தண்ணீர் சலசலத்து ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. நம்மைப் போல் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கு. அக்கவலையின்மையே அவ்வோடையின் ஓட்டத்திற்கு ஒரு துள்ளலையும் நளினத்தையும் தருவதாக எண்ணத் தோன்றியது.
கிட்டத்தட்ட 3000 அடி உயரம் அலையில்லா கடல் மட்டத்திலிருந்து. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உடல் எனக்கு உணர்த்த ஆரம்பித்ததிருந்தது. சுற்றியுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் உறிஞ்சிக் கொண்டு தான் தண்ணீராக இவ்வோடை உருமாறியுள்ளதோ என விஞ்ஞானி போல சிந்தித்து கவிஞன்போல ஓடையின் துள்ளலை பொறாமையோடு ரசித்துக் கொண்டிருந்தேன்.
வாரவாரம் இப்படி எங்கேயாவது ஓடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான சமயம் சமவெளிகளில். சில நீண்ட வார இறுதி விடுமுறைகளில் இப்போது வந்துள்ள மாதிரி மலைப்பிரதேசங்களில்.
தன்னை உணர்ந்து கொள்ள தன் உடலுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதை எங்கோ கேட்டுணர்ந்து ஓட்டத்தை தேர்நதெடுத்திருந்தேன். வேறு எந்தவிதமான உடலுழைப்புக்கும் வழியில்லாத மேல்தட்டு வாழ்க்கையால்.
ஆனால் இவ்வோட்டத்தால் கண்டடைந்தவைக்கு குறைவே இல்லை. கண்ட தீனிகளால் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒட்டு மொத்த ஆற்றலையும் இழந்து, உடலின் பெரும்பாலான தசைகளும் வழுவிழந்து தன் இயக்கத்தை நிறுத்தி, நா உலர்ந்து ஒரு சொட்டு தண்ணீரால் மீண்டும் உயிர்த்தெழும் விவரிக்கமுடியாத பரவசமூட்டும் அசௌகரிய நிலை அது.
இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான். ஓடையை கட்டியணைத்து உறிஞ்சிக் கொள்ள விழையும் ஒரு தாகம். கொண்டு சென்ற எந்த உயர்தர கலன்கலாலும் அவ்வோடையின் தண்ணீரை முகந்து குடிக்க அத்தாகம் அனுமதிப்பதில்லை.
தன் கையாலே முகந்து வாய் குவித்து அத்தண்ணீரை அருந்தும்போது தாகம் மட்டும் தீர்ந்து போவதில்லை. நானும் தண்ணீரும் சேர்ந்து தீர்ந்து போகிறோம். தாகம், தண்ணீர், நான் என அனைத்தும் தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் போல கரைந்து ஒன்றாகிப்போகிறோம்.
நான் ஓடுவதை நிறுத்தப் போவதில்லை, என் உடலை அது எவ்வளவு பிழிந்தாலும்.
இப்பதிவு ஓடும் என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.