ஜுவாலையே இல்லாமல் சுட்டெரிக்கும் நெருப்பாய் வெயில் மாலை நேரத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. (சென்னையின் கோடைக்கு காலையும் மாலையும் ஒன்று தான்). சில்லென்று வருடிச் செல்லும் காற்று ஒரு வரமென்றால், அதைவிட வரம் சில்லென்ற ஒரு Beer . இவ்விரண்டையும் வேண்டி நகரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த music barல் தஞ்சமடைந்தேன்.
வழக்கம்போல் இருள் கவிழ்ந்திருந்தது barன் உள்ளே. ஆங்காங்கே சக்தி குறைந்த விளக்குகள் மெல்லிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. பல மெல்லிய பேச்சுக் குரல்கள் ஒன்றினைந்து வல்லிய உளறல்களாக கேட்டுக் கொண்டிருந்தன. வாரத்தின் நடுநாள் என்றாலும், நிறைய மனிதத் தலைகள் கடலலை போல் அசைந்து கொண்டிருந்தன. எனக்கான இருக்கைக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று அமர வைத்தார் கனவான் போல உடையணிந்திருந்த அந்த சிப்பந்தி.
என்ன வேண்டுமென்று அவர் கேட்க வாய் திறக்கும் முன்னரே எனக்கான beerஐ கொண்டு வரச்சொல்லி காத்திருந்தேன். இருவர் மட்டுமே அமரக்கூடிய மேஜை, நிலக்கடலை மற்றும் வெள்ளரியால் நிரப்பப்பட்டிருந்தது. அவற்றைக் கொரித்தவாறே மீண்டும் சுற்றியிருப்பவர்களை நோட்டமிட்டேன்.
தன்னிலை மறந்த மிக சுவாரஸ்யமான உரையாடலில் திளைத்திருந்தார்கள் அனைவரும். மகிழ்ச்சியாக, சோகமாக, கோபமாக என அத்தனை உணர்ச்சி கலந்த முகங்களால் அந்த விசாலமான அறை உயிர்ப்போடு நிறைந்திருந்தது. இதையெப்படி கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற குழப்ப முகத்தோடு நானும் என் பங்குக்கு அவ்வறையை உயிர்பித்திருந்தேன்.
ஓடிக் கொண்டிருந்த குளிரூட்டி அங்கிருந்த வெப்பத்தை தொடர்ச்சியாக உறிந்து வெளியே துப்பிக்கொண்டிருந்ததால், எதிர்பார்த்தபடியே குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. முகத்தில் புன்னகை ததும்ப, கோப்பையில் நுரை ததும்ப beerஐ கொண்டுவந்தார் சிப்பந்தி. எடுத்துப் பருகியதுமே சில்லென்றிருந்தது.
இரண்டும் இருந்தும் இன்னும் உள்ளிருக்கும் நெருப்பு அணைய மறுக்கிறது. குளிர் காற்றும், சில் Beerம் தொடர்ச்சியாக தேவைப்பட்டுக் கொண்டே இருந்தன. இவ்விரண்டோடு, அவ்வப்போது நான் மெனக்கெடாமலே என் காதில் நுழைந்த சுவாரஸ்யமான பக்கத்து மேஜை உரையாடல்களும் (மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் அலுவலகப் புரணிகள்) சேர்ந்து அனைத்து வெம்மையையும் அவ்வப்போது தணித்தது.
ஆனால், அணைவதைப்போல் அணைந்து திடீரென அலறும் குழந்தை போல , இன்னும் நெருப்பின் வெம்மை உள்ளே இருந்து கொண்டு தான் இருந்தது.
திடீரென ஏற்கனவே மங்கியிருந்ந விளக்குகள் மேலும் மங்க ஆரம்பித்தன.அங்கிருந்த அனைவரின் உரையாடல்களும் அத்தருணத்திற்காகவே காத்திருந்தது போல மெல்ல மெல்ல குறைந்து கரைந்து இல்லாமலாகி அறை நிசப்தமாகியிருந்தது.
சிறிது நேர ஆழ்ந்த அமைதிக்குப் பிறகு, உரத்த குரலில் ஒருவர் பின்வரும் பாடலின் முன்வரிகளை (என்னவென்று சரியாக ஞாபகமில்லை) பாட ஆரம்பிக்கிறார். அதைத் தொடர்ந்து முகமதுரஃபி போன்ற மெல்லிய குரல் பின்வரும் வரிகளைப் பாட ஆரம்பித்தது.
*ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
ஓராயிரம் பார்வையிலே…*
மெல்ல மெல்ல காற்று மற்றும் Beerன் தேவை குறைந்து கொண்டே போனது. பாடல் முடியும் தருவாயில், உள்ளே நெருப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் குளிரடிப்பதைப் போல இருந்தது.
Music is a Game changer!!!
மூளையின் மடிப்புகளுக்கிடையே புதைவுண்டிருக்கும் சிலவற்றை வருடிச்செல்லும் ஆற்றல், இசைக்கு உண்டு.
இப்பாடல் வருடிச்சென்றது என் Professor (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு) தன் மனைவி மேல் கொண்ட காதலை இப்பாடலின் வழி வெளிப்படுத்திய விதத்தை.