பெண்ணியம் எனும் மேட்டிமைவாதம்

images (4)

 

நள்ளிரவு கடந்து கொண்டிருந்தது. நிலவொளி மங்கி அந்த மொட்டை மாடியைத் தழுவியிருந்தது. கோடை இரவாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து வரும் மெல்லிய காற்று இருவரின் வியர்வையையும் அடக்கியிருந்தது.

 

நடுவே சிறு வட்ட வடிவிலான மேஜை. எதிரெதிராக இரு நாற்காலிகள். மேஜையில் இரண்டு மூன்று தமிழ் நாவல்கள். திஜாவின் மரப்பசு, இபாவின் வேர்ப்பற்று மற்றும் ஜெமோவின் இரவுஅப்போ அந்த நாற்காலியில்

 

நீங்கள் ஊகித்தது சரிதான். இரண்டு எழுத்தாள அறிவுஜீவிகள் தான் அங்கே ஒரு சுவாரஸ்யமான விவாதத்தில் இருந்தார்கள்.

 

ஒருவர் பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர். மற்றொருவர் அவருடைய ஆண் எழுத்தாள நண்பர்.

 

வழக்கம்போல் எது பெண்ணியம் என்று பெண் எழுத்தாளர் தான் படித்த அனைத்துப் புத்தகங்களின் கடைசி வரி வரைத் திரட்டி நிறுவிக்கொண்டிருந்தார்.

 

மொட்டைமாடியின் கதவை மெதுவாகத் தான் திறந்து கொண்டு எழுத்தாளரின் மனைவி வந்தாலும், பழைய கதவுகிரீச்…” என அவர்களின் விவாதத்தை துண்டித்து அணைத்தது.

 

சட்டென சுயபிரஞ்கை வந்தவர் போல மணிக்கட்டு வழியாக நள்ளிரவு கடந்து விட்டதை உணர்ந்தார், எழுத்தாள நண்பர்.

 

மனைவி  “எக்ஸ்கியூஸ் அஸ்என்று சொல்லி விட்டு, கணவனை மட்டும் அழைத்துக் கொண்டு கீழே உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்றாள்.

 

சிறிது நேரம் கழித்து எழுத்தாள நண்பர் மட்டும் மாடிக்கு திரும்பி வந்து கிளம்பலாம் என்றார். நிலவொளி இன்னும் மங்கியிருந்தது.

 

என்ன? நேரம் கெட்ட நேரம் என்கிறாரா உங்கள் மனைவி” , என்றார் சற்று அலட்சியத்தோடு.

 

இல்லை.  உன்னை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வரச்சொன்னாள். உனக்கு அசௌகரியம் இல்லை எனில் என்னையும் உன்னுடனேயே உன் வீட்டில் தங்கி விட்டு காலையில் வா என்றாள்“, என்றார் புன்னகையுடன்.

 

மேலும் , நீ எங்களுடன் இவ்விரவு தங்க விரும்பினாலும் அவளுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை என்றாள்“, என்றார் தோளை உழுக்கிய படி.

 

எழுத்தாளனின் தோழி என்ன முடிவெடுப்பதென்று அறியாமல், அதாவது தான் எடுத்திருந்த முடிவான என்னை என் வீட்டில் விட்டு விட்டு நீ கிளம்பிடு என்பதை சொல்லமுடியாமல் திணறினாள்.

 

அப்பெண் எழுத்தாளரின் பெண்ணிய பிம்பம் உடைந்து மாடி முழுவதும் சிதறியிருந்தது. மங்கலான நிலவொளியையும் அச்சிதறல்கள் அணைத்து மாடியை முற்றிலும் இருளாக்கியிருந்தன.

 

அச்சிதறல்களை, தட்டுத்தடுமாறியபடி, ஒவ்வொன்றாக மனதில் பொறுக்கியவாறு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

 

வீட்டை அடைந்து, நண்பருக்கு   விடை கொடுத்துவிட்டு  நிதானமாக தன் அறை நோக்கி நடந்தாள்.

 

மனதில் பொறுக்கிய அச்சிதறல்கள் ஒரு ஒழுங்கமவை அடைந்திருப்பதை உணர்ந்தாள்.  எவ்வொரு ஒளியும் இல்லாமலே, அவ்வொழுங்கமைவு பிரகாசிப்பதை உள்ளுணர்ந்தாள்.
பெண்ணியம் என்றால் என்ன என்று புலப்படத் தொடங்கியது. தான் கொண்டிருந்த பெண்ணிய பிம்பத்தை உடைத்து மறுவார்ப்பெடுத்த நண்பனின் மனைவிக்கு மானசீகமாய் நன்றி கூறிக்கொண்டாள்.

Advertisements

வேதங்கள் யாருக்குரியது?

images (2)

images (3)

http://www.jeyamohan.in/102895#.WgB4mctX7R4

தலித் அர்ச்சகர்களுக்கு வேதசாஸ்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற பொதுப்புத்தியிலுள்ள குறைபாட்டை சரி செய்திருக்கிறது ஜெமோவின் இந்த கட்டுரை.

 

அம்பேத்கருக்கும், நாராயணகுருவுக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை. இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்கள் சொந்தமாக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும் வலிந்து விரும்பி கற்றறிந்த மேதைகள்.

 

எளியவர்களை அடிமைப்படுத்தவே சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன எனபதை நன்குணர்ந்தவரகள் இவ்விருவரும்.

 

பிராமணப் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவர் புரோகிதராகி விடக்கூடாதென்பதிலும், வேதங்களை கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே புரோகிதராக வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தவர்கள் இவ்விருவரும்.

 

ஆனால் வெறுப்பின் உச்சமாக, சாஸ்திரங்கள் உடைத்தெரியப்பட்டாலே இந்து சமூகங்களில் சாதி ஒழிந்து சமூகநீதி நிலைநாட்டப்பட முடியுமென்று இந்து மதத்தை விட்டே வெளியேறினார் அம்பேத்கர். காலம் செய்த கோலமிது. இந்து மதத்தை வெறும் சடங்குகளாக குறுக்கிய சில புரோகிதக் கூட்டங்களைப் போலவே இவரும் கணநேரத்தில் சறுக்கிப் போனார். அறிவுஜீவிகளுக்கே உரிய சறுக்கலிது.

 

மாறாக நாராயணகுரு, வேதங்களும் சாஸ்திரங்களும் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியாதென்ற உண்மையை உணர்ந்திருந்தார். தொடர்ந்து அதைக் கற்று, சடங்குகள் மட்டுமே இந்து மதமில்லை என ஒரு புரிந்துணர்வுக்கு வந்ததின் விளைவே இன்று நாம் கேரளத்தில் காணும் நாராயணகுரு மரபு. அதன் விளைவே இன்று பிராமணல்லாதவரும் அர்ச்சகர்கள் ஆகியிருப்பது என தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது இக்கட்டுரை.
குறிப்பு: நாராயணகுரு கேரளாவில் உள்ள ஈழவர் சாதியை சேர்ந்தவர். நான்கு தலைமுறைகளாக அவரினத்தவர் வேத சாஸ்திரங்களை கற்று வருகிறார்கள்.

உடலைப் பிழியும் ஓட்டம்

images (1)

 

தண்ணீர் சலசலத்து ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. நம்மைப் போல் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கு. அக்கவலையின்மையே அவ்வோடையின் ஓட்டத்திற்கு ஒரு துள்ளலையும் நளினத்தையும் தருவதாக எண்ணத் தோன்றியது.

 

கிட்டத்தட்ட  3000 அடி உயரம் அலையில்லா கடல் மட்டத்திலிருந்து. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உடல் எனக்கு உணர்த்த ஆரம்பித்ததிருந்தது.  சுற்றியுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் உறிஞ்சிக் கொண்டு தான் தண்ணீராக இவ்வோடை உருமாறியுள்ளதோ என விஞ்ஞானி போல சிந்தித்து கவிஞன்போல ஓடையின் துள்ளலை பொறாமையோடு ரசித்துக் கொண்டிருந்தேன்.

 

வாரவாரம் இப்படி எங்கேயாவது ஓடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான சமயம் சமவெளிகளில். சில நீண்ட வார இறுதி விடுமுறைகளில் இப்போது வந்துள்ள மாதிரி மலைப்பிரதேசங்களில்.

 

தன்னை உணர்ந்து கொள்ள தன் உடலுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதை எங்கோ கேட்டுணர்ந்து ஓட்டத்தை தேர்நதெடுத்திருந்தேன். வேறு எந்தவிதமான உடலுழைப்புக்கும் வழியில்லாத மேல்தட்டு வாழ்க்கையால்.

 

ஆனால் இவ்வோட்டத்தால் கண்டடைந்தவைக்கு குறைவே இல்லை. கண்ட தீனிகளால் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒட்டு மொத்த ஆற்றலையும் இழந்து, உடலின் பெரும்பாலான தசைகளும் வழுவிழந்து தன் இயக்கத்தை நிறுத்தி, நா உலர்ந்து ஒரு சொட்டு தண்ணீரால் மீண்டும் உயிர்த்தெழும் விவரிக்கமுடியாத பரவசமூட்டும் அசௌகரிய நிலை அது.

 

இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான். ஓடையை கட்டியணைத்து உறிஞ்சிக் கொள்ள விழையும் ஒரு தாகம். கொண்டு சென்ற எந்த உயர்தர கலன்கலாலும் அவ்வோடையின் தண்ணீரை  முகந்து குடிக்க அத்தாகம் அனுமதிப்பதில்லை.

 

தன் கையாலே முகந்து வாய் குவித்து அத்தண்ணீரை அருந்தும்போது தாகம் மட்டும் தீர்ந்து போவதில்லை. நானும் தண்ணீரும் சேர்ந்து தீர்ந்து போகிறோம். தாகம், தண்ணீர், நான் என அனைத்தும் தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் போல கரைந்து ஒன்றாகிப்போகிறோம்.

 

நான் ஓடுவதை நிறுத்தப் போவதில்லை, என் உடலை அது எவ்வளவு பிழிந்தாலும்.
இப்பதிவு  ஓடும் என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

 

சொற்களும் பொருள்களும்

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான ‘பெரியம்மாவின் சொற்கள்’ ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது.

http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4

மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன.

images1181364170.jpg

ஜெமோ,

        “பெரியம்மாவின் சொற்கள்”,  வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம்.

என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன.

உங்களை வாசிக்கும் போதெல்லாம் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

அன்புடன்

முத்து

சொற்களும் பொருள்களும்

நாய் நன்றியுள்ளது. இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?

‘Dog is thankful?’ Or ‘Dog is kind’?

கடவுள் பக்தர்களுக்கு அளிப்பது அருள் என்றால், போலிஸ்காரர் பிடிபட்டு அடிபட்ட திருடனுக்கு தண்ணீர் அளிப்பது இரக்கம்.

‘Policeman is mercy’ என்றால், கடவுள் is?

இந்த சொற்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? பொருள் மட்டும் செயல்களில் இருந்தா?

அல்லது சொற்கள் தான் பொருட்களையும், செயலையும் உருவாக்கியதா?

எது முந்தியது? சொல் அல்லது கருத்தா?. இல்லை பொருளா?

கருத்துதான் முதலில் என்றும்  அதிலிருந்துதான் இவ்வுலகம் நம்மால் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது  மதம்.   இது கருத்துமுதல்வாதக் கொள்கை.

பொருள்தான் முதலில் என்றும் அதிலிருந்துதான் கருத்துக்கள் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது மார்க்ஸியம். இது பொருள்முதல்வாதக்கொள்கை.

முதல்வகை ஆத்திகம் என்றால், பின்னது நாத்திகம்.

கோழியிலிருந்து முட்டையா? இல்லை முட்டையிலிருந்து கோழியா? என இது கடைசிவரை நேர்கோட்டில் சிந்திக்கும் நம்மால் அறிந்து கொள்ள முடியாததோ?

தொடர்ச்சி….

சொற்கள் எனும் வேரிலிருந்து விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது இப்பிரபஞ்சம் எனும் தோற்றம்.

எந்த விதையைப் பிளந்து கொண்டு இந்த சொற்கள் வேர்முளைத்து மரமாயின. இப்பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் உறைய வைத்திருந்த அந்த விதையின் சமநிலையைக் குலைத்தது யார்? தன்னை விரித்துப் பெருக்கிக் கொள்ளத் தூண்டியது எது?

விதையின் தன்முனைப்பா இல்லை பெருவெடிப்பா இல்லை இறைசக்தியா?

வெள்ளையாய் இருந்ததை கருப்பாக்கிக் கொண்ட தன்முனைப்பும், அதை மீண்டும் வெள்ளையாக்கிக் கொள்ள நினைக்கும் தன் உணர்வும் எங்கிருந்து வருகின்றன? .

தன்முனைப்பு செயலூக்கம். தன் உணர்வு செயலின்மை.

விதையிலிருந்து தன்முனைப்போடு வளர்ந்து பரவி விரிந்து செழித்து மரமாகி; தன் சாரத்தை செறிவான பழமாக்கி, திடீரென தன் உணர்வு கொண்டு தன்னுள்ளே பார்க்கும் போது “நான் தான் நீ” என்று பழத்தின் உள்ளிருக்கும் விதை சிரிக்கிறது.

 இதைத்தான் “அகம் பிரம்மாஸ்மி” என்கிறார் இந்து மதத்தைச் சேர்ந்த அத்வைதத்தைத் தோற்றுவித்த ஆதிசங்கரர். இதைத்தான் இஸ்லாமும், கிறிஸ்துவமும், பௌத்தமும் இந்த உலகத்தில் இன்னும் தோன்றாத மதங்களும் சொல்கின்றன.

1. “ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்”…இங்குள்ள அனைத்தும் ஒன்றே

2. “தத்துவமஸி”…நீயும் அந்த ஒன்றே

3.”அகம் பிரம்மாஸ்மி”…முதல் இரண்டையும் நீ உணரும் தருணம்.

 

அறிவுஜீவிகளின் சத்தம்

எழுத்தாளர் ஜெயமோகனின் சென்னை வெண்முரசு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம்  உயர்தத்துவங்களைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வகுப்பை நடத்திய ஆசிரியருக்கு 70 வயதுக்கு மேல்.

( குறிப்பு: வெண்முரசு எனபது ஜெமோ எழுதி வரும் மகாபாரத நாவல் வரிசையின் தொகுப்புப் பெயர்.)

மேலைநாட்டுத் தத்துவங்களுக்கும், இந்திய தத்துவங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அந்த மூன்று நாட்களும் அள்ளித் தெளித்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஒரு பெரும்திறப்பாக அமைந்தது.

உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், சற்றும் ஆர்வம் குறையாமல் 4 மணி நேரமும் ஈடுபாட்டோடு அவ்வகுப்புக்களை அவர் நடத்திய விதம் பிரமிக்க வைத்தது.

அகோர பசி கொண்டு கிடைத்ததையெல்லாம் உண்டு செரித்து  தழலாய் எரியும் நெருப்பு இவர் போன்றவர்கள். ஆனால் பசி மட்டும் தீர்ந்தபாடில்லை இவர்களுக்கு.

“The Post” படத்தின்  இயக்குநருக்கும் 74 வயது. இந்த வருட  டிசம்பரில் வெளியாகும் ஸ்பீல்பெர்க்கினுடைய இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மெரில் ஸ்டிரீப் மற்றும் டாம் ஹேங்ஸ். இருவருமே 70களை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எது இவர்களை இயக்குகிறது, இந்த வயதிலும்? பணம்….புகழ்….உள்ளார்ந்த ஈடுபாடு?

இல்லை, தாங்கள் விரும்பும் தங்களுக்குத் தெரிந்த ஒன்றை திரும்பத் திரும்ப செய்வது இலகுவான ஒன்றென்பதாலா?

இவர்களைப் போன்றவர்கள், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அறிவின் எல்லை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இந்த விரிவடைதலின் போது ஏற்படும் சத்தங்கள் தான் அவர்களுடைய ஆக்கங்கள்.

ஜெமோ போன்ற எழுத்தாளர்கள் வெண்முரசாய் அதிர்வதற்கும் இதுதான் காரணம்.

தங்களையே எரியூட்டி, நெருப்பின் தழலை தக்கவைத்துக் கொள்பவர்கள் இந்த அறிவுஜீவிகள்.

இக்கலைஞர்கள் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவான கர்மகாண்டம்(செயல்கள் வழியாக கடவுளை உணர்தல்) என்றால், அந்த தத்துவ ஆசிரியர் அதன் இன்னொரு பிரிவான ஞானகாண்டம்(தூய ஞானத்தின் வழி கடவுளை உணர்தல்).

பொற்காலம் 20

https://cinema.vikatan.com/tamil-cinema/news/106297-20-years-of-porkkaalam-movie-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

images

மனதை விட்டு அகலாத காலம், இந்த பொற்காலம். இப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் இப்போது நினைத்தாலும்  எடை மிகுந்து மனம் கனத்து நகர முடியாமல் ஒரே இடத்தில் நம்மை உறையச் செய்கிறது.

தன் உடலூனத்தால் அண்ணனுக்கு பாரமாயிருக்கிறோமே என்ற மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள ஒரு தனிமை வேண்டி களிமண் பானைகளைச் சுடும் சூளையில் தஞ்சமடைகிறாள் அந்த வாய் பேசமுடியாத தங்கை.

இதையறியாமல், வழக்கம்போல் அச்சூளைக்கு எரியிடுகிறான் அண்ணன் முரளி. சிறிது நேரத்தில் சூளையின் வெம்மையை உணர்ந்து திடுக்கிட்டு வெளியேற நினைக்கும் அவள், கணநேரத்தில் மனம் மாறி அதை தனக்கு கடவுள் காட்டிய வழியாக நினைத்து சூளையின் வெம்மையை உறிந்து சாம்பலாகிப் போகிறாள். அவளும், அவள் அண்ணனும் சேர்ந்து செய்த பானைகள் அதே வெம்மையை உறிந்து உயிர்பெறுகின்றன அச்சூளையில்.

அச்சூளையின் வெம்மையை நமக்கும் கடத்தி நம்மை துடிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சேரன்.

எளியவர்களிடையே உள்ள தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு தான், அவர்கள் தன்னைக் காப்பாற்ற கூடியவர்கள் இன்னொரு எளியவனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.  இதைத்

தான் கூடவே இருக்கும் வடிவேலு போன்ற எளியவர்களை தான் இது நாள் வரை பொருட்படுத்தாமல் இருப்பதை முரளி உணரும் போது கண்டடைகிறார். மிக நுட்பமான உளவியல் சித்தரிப்பு இக்காட்சி.

இந்தப் புரிதல் உச்சத்தை எட்டுவது அவர் தங்கையின் மரணத்தில் தான். வடிவேலுவின் வழியே தன் தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தவர், தன் தங்கையின் மரணம் வழியே தன் சுயநலத்தையும் உணர்கிறார்.

இப்புரிதலின் வெளிப்பாடாகத் தான்  மாற்றுத்திறனாளிப் பெண்ணை மணக்கிறார்.

இது  பரிதாபத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. கற்காலத்திலிருந்த முரளியின் மனம் பொற்காலத்தில் நுழைந்ததின் வெளிப்பாடு தான் இந்த முடிவு.

சேரனின் பொற்காலமும் இந்த பொற்காலம் தான்.

நினைவு கூர்ந்த விகடனுக்கு நன்றி.