
இன்னமும் கொலை எதுவும் செய்திராத, ஆனால் தன் அண்ணனைக் கொன்றவனின் கையையாவது கூடிய விரைவில் காவு வாங்க வேண்டும் என்ற நினைப்பைச் சுமந்தலையும் ஒரு குட்டி இளைஞனின் பார்வையின் வழியாக பயணிக்கிறது வெக்கை எனும் பூமணி அவர்களின் நாவல். சிதம்பரம் என்ற அந்த குட்டி இளைஞனின் கன்னி முயற்சி கொலையில் முடிவதாகத் தொடங்கும் இப்பயணம், அவன் நீதிமன்றத்தில் சரணடைவதோடு முடிகிறது. இப்பயணத்தின் வழியாக, நில உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பின் வர்க்க மணம் கமழ ( வீச) படைத்திருக்கிறார் பூமணி.
நாவலின் களமும், அது சித்தரிக்கப்படும் விதமும் இயல்பாகவே இரு சாதியினருக்கு இடையேயான உரசலும் பகையுமாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால், அதை இரு வர்க்கங்களுக்கிடையேயான முட்டல்களும் மோதலுமாகத்தான் சித்தரிக்க முயன்றிருக்கிறார் பூமணி. ஏழை, பணக்காரன் என்ற பொருளாதார அடிப்படையிலான வர்க்க பிரிவிற்கும்; மேல்சாதி, கீழ்சாதி என்ற பிறப்பின் அடிப்படையிலான வர்ணப்பிரிவிற்கும், நாவல் வெளிவந்த 70களில் நூலிழை அளவுதான் வித்தியாசம் இருந்திருக்கக் கூடும். அதாவது, அப்போதைய பெரும்பான்மையான பணக்கார்கள் மேல்சாதியினரே. ஆனால், மேல்சாதி ஏழைகளும், கீழ்சாதி பணக்காரர்களும் கணிசமாகி விட்ட இக்காலத்திலும் இந்நாவலை இரு சாதியினருக்கு இடையேயான பகையாக மட்டுமே நாம் பார்ப்பது, பூமணியின் தோல்வியல்ல.
70களிலும் நாவல் பற்றி எழுந்த இப்பார்வையை மறுத்த பூமணி, இப்போதும் அப்பார்வையை மறுக்கிறார். தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கும்; அதை உபயோகித்து சமூக அடுக்கில் உயர்வதற்கும் உரிய வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுபவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று வரையறை செய்து கொண்டால், இந்நாவலில் வரும் பரம(செ)சிவத்தின் குடும்பம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
பரமசிவம் (நாவல் முழுவதும் இவருடைய இரண்டாவது மகனான சிதம்பரத்தின் வழியாகவே செல்வதால் அய்யா அய்யா என்றே வருகிறார்) குடும்பத்தினர், கல்வி என்ற தகுதியைப் பெற்று உயர்வதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், தங்களிடமிருக்கும் சொந்த நிலத்தின் வாயிலாகவும், ஏற்கனவே கைகொண்டிருந்த அந்நிலம் பற்றிய அறிவாலும் மற்றவரிடம் கைகட்டி வேலை பார்க்க அவசியமில்லை என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பரமசிவத்திற்கு, அவருடைய இளவயதில் இக்கனவு கைகூடவில்லை. ஆனால் தன் மனைவிக்கு அவருடைய அண்ணன் அளித்த நிலத்தால், இக்கனவை ஓரளவு நிறைவேற்றிக் கொள்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக இந்நிலம், வடக்கூரான் என்பவரின் பெரும்பான்மையான நிலங்களுக்கு அருகில் காலப்போக்கில் அமைந்து விடுகிறது. அதை அபகரிக்கும் முயற்சியால் புகைந்து கொண்டிருந்த பகையில், பரமசிவத்தின் மூத்த மகனைக் கொடூரமாகக் கொல்கிறான் வடக்கூரான். பரமசிவனின், ஒட்டுமொத்த குடும்பமும் ( மாமா, அத்தை, சித்தி என) அவன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தது என்பதை, செலம்பரம் (சிதம்பரம் அப்படித்தான் இக்குடும்பத்தாரால் அழைக்கப்படுகிறான்) வடக்கூரானின் கையை வெட்டுவதற்காக முயன்று ஆளையே தவறி கொன்று விட்ட பிறகு தப்பிக்கும் பயணத்தின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. வெக்கையிலுள்ள இப்பயணம்தான், இந்நாவலை அசுரன் என்ற ஒரு திரைப்படமாக்கும் பல்வேறு சாத்தியங்களை வழங்கியதாக இயக்குநர் வெற்றிமாறன் சுட்டிக் காட்டுகிறார்.
வன்மத்தைவிட, அதை நிறைவேற்றிக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை, செலம்பரம் அவனது அய்யாவோடு தப்பித்து அழையும் அந்த நாட்கள் உணர்த்துகின்றன. சாப்பாட்டிற்கு வழியின்றி, அங்குமிங்கும் அலைந்து கிடைத்ததை உண்ணும் கடுமையான நாட்கள். ஆனால் இப்பயணத்தின் வழியாகவே அவர்கள் தங்களுடைய வாழ்விடங்களோடு எவ்வளவு ஒன்றியிருக்கிறார்கள் எனபதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்நிலப்பரப்புகளைப் பற்றிய புரிதல்தான், அவர்களுக்கு இயல்பாக அமைந்திருக்கும் தகுதி. இத்தகுதியோடு நில உரிமையும் இணையும்போது இயல்பாகவே அவர்களால் பொருளாதார அடுக்கில் உயர முடியும். மார்க்ஸ் கூறிய பொன்னுலகக் கனவான, உற்பத்தி சாதனங்கள் உற்பத்தியாளர்களின் உடைமையாக இருக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. சிந்தனையும், உழைப்பும் ஒன்றாகும் தருணம். ஆனால், பரமசிவத்திடம் இருக்கும் இந்த நில உரிமை தனது முன்னேற்றத்தை காவு கொள்ளும் என்ற காரணத்தினால் தான் வடக்கூரான் அந்நிலத்தை அபகரிக்க முயல்கிறார். பரமசிவம் எந்த சாதியில் இருந்தாலும், வடக்கூரான் இதைச் செய்திருப்பார் என்ற தொனியிலேயே நாவல் செல்வதால் தான் பூமணி இது தலித்துகளைப் பற்றிய நாவலல்ல என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.
இந்நாவல் முழுக்க வட்டார உரையாடலே நிரம்பியிருப்பதால், பயணிப்பதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. மாறாக செலம்பரத்தின் மன ஓட்டங்களில் வட்டார மொழி சற்றுக் குறைந்திருப்பது நாவலிலுள்ள பயணத்தோடு நம்மை முழுமையாக ஒன்ற வைக்கிறது. வெறும் வட்டார உரையாடலோடு நின்று விடாமல், பாத்திரங்களின் நுண் அவதானிப்பும், அவர்களுடைய கவிதை மனமும் ஆங்காங்கே பட்டுத் தெறிப்பது நாவலை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒளிந்திருக்கும் இடுகாட்டிலிருக்கும் சவக்குழிகளின் இடைவெளியை வைத்து, அந்த ஊரின் இறப்பு வேகத்தை மதிப்பிடுவது; மரங்களின் நிழலை, வெயிலில் குளித்த மரங்கள் களைந்துபோட்ட அழுக்காக சித்தரிப்பது என சிலவற்றை உதாரணமாக கூறமுடியும்.
பரமசிவம் என்ற அய்யா, தன் குடியினர் எப்போதும் அரிவாள், வெடிகுண்டு ( அவர்களே தயாரித்தது) ஆகியவற்றை சுமந்தலைவதற்கான காரணம் காவல்துறையினரின் பாரபட்சமான போக்குதான் காரணம் என்பது மாவோயிசத்தை நினைவு படுத்துகிறது. ஆனால், பதவி, பணம் என்ற வெளிச்சம் கிடைக்கும்போது தான், மனித மனங்களில் உறைந்திருக்கும் இருண்ட பக்கங்கள் நிழலாய் பிறருக்கும் தெரிய வருகின்றன. வடக்கூரானுக்கு கிடைத்த வாய்ப்பும், சொகுசும் பரமசிவத்திற்கு கிடைத்திருந்தால் காவல்துறையினரின் ஆயுதங்களைத் தமக்குச் சாதகமாக உபயோகிப்பாரா இல்லையா என்பதுதான் அவரை வடக்கூரானிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். ஏழைகள் நியாயமாய் நடந்து கொள்வது, அவர்களுடைய தேர்வல்ல (Don’t haves are honest, not by choice).ஆனால், பணக்காரர்கள் நியாயமாய் நடந்து கொள்வது அவர்கள் தேர்வு மட்டுமே என்று தோன்றுகிறது.
மேலும், பூமணி போன்றவர்கள் தங்களுடைய படைப்புகளை தலித் இலக்கியமாக முத்திரை குத்தப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், ராஜ்கௌதமன் போன்ற தமிழ் மார்க்சிய ஆய்வாளர்கள் சாதி பேதமின்றி ஒடுக்கப்படுபவர் அனைவரையும் தலித்துகள் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் காடு போன்ற நாவலை ஒரு தலித் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்கிறார். அந்த வகையில் ஜெயமோகனும் தலித்தான் என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கிய விருதைப் பெற்றபோது, விழா மேடையிலேயே சுட்டிக் காட்டினார் ராஜ்கௌதமன். பூமணியும் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்.
இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ்கௌதமன்.
1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை
2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை
3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை
4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.
பரமசிவம் குடும்பத்தினரின் செயல்பாடு கிட்டத்தட்ட நான்காவது வழிமுறையோடு ஒத்துப்போகிறது.
[…] https://muthusitharal.com/2019/10/12/வெக்கை-பற்றி/ […]
LikeLike
[…] https://muthusitharal.com/2019/10/12/வெக்கை-பற்றி/ […]
LikeLike