வர்க்கம், சாதி, சமூகநீதி என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவற்றை என்னுடைய இது நாள் வரை வாசிப்பின் வழியாக தெளிவு படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவு. உங்களை குழப்பி தெளிவு பெறும் முயற்சியல்ல இது.
வர்க்கங்களாக சமநிலையில் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எவ்வாறு வெவ்வேறு சாதிகளாக பிரிந்தார்கள் அல்லது உருமாறினார்கள் என்பதை முதன்முதலாக ஆக்கப்பூர்வமாக ஆராய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதின் விழைவு தான் சாதி என்பதன் தோற்றுவாய் என்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமை – வர்க்கங்கள்
வர்க்கங்களாக (புரோகிதர், சத்ரியர், வைசியர், சூத்திரர்) ஒன்றுபட்டிருந்த சமூகத்தில் பிரிவினை என்றொன்று இருந்திருக்கவில்லை. அதாவது, ஒரு வர்க்கத்திலிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு செல்வதற்கு தடைகளேதுமில்லை. அவரவர் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப எந்த வர்க்கத்திலுமிருக்கலாம்.
சூத்திரருக்குப் பிறந்தவர் புரோகிதர் ஆகலாம். சத்ரியருக்குப் பிறந்தவர் வைசியராகலாம். அதாவது பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் தொழில் அல்லது வர்க்கம் நிர்ணயிக்கப்படுவதில்லை. வேதம், வீரம், வணிகத்திறன் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்குரிய திறன் என அனைத்தும் பொதுவில் இருந்தன. வேதத்தை புரோகிதர்கள் மட்டுமோ, வீரத்தை சத்ரியர்கள் மட்டுமோ சொந்தம் கொண்டாட தேவையொன்றும் இல்லாததாகவே வர்க்கங்களின் காலகட்டம் இருந்தது.
வர்க்கங்களின் சிதைவு
தன்னுடைய கதவுகளனைத்தையும் திறந்தே வைத்திருந்த வர்க்கங்கள் அதை மெல்ல மெல்ல மூட ஆரம்பித்து பிற வர்க்கங்களுடன் கலவாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். இதை வளர்சிதை மாற்றம் என்பதா? இல்லை சமூகம் உருக்குலைந்து போவதற்கான மாற்றம் எனபதா?
ஒரு வர்க்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து வாசல்களும் இறுக மூடப்பட்ட பின் மிக ஜாக்கிரதையாக சாதி என்னும் பூட்டால் அக்கதவுகளை பூட்டிக்கொணடார்கள். இப்படி தனக்குள் சென்று கதவடைத்துக் கொண்ட வர்க்கங்கள் தான் தங்களுடைய தனித்தன்மையை பேணிக்காத்துக்கொள்ள சாதி என்ற பூட்டை உருவாக்கின என்கிறார் அம்பேத்கர்.
இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இதை ஏதாவது ஒரு வர்க்கம் தான் தொடங்கியிருக்க வேண்டும். அதனால் அவ்வர்க்கத்தினருக்கு கிடைத்த பலன்களை கண்கூடாக கண்ட பிற வர்க்கத்தினரும் அதைப் பார்த்தொழுகியிருக்கவேண்டும் (பின்பற்றியிருக்க வேண்டும்) என்பது தான் அம்பேத்கரின் கணிப்பு.
இந்த சாதியை தொடங்கிய முதல் வர்க்கமாக அவர் சுட்டிக் காட்டுவது புரோகித வர்க்கத்தை. ஆனால் மற்ற வர்க்கங்களின் மேல் அதை ஒருபோதும் அவர்கள் திணிக்கவில்லை என்கிறார். அதற்கான ஆற்றலும் அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தன் வர்க்கத்தினரின் நலம் காக்கும் பொருட்டு அவ்வர்கத்தினைச் சேர்ந்த சில புத்திசாலிகள் கண்டடைந்த ஒரு முட்டாள்தனம் தான் சாதி என்ற கண்டுபிடிப்பு.
இந்த சாதி எனும் பூட்டின் திறவுகோள் தன் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அப்புத்திசாலிகள் கண்டுபிடித்தது தான் உடன்கட்டை ஏறுதல் எனும் சதி, கட்டாய விதவைக்கோலம்,அபலை அல்லது குழந்தைத் திருமணம் எல்லாம். கிட்டத்தட்ட தன் சொந்த வர்க்கத்தினரையே இந்த கட்டுப்பாடுகள் மூலம் வதைக்கத்தான் செய்தார்கள் இந்த அதிபுத்திசாலிகள்.
இந்த மரபின் நீட்சிதான் இன்று நாம் காணும் நவீன சாதியுகம். சாதிக் கட்டுப்பாடுகளான சதி, விதவைக் கோலம் மற்றும் அபலைத் திருமணம் இன்று ஒழிந்து விட்டது. ஆனால் சாதி மட்டும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.
*ஏன் சாதி*
இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன்.
தொடரும்…..
தொடர்ச்சி
https://muthusitharal.wordpress.com/2017/11/14/சாதி-வர்க்கம்-நீட்டு-பகு/?preview=true
[…] குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பக… ) , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய […]
LikeLike
[…] குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பக… ) , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய […]
LikeLike