை ஏற்படுத்திய வழக்கறிஞர் தொழில் என அனைத்து அதிகாரப்பணிகளிலும் தங்களை அமர்த்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கெதிராக, ‘மலைடா, அண்ணாமலைடா…’ என தொடைதட்டி ஆரம்பிக்கப்பட்டதே வேளாளர்களுடைய ஜஸ்டிஸ் பார்ட்டி.

பிரிட்டிஷாரின் அதிகாரச் சலுகையை பெறும்பொருட்டு,சில வேளாளச் சாதிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்தொழுகி தலித்துகளும் மாற ‘மாடசாமி’ ‘மேட்சமி’ ஆனது மட்டும்தான் மிச்சம். கிறிஸ்துவத்திலும் சாதியைப் புகுத்திய பெருமை வேளாளர்களுக்கே உரியது.

இந்த ஜஸ்டிஸ் கட்சிதான் பின்னர் ஆந்திர கன்னட மலையாள வேளாளச் சாதிகளையும் இணைத்துக் கொண்டு சுயமரியாதை இயக்கமாக பெரியார் தலைமையில் மாறியது. ஜஸ்டிஸ் பார்ட்டியின் கருவிகளான சைவமதமும், தமிழும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திராவிடமும் நாத்திகமும் முன்வைக்கப்பட்டன.

இக்கட்டுரையில் வரும் பல தரவுகள் பார்ப்பன மற்றும் வேளாளர் மோதலால் தமிழுக்கும், இவ்விரு தரப்பினருக்கும் கிடைத்த நிறைய நன்மைகளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ஆனால் இவ்விரு தரப்பினரையும் நம்பிச் சென்ற பெருவாரியான தமிழர்களுக்கு குறிப்பாக தலித்துகளுக்கு குறிப்பிடத்தகுந்த அரசியலதிகாரம் கிடைக்கவில்லை என்ற நிசர்சனத்தைச் சுட்டிக்காட்டி இக்கட்டுரை முடிகிறது.

தலித்திய பார்வையில் பாரதி

இத்தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கட்டுரையாக இதை எண்ணுகிறேன்.

“நாங்களெல்லாம்தான் இந்நிலத்தின் பூர்வ குடிகள்” என்று ஒடுக்கப்பட்டவர்களும் “இச்சமூகமே ஒரு காலத்தில் பெண்களால்தான் ஆளப்பட்டது” என குமுறும் பெண்ணியவாதிகளும், இந்தப்புனைவைத் தாண்டி பாரதியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.

இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார்:

1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை

2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை

3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை

4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.

ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களை ஏன் ஒட்டுமொத்தமாக தலித்துகள் என்றழைப்பதை ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது. ஆனால் இத்தனை வகைமைகளும் ஒன்று சேர்ந்து சாதியொழிப்பு என்ற கருத்தியலை கையிலெடுக்காதவரை, தலித்துகளுக்கான ஒட்டுமொத்த விடுதலை சாத்தியமில்லை என்கிறது இக்கட்டுரை.

ஆனால் அதுவரை தனக்கான ஆற்றலை ஒடுக்கப்பட்டவர்கள், தன்னுடைய சாதியாலே ஒடுக்கப்பட்டு கலகக்காரனாக்கிய பாரதியின் கலகங்கள் வழியாக பெற்றுக்கொள்ள முடியுமென்று கூறி, பாரதி வைத்த தீர்வுகளிலுள்ள குறைகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை இக்கட்டுரை.

தலித் பார்வையில் (இந்து) மதம்

அத்தனை கட்டுரைகளுக்கும் முத்தாய்ப்பான கட்டுரை இது. இப்பதிவிலுள்ள முதல் பத்தி இக்கட்டுரை பற்றிய என்னுடைய புரிதலே.

எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்கள் வழியாக கண்டடைந்த மதம் பற்றிய புரிதலை இக்கட்டுரை வலுப்படுத்தியிருக்கிறது. ஆகச்சிறந்த பழங்குடி மனங்களின் தரிசனங்களை சடங்குகள் மற்றும் மொழியின் வழியாக தத்துவமாக்கி சமூகங்களுக்கு கடத்தும் ஒரு ஊடகமே மதம் என்பதை ‘மந்திரம், விலக்கம், இனக்குழு மனப்பான்மை’ என இக்கட்டுரை தொட்டுக்காட்டியிருக்கிறது.

நிலையாமை என்ற ஒன்று இருக்கும்வரை மதம் ஏதாவது ஒருவகையில் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்த தீர்க்கதரிசிகள் தான் அயோத்திசாத பண்டிதரும் அம்பேத்கரும். ஆகவே தான் அம்பேத்கர் இந்து மதத்தைவிட, அதைவைத்து சாதி என்னும் ஒன்றை தோற்றுவித்த இந்துத்வத்தை (Hinduism) கடுமையாகச் சாடியுள்ளார். இந்துவாக இருப்பவரிடம் ஒருபோதும் சமத்துவ உணர்வை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் சாதியால் கண்டுண்டவர்கள். சாதியிருக்கும் வரை இந்துக்களுக்கு விடுதலையில்லை என்கிறார். மதத்தை ஒழிக்க வேண்டுமென்ற பெரியாரின் தீவிரப்போக்கு கூட சாதியிடம் மண்டியிட்டு தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இவரின் இந்த தீவிரப்போக்கால் சமூகடுக்கில் உயர்ந்த இடைநிலைச்சாதியினர் (முந்தைய சூத்திரர்கள்) தலித்துகளை ஒடுக்கத்தான் செய்கிறார்கள் என்பது கண்கூடு.

இந்து மதம் மட்டுமல்ல, நிறுவனப்படுத்தப்பட்ட எல்லா மதங்களுமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஏதாவது ஒரு வகையில் உருவாக்கி வைத்துள்ளன என்பது நிசர்சனமான உண்மை. எனவேதான் அம்பேத்கரின் இலட்சியமான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்ததுவத்தை மையமாக கொண்ட மதம் ஒரு உயர்ந்த இலட்சிய கனவு மட்டுமே என்று கூறி, நிதர்சனத்தில் நம்முடைய பழங்குடி சடங்குகளிலும் வழிபாடுகளில் இருந்துமே புறச்சிக்கல்களை சந்திக்கத் தேவையான அக ஆற்றலை பெறமுடியுமென்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறார் ராஜ்கௌதமன்.

இப்புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

IMG_20181002_1936201

Advertisement

2 thoughts on “தலித்தியம் – ஒரு புரிதல்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s