எழுத்தாளர் ஜெயமோகனின் சென்னை வெண்முரசு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் உயர்தத்துவங்களைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வகுப்பை நடத்திய ஆசிரியருக்கு 70 வயதுக்கு மேல்.
( குறிப்பு: வெண்முரசு எனபது ஜெமோ எழுதி வரும் மகாபாரத நாவல் வரிசையின் தொகுப்புப் பெயர்.)
மேலைநாட்டுத் தத்துவங்களுக்கும், இந்திய தத்துவங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அந்த மூன்று நாட்களும் அள்ளித் தெளித்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஒரு பெரும்திறப்பாக அமைந்தது.
உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், சற்றும் ஆர்வம் குறையாமல் 4 மணி நேரமும் ஈடுபாட்டோடு அவ்வகுப்புக்களை அவர் நடத்திய விதம் பிரமிக்க வைத்தது.
அகோர பசி கொண்டு கிடைத்ததையெல்லாம் உண்டு செரித்து தழலாய் எரியும் நெருப்பு இவர் போன்றவர்கள். ஆனால் பசி மட்டும் தீர்ந்தபாடில்லை இவர்களுக்கு.
“The Post” படத்தின் இயக்குநருக்கும் 74 வயது. இந்த வருட டிசம்பரில் வெளியாகும் ஸ்பீல்பெர்க்கினுடைய இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மெரில் ஸ்டிரீப் மற்றும் டாம் ஹேங்ஸ். இருவருமே 70களை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எது இவர்களை இயக்குகிறது, இந்த வயதிலும்? பணம்….புகழ்….உள்ளார்ந்த ஈடுபாடு?
இல்லை, தாங்கள் விரும்பும் தங்களுக்குத் தெரிந்த ஒன்றை திரும்பத் திரும்ப செய்வது இலகுவான ஒன்றென்பதாலா?
இவர்களைப் போன்றவர்கள், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அறிவின் எல்லை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இந்த விரிவடைதலின் போது ஏற்படும் சத்தங்கள் தான் அவர்களுடைய ஆக்கங்கள்.
ஜெமோ போன்ற எழுத்தாளர்கள் வெண்முரசாய் அதிர்வதற்கும் இதுதான் காரணம்.
தங்களையே எரியூட்டி, நெருப்பின் தழலை தக்கவைத்துக் கொள்பவர்கள் இந்த அறிவுஜீவிகள்.
இக்கலைஞர்கள் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவான கர்மகாண்டம்(செயல்கள் வழியாக கடவுளை உணர்தல்) என்றால், அந்த தத்துவ ஆசிரியர் அதன் இன்னொரு பிரிவான ஞானகாண்டம்(தூய ஞானத்தின் வழி கடவுளை உணர்தல்).